இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ…

நமக்குள் நிரம்பிக்கிடக்கும் உணர்வுகளின் எல்லைகளைக் கடக்கவோ, அதில் திளைக்கவோ பல நேரத்தில் கைகொடுப்பது இசையும் கவிதைகளுமே! அனுதினமும் நம்முடனே பயணிக்கும் சக பயணிபோலாகிவிட்ட திரையிசைப் பாடல்கள்தான் நம்மில் பலருக்கும் மீட்பன். மனதின் சுவர்களை முள்ளாகத் தைத்துக்கிடக்கும் ரணங்களைக் கடப்பதாகட்டும், தரையில் கால் படாமல் துள்ளிக் குதிக