வங்கதேசத்தின் எதேச்சாதிகாரி ஆகிறாரா ஷேக் ஹசீனா?

மக்கள்தொகையில் உலகின் எட்டாவது பெரிய நாடான வங்கதேசம், மிகக் குறைந்த வளர்ச்சிபெற்ற நாடுகளின் பட்டியலிலிருந்து நீங்கிவிட்டது. ‘நடுத்தர வருவாயுள்ள நாடு’ என்ற நிலைக்கு உயர்கிறது. அடித்தளக் கட்டமைப்புகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் உலகின் முன்னணி நாடாகிவிட்டது. இவ்வளவும் 2009-ல் பதவிக்கு வந்தது முதல் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசின் சாதனைகள்.

மியான்மரிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குப் புகலிடம் கொடுத்ததற்காக உலகம் அவரைப் பாராட்டுகிறது. மதத் தீவிரவாதம் பரவாமல் தடுப்பதற்காக மேற்குலகு பாராட்டுகிறது. வட கிழக்கில் தீவிரவாதிகளின் முகாம்களை அகற்றியதற்காக இந்தியா பாராட்டுகிறது.

இன்னொருபக்கம், சுயேச்சையாகச் செயல்படும் நிலையிலிருந்து, எதேச்சாதிகாரத்துடன் செயல்படுபவராக மாறிவிட்டார் ஹசீனா. அவரது ஆட்சியை விமர்சிப்பதே தேசத் துரோகக் குற்றமாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றம், நீதித் துறை, அதிகாரவர்க்கம் எல்லாமே ரப்பர்ஸ்டாம்புகள் ஆகிவிட்டன. பிரதமரின் மகன் சஜீப் வாசத் ஜாய் அமெரிக்காவிலிருந்து வந்து அரசு ஆலோசகராகச் செயல்படுகிறார். அவாமி லீக் கட்சி அவருடைய சொத்தாகிவிட்டது. வாரிசு அரசியல் அரங்கேறுகிறது. அப்பா, மகள், பேரன் புகைப்படங்களுடன் விளம்பரப் பதாகைகள் எங்கும் காணப்படுகின்றன.

நெருங்குகிறது தேர்தல்

இந்நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்துக்கு டிசம்பர்  30-ல் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஹசீனாவும் அவருடைய அவாமி லீக் கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்குப் பிறகு எதிர்க் கட்சிகள் அரசுக்கு எதிராகச் செயல்படுவதென்றால் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் போராட்டங்களில் ஈடுபடுவதுதான் என்று தோன்றுகிறது.

பத்திரிகைகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்துவிடாமலிருக்க கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் ‘டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டம்’ என்ற கருத்துரிமைக் கட்டுப்பாடு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. ‘தி டெய்லி ஸ்டார்’ செய்தித்தாளின் ஆசிரியர் மபுஸ் ஆனம் மீது அவதூறு, தேசத்துரோக வழக்குகள் 12-க்கும் மேல் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வீதிகளில் அரசுக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் மீது அவாமி லீக் கட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை நேரலையாக ஒளிபரப்பியதற்காக புகைப்படக் கலைஞர் ஷகிதுல் ஆலம் நூறு நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறார்.

எதிர்ப்புக்கு இடமில்லை

ஹசீனாவின் அரசியல் ஆளுமை, நோக்கங்கள், புவிசார் அரசியல் சார்பு ஆகியவற்றுக்கெல்லாம் காரணம் 1975-ல் அவருடைய தந்தை முஜிபுர் ரெஹ்மானும் தாயும் சகோதரர்களும் இதர குடும்ப உறுப்பினர்களும் திடீர் ராணுவப் புரட்சியில் படுகொலை செய்யப்பட்டதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முஜிபுர் ரெஹ்மான் குடும்பத்தில் எஞ்சிய இரு சகோதரிகள் ஷேக் ஹசீனா, ஷேக் ரெஹானா ஆகியோருக்கு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அரசியல் அடைக்கலம் கொடுத்தார். அதனாலேயே புதுடெல்லிக்கு நெருக்கமாக இருக்கிறார்.

