அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மேலாக வளங்கல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறும் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். இவையெல்லாம் உள்ளடங்கிய நல்லதொரு அரசியல் தீர்வின் மூலமே நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேசிய கட்சிகள் தமது நிலைப்பாட்டினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்க வேண் டும். இனிமேலும் காலத்தை கடத்தமுடியாது. புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின் விரை வில் தீர்வை முன்வைப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத் தில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் இனிமேலும் காலத்தைக் கடத்த முடியாது.
புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின் விரைவில் தீர்வை கொண்டுவருவதற்குரிய தீவிர முயற்சிகளை வருகின்ற அரசாங்கம் எடுக்கவேண்டும்.
தேர்தலின் பின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எமது ஆதரவும் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் உதவியும் நிச்சயம் தேவையாக இருக்கும். அதுவே இன்றைய அரசியல் சூழ்நிலையாகும். அவ்வாறு ஒரு சூழ்நிலை தோன்றுமாயின் எமது எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் ஆதரவு தர நாம் தயாராகவுள்ளோம்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக பெரும்பான்மை கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமாக காத்திரமான விடயங்களை முன்வைக்கவிருக்கிறோம். தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் இன்னும் நாம் பொறுமை காக்க முடியாது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகார வலு கொண்டதாக இருக்க வேண்டும். இதை பெரும்பான்மை மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வேண்டுமாயின் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்திப் பார்த்து முடிவுக்கு வர முடியும். காலத்தைக் கடத்தாது விரைவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று அரசாங்கத்தால் முன்வைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வு வழங்கப்படவுள்ளது என்பதை தேசியக் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிபார்க்கிறது. வேண்டுமாக இருந்தால் நாம் முன்வைக்கின்ற தீர்வை பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மை மக்களும் ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்திப் பார்க்கட்டும்.
ஒளிவு மறைவின் மூலமாக நிரந்தரமான அரசியல் தீர்வைக் காணமுடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு ஆட்சியை அமைக்கின்ற கட்சிகள் இந்த முயற்சியை முன்னெடுத்து செல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
சர்வதேச சமூகமும் இந்த முயற்சிக்கு எல்லா வகை உதவிகளையும் செய்வார்கள் என நம்பலாம். இன்று ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சூழலில் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை நல்க முடியுமென்று நாம் நம்புகின்றோம்.
தேர்தல் நடந்து முடிந்த பின்பு யார் ஆட்சி அமைப்பார்கள்? பலமுள்ள ஒரு அரசாங்கம் அமையுமா? இல்லையென்பது பற்றி ஊகத்தின் அடிப்படையில் எதையும் நாம் கூற முடியாது. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கின்ற போது ஒரே அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாக சிந்திக்கக்கூடிய சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பு உருவாகலாமெனவே நாம் கருதுகிறோம். சில சமயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடைய ஆதரவு அதை அடைவதற்கு தேவையாக இருக்கலாம். அந்த நிலைமை உருவாகுமென்றே நான் நம்புகின்றேன். அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் நாங்கள் எமது திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றோம். நடைபெறுகின்ற நகர்வுகளை அவதானித்து அதற்கு ஏற்ற வகையில் பொருத்தமான உபாயங்களை நாம் கையாள்வோம்.
8 மாவட்டங்களிலும் போட்டி
வடகிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது. அதற்குரிய சகல ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளது. வேட்பாளர் நியமனங்கள் சம்பந்தமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சுமுகமான முடிவு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் விரைவில் காணப்படும்.
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சம்பந்தமாக நீண்ட காலமாக ஒரு முடிவு காணப்படவில்லை. ஆனால் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின் அவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை அடைவதற்காக பல்வேறு முயற்சிகள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பிரேமதாச சந்திரிக்கா பண்டாரநாயக்கா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலத்தில் மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வந்துள்ளன.
ஆனால் யாருடைய காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை. துரதிஷ்ட வசமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பின்னடைவு கண்டு தீர்வை அடைவது ஒரு சிக்கலான விடயமாக மாற்றமடைந்தது.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத விடயமும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கான முக்கியமான காரணமாக இருந்துள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவது
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயம் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச சமூகத்துக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. எல்லா விடயங்களையும் குழப்ப முயன்றார் அவருடைய தோல்விக்கு அவையே முக்கியமான காரணமாக அமைந்தது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீ சேனவுடன் தீர்வு சம்பந்தமாக ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தோம். நாம் தற்பொழுது எதிர்பார்ப்பது யாதெனில் பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின்பு தமிழ் மக்களுக்கான தீர்வை அரசாங்கம் கால தாமதம் செய்யாமல் விரைவாக முன்வைக்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடும் எதிர்பார்ப்புமாகும்.
தேர்தல் விஞ்ஞாபனம்
நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு எம்மால் விரைவில் வெளியிடப்படவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக விரிவாக எடுத்துரைப்போம். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான இனம். எமக்கென மொழி கலை கலாசாரம் உண்டு. அதன் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் மேற்குறிப்பிட்ட விடயங்களைப் பேணிப் பாதுகாத்து தனிப்பட்ட இனம் என்ற அடிப்படையில் சமத்துவமாக வாழ்வதற்கு எமக்கு உரிமையுண்டு. அது எமது பிறப்புரிமை. எனவே தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு ஒருமித்து ஒற்றுமையாக பிரிக்கப்படாமல் செயற்படக்கூடிய ஒரு தீர்வு தரப்பட வேண்டும். பகிர்ந்தளிக்கப்படும் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் கூடியளவு வழங்கப்பட வேண்டும். பிராந்தியமொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய சகல அதிகாரங்களும் அந்த பிராந்தியத்துக்கு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது முடிவுகளே ஜனநாயக ரீதியாக நிறைவேற்றக் கூடிய வல்லமை உருவாக வேண்டும்.
இவ்வகை அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மேலாக வளங்கல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறும் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். இவையெல்லாம் உள்ளடங்கிய நல்லதொரு அரசியல் தீர்வின் மூலமே நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியும்.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீர்வு என்பது காலதாமதப்படுத்தப்படாமல் விரைவில் கொண்டு வரப்பட வேண்டுமென்பது எமது கோரிக்கையாகும். அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற தீர்வு பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.