ஆஸ்திரேலியா மக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் நேற்று(12) ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குயின்ஸ்லாந்துப் பகுதியில், ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்களைச் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் சுமார் 100 பேர் தாங்கள் வாங்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்களிலும் ஊசி இருந்ததாகப் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியதால், ஸ்ட்ராபெர்ரி விற்பனையும் தடைபட்டது. இந்த அச்சம் காரணமாக, விவசாய நிலங்களில் டன் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் கொட்டி அழிக்கப்பட்டன.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் ஊசி தொடர்பாகப் பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆஸ்திரேலிய அரசு திணறியது. இந்தச் செயலில் ஈடுபட்டோரை, `உணவு பயங்கரவாதிகள்’ என அறிவித்தது ஆஸ்திரேலிய அரசு. `ஸ்ட்ராபெர்ரியில் ஊசியை வைப்பது யார் எனக் தெரியவந்தால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்’ என்றும் எச்சரித்தது. இந்நிலையில் நீண்ட விசாரணைக்குப் பின்னர், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. என்ன காரணத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அந்தப் பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் பெயர், மை வுட் ட்ரின். இவர் விவசாய நிலம் ஒன்றில் சூப்பர்வைஸராக இருந்ததாகவும் தனது பணியிடத்தின் மீது உள்ள கோபத்தால், பழிவாங்கும் உணர்வுடன் இதைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டார். எனினும், அவரின் முதலாளி மீதான கோபத்தின் காரணம் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கில் ஜாமீன்கேட்டு அந்தப் பெண் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. வரும் 22-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி. இதுதொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “அவருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளன. ஊசியில் இருந்த டி.என்.ஏ அவரின் டி.என்.ஏ-வுடன் ஒத்துப்போகிறது. இந்த வழக்கில் இது முக்கியமான சாட்சியாக இருக்கும்” என்கின்றனர்.
கடந்த 2 மாதமாக ஆஸ்திரேலிய மக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த ஸ்ட்ராபெர்ரி விவகாரம் தற்போது, முடிவுக்கு வந்துள்ளது. எனினும், `வழக்கின் முழுமையான தகவல்கள் தெரிய வந்தால்தான் மக்களின் அச்சம் முழுமையாக விலகும்’ என்கின்றனர் பழ வியாபாரிகள்.