’தேசியகீதம்’ படத்துக்கும் நிறைய எதிர்ப்புகள் வந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படத்தில் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்துவது போன்ற காட்சிகளுக்குத் தான் அதிமுக கட்சியின் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்கிவிட்டனர். தற்போது அக்காட்சிகள் இல்லாமல் ‘சர்கார்’ திரையிடப்பட்டு வருகிறது. ’சர்கார்’ படக்குழுவினருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்தது தொடர்பாக, திரையுலகினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்கள்.
இந்நிலையில் ‘தேசிய கீதம்’ படத்துக்கு இதே போன்றதொரு எதிர்ப்பு வந்ததாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக “1998 ’தேசியகீதம்’ வெளியானது நாட்டின் அரசியல் மாற்றங்கள் தேவைகள் பற்றி பேசியது. நிறைய எதிர்ப்புகள் வந்தது.
படத்தை நிறுத்த திரையரங்குகளுக்கு மிரட்டல் வந்தது. சில இடங்களில் நிறுத்தவும் செய்தார்கள். ஆனால் மக்களோ திரைப்படத்தை கொண்டாடினார்கள். இன்றும் கேட்கிறார்கள் எப்போது தேசியகீதம் 2 என” என்று தெரிவித்திருக்கிறார் சேரன்.
சேரன் இயக்கத்தில் முரளி, ரம்பா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தேசியகீதம்’. முதலமைச்சரை கடத்தி குக்கிராமத்துக்கு கொண்டு சென்று, அங்குள்ள கஷ்டங்களை புரிந்து கொள்ள வைப்பது தொடர்பாக இக்கதை அடங்கியிருக்கும். இப்படத்தில் முரளி பேசும் அரசியல் வசனங்கள் பல தரப்பிலும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.