பூடான் தாயின் கதை இது!

தொடக்கத்தில், டாக்டர் க்ராமேரிக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அறுவை சிகிச்சைக்காக ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குப் போடப்படும் மயக்க மருந்து, இருவரின் உடலிலும் சரியாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதே அது.

பூம்சு சங்மோ (Bhumchu Zangmo) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் இரண்டு குழந்தைகள் பிறக்கக்கூடும் எனக் கணித்திருந்தனர். ஆனால், அந்த இரட்டையர்கள் ஒட்டிப் பிறப்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் குழந்தைகளைப் பார்த்து பூடான் மருத்துவர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், பூடான் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் முதல் ஒட்டிப் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் அவர்கள்தாம்!

கடந்த வருடம் ஜூலை 13-ம் தேதி பிறந்த இந்தக் குழந்தைகளின் கல்லீரல், தோல், தசைகள் என அனைத்தும் ஒட்டியிருந்தன. பூடானின் அந்தப் பகுதியில் ஆணோ பெண்ணோ இரட்டையர்களாகப் பிறந்தால், அவர்களுக்கு நிமா மற்றும் தவா என்றுதான் பெயர் சூட்டுவார்களாம். முதலில் பிறக்கும் குழந்தைக்கு நிமா என்றும், அதன்பிறகு வரும் குழந்தைக்கு தவா என்றும் பெயர் வைப்பார்கள். நிமா என்றால் சூரியன், தவா என்றால் சந்திரன் என்று அர்த்தமாம். சங்மோவும் அப்படியே தன் பெண் குழந்தைகளுக்குப் பெயரிட்டார்.

ஒட்டிப் பிறந்ததைத் தவிர, மற்றபடி அந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போலவே ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வளர்ந்தார்கள். நிமாவிடம் கொஞ்சம் ஆளுமைத்தன்மை அதிகம். அவள் சுதந்திரமாகத் தவழ வேண்டும் என்று நினைப்பாள். இதற்காக அவள் கையையும் காலையும் தரையில் ஊன்றும்போது, தவாவைக் கிட்டதட்ட நசுக்கிவிடுவாளாம். தவா ரொம்ப கூலான சுபாவம் கொண்டவளாம். மிகவும் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பாளாம். இவர்களின் நிலையைக் கண்டு, `சில்ரன் ஃப்ர்ஸ்ட் பவுண்டேஷன்’ மூலம் நிதி திரட்டப்பட்டு, ஆஸ்திரேலியாவிலுள்ள ராயல் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பிரிக்க முடிவு செய்யப்பட்டது. தன் கணவர் சோனம் மற்றும் மற்ற நான்கு குழந்தைகளையும் பூடானில் விட்டுவிட்டு, 7,500 கிலோமீட்டர் பயணித்து ஆஸ்திரேலியா வந்தடைந்தார் சங்மோ.

முதலில், இந்தக் சிகிச்சையைத் தாங்குவதற்கு அந்தக் குழந்தைகளுக்கு உடல்நலம் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கவேண்டும். அதற்காக ஊட்டச்சத்துகளை ஆஸ்திரேலியா மருத்துவர்கள் அளித்தனர். இந்த ஆண்டு, அக்டோபர் மாதமே இந்தச் சிகிச்சையை நடந்த முடிவு செய்திருந்த நிலையில், கடைசி நிமிடத்தில், அவர்களுக்கு மேலும் ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது என்று உணர்ந்து, அறுவை சிகிச்சையை ஒத்தி வைத்துவிட்டனர் மருத்துவர்கள். எல்லாம் சரிபார்த்த பிறகு, இம்மாதம் (நவம்பர்) 2-ம் தேதி, குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர் மருத்துவர்கள். மருத்துவர் ஜோ க்ராமேரி தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் என மொத்தம் 25 பேர் கொண்ட குழுவினரால், சுமார் ஆறு மணி நேரம் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.

“அறுவை சிகிச்சைக்காக நாங்கள் தயாராகும்போது, எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. இவர்களின் கல்லீரல் இணைந்திருப்பதை அறிந்திருந்தோம். அதை வெற்றிகரமாகப் பிரித்தோம். அவர்களின் வயிற்றுப் பகுதியைச் சீரமைப்பதுதான் மிகவும் சவாலான விஷயமாக இருந்தது. இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பம்சமே, ஆறு மணி நேரமாக எந்த ஏற்றத்தாழ்வுமே இல்லாமல், அவர்களின் உடல்நிலை சீரான ஓட்டத்தில் இருந்ததுதான். மிகவும் சீரான அமைதியான நிலையில் இருந்ததுதான், எனக்கு பெரும் உதவியாக இருந்தது” என்றனர் மருத்துவர்கள்.

அடுத்த சில வாரங்கள், இந்தக் குழந்தைகளை மருத்துவமனையிலேயே வைத்துக் கண்காணிக்க உள்ளனர். “அடுத்த 48 மணிநேரம் சில சவால்களை நாங்கள் சந்திக்கக்கூடும்; ஆனால், நாங்கள் அவர்களை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறோம்.” என்று கூறுகிறார் டாக்டர் க்ராமேரி.

தொடக்கத்தில், டாக்டர் க்ராமேரிக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த அறுவை சிகிச்சைக்காக இவர்களுக்குப் போடப்படும் மயக்க மருந்து, இருவரின் உடலிலும் சரியாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதே அது. மயக்க மருந்து அளித்த பிறகு இரண்டு மணி நேரம் தீவிரக் கண்காணிப்புக்குப் பின், உடல்நிலையை முழுமையாகச் சோதித்தபின்னரே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு முன், சற்றே கவலையுற்றிருந்த சங்கோ, தன் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர் என்று அறிந்ததும் ஆனந்தக் கண்ணீருடன், அவர்களை இரு கையில் தூக்கி மகிழ்ந்தார். இந்தக் பெண் குழந்தைகளை அவர்கள் குடும்பமும், உறவினர்களும் காண ஆவலாக இருக்கும் நிலையில், பல வாரங்கள் இங்குக் கண்காணிக்கப்பட்ட பிறகே, அடுத்த வருடம்தான் பூடானுக்குத் திரும்ப இருக்கின்றனர் சங்கோவும் அவரின் இரண்டு குட்டி தேவதைகளும்!