ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாத காலமாக பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களாக, ஸ்ட்ராபெர்ரி பற்றிய அச்சம் பொதுமக்களிடம் அதிகமாகிக்கொண்டே சென்றது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் ஆஸிதிரேலிய அரசும் திணறியது. பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்ட காரணம், அந்தப் பழங்களில் காணப்பட்ட ஊசி தான்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்நாட்டில் விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டு பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது கடந்த செப்டம்பர் மாதம், குயின்ஸ்லாந்துப் பகுதியில், ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது மக்களிடம் அச்சத்தை மேலும் அதிகரித்தது. இந்தச் சம்பவத்துக்குப்பின்னர் சுமார் 100 பேர் தங்களின் ஸ்ட்ராபெர்ரியிலும் ஊசி இருந்ததாகப் புகார் தெரிவித்தனர்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் ஊசி தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆஸ்திரேலிய அரசு திணறியது. இதனிடையில் ஸ்ட்ராபெர்ரி குறித்த அச்சம் காரணமாக, அந்நாட்டில் சூப்பர் மார்க்கெட்டிலும், விவசாய நிலங்களிலும் விற்பனை இல்லாமல் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் கொட்டி அழிக்கப்பட்டது. குறிப்பாக விவசாய நிலங்களில் இந்த அச்சம் காரணமாக டன் கணக்கில் பழங்கள் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஸ்ட்ராபெர்ரி வைக்கும் இடங்கள் காலியாக உள்ளன. இந்த அச்சம் ஆஸ்திரேலியா தாண்டி நியூசிலாந்து வரை பரவியது. இதன் காரணமாக அங்கும் ஸ்ட்ராபெர்ரி விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்தது.
இந்த செயலில் ஈடுபட்டோரை,“உணவு பயங்கரவாதிகள்” என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இப்படி ஸ்ட்ராபெர்ரியில் ஊசி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என முதலில் காவல்துறை எச்சரித்திருக்கிறது. பின்னர் அந்தத் தண்டனை 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் ஊசி குறித்து இதற்குக் காரணமான நபர்கள் குறித்தும் தகவல் தருபவர்களுக்கு பரிசுத் தொகைகளை அறிவித்தது அந்நாட்டு அரசு. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஸ்கோட் மோரிசன், “இது ஒன்றும் விளையாட்டு இல்லை. மக்களின் உயிர்களை ஆபத்தில் விடுபவர்களை அரசாங்கம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இதைச் செய்பவர்கள் கோழை. இது தீவிரவாதத்துக்கு சமமான செயல்” என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், குழப்பமான இந்த விவகாரத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு போலீஸார் இன்று 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்டவர் யார் என்ற தகவலும், அவர் மீது என்ன வழக்கு போடப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது சிறையில் உள்ள அவரை, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அவர் யார், எதற்காகச் செய்தார் போன்ற தகவல்கள் தெரியாததால் பொதுமக்கள் இன்னும் அச்சத்தில் இருந்து வெளிவரவில்லை.