கிறிஸ்டி நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஓவியம் ஒன்று 4,32,000 லட்சம் டாலர்களுக்கு விலை போயுள்ளது. இதைவிட அதிக விலைக்கு விற்ற ஓவியங்கள் எல்லாம் இருக்கின்றன. என்றாலும், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இது ஓவியர் தீட்டியது அல்ல என்பதுதான். மாறாக, இந்த ஓவியம் ஏ.ஐ. எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தீட்டிய ஓவியம்.
இதை ஏலத்துக்குக் கொண்டுவந்த நிறுவனம் எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்கு இந்த ஓவியம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த கலைக்கூடமான ஆப்வியஸ் சார்பில், போர்ட்ரெய்ட் ஆப் எட்மண்ட் பெலாமி எனும் பெயரில் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட அல்காரிதம், 14-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டுவரை தீட்டப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களின் தரவுகளை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இந்த ஓவியத்தைத் தீட்டியுள்ளது. ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு ஓவியம் இதுதான். வருங்காலத்தில் கலைப்படைப்புச் சந்தையில் தாக்கம் செலுத்தக்கூடிய தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவும் ஒன்றாக இருக்கலாம்.
ஆக, படைப்புத் துறையிலும் அல்காரிதம்கள் வெற்றிகரமாக நுழையத் தொடங்கிவிட்டன.