சுமார் இருபதாண்டுகளாக, வங்கதேச அரசியல் என்பது அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா, வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவர் பேகம் காலிதா ஜியா இடையிலான தனிப்பட்ட மோதலாகவே தொடர்கிறது. 2014 பொதுத் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவை காலிதா ஜியா எடுத்த பிறகு, ஹசீனாவால் எளிதில் காலூன்ற முடிந்தது. இப்போது வங்கதேசம் கிட்டத்தட்ட அவாமி லீக் என்ற ஒரு கட்சி ஆட்சியின் கீழ் இருக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்த காலிதா லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறையில் இருக்கிறார். சிறைத் தண்டனையும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அரசை எதிர்ப்பவர்கள் திடீரெனக் காணாமல் போவதும், போலி மோதல்களில் உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது. ராணுவ ஆட்சியில்கூட இருந்திராத வகையில் ராணுவ உளவுப்பிரிவு போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அரசுடனும் ஆளும் கட்சியுடனும் இணக்கமாக இல்லாத அமைப்புகளும் தனி நபர்களும் ஜமாதி, ரசாக்கர்களின் கூட்டாளிகள், மேற்கத்திய மேட்டுக்குடிகள், தாகூரர்கள், பாகிஸ்தானி உளவாளிகள், மொசாத் ஒற்றர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகின்றனர்.

மக்கள் கிளர்ச்சி

மதப் பழமைவாதத்தை எதிர்ப்பவர் என்று ஹசீனா சர்வதேச அரங்கில் காட்டப்படுகிறார். ஆனால், அவரோ ‘ஹெபாசத்-இ-இஸ்லாம்’ என்ற மதப் பழமைவாத அமைப்பை ஆதரிக்கிறார். பாடப் புத்தகங்களிலிருந்து மதச்சார்பற்ற கருத்துகள் நீக்கப்படுகின்றன. அரசு வேலைகளைப் பெற பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு இணையாக மதக் கல்விப் பட்டங்களும் அங்கீகரிக்கப்படுகின்றன.

அரசியல் எதிர்ப்பு அடக்கப்படுவதால் மக்களுடைய கோபம் படிப்படியாக வளர்ந்து ஏதாவது ஒரு விதத்தில் வெடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுடன் இணைந்து வங்க சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்கிய அப்துல் காதர் முல்லாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற ஷபாக் இயக்கம், அரசுத் துறை வேலைவாய்ப்பில் 56% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம், சாலைப் பாதுகாப்பு கோரிய போராட்டம் ஆகியவை இவற்றையே உணர்த்துகின்றன. இந்தப் போராட்டங்களை ஹசீனா அடக்கிவிட்டார்.

வங்கதேசத்தில் அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி நவம்பர் முதல் வாரத்தில் தென்பட்டது. 1972-ல் நாட்டின் அரசியல் சட்டத்தை வகுத்தவர்களில் ஒருவரும் மூத்த ராஜதந்திரியுமான கமால் உசைன் தலைமையிலான ‘ஜாதீய ஐக்கிய முன்னணி’ பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்க ஒப்புக்கொண்டார் ஹசீனா. பிஎன்பி உட்பட 4 கட்சிகள் முன்னணியில் இடம் பெற்றுள்ளன. முன்னணியின் ஏழு கோரிக்கைகளில் ஒன்று நடுநிலையான அரசின் தலைமையில் தேர்தல் நடைபெற வேண்டும், காலிதா உட்பட எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது. ஒரு கோரிக்கையையும் பிரதமர் ஏற்கவில்லை.

ஹசீனா அரசு சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்படுகிறது, சலுகைசார் முதலாளித்துவத்தை ஊக்குவிக்கிறது. இது அரசின் அனைத்து மட்டத்திலும் எதிரொலிக்கிறது. நடுத்தர வருவாயுள்ள நாடாக வங்கதேசம் போகக்கூடிய பயணத்துக்கு இது தடையாக உள்ளது. சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் அவை எல்லாவற்றையும் இப்போது பலியிடத் தயாராகிவிட்டதைப் போலத் தோன்றுகிறது. தான் ஏறியுள்ள புலியின் மீதிருந்து ஹசீனா இறங்குவதே வங்கதேசத்துக்கு நல்லது.

– கனகமணி தீட்சித்,

காத்மாண்டுவைச் சேர்ந்த பத்திரிகையாளர்

தமிழில்: சாரி, © ‘தி இந்து’  ஆங்கிலம்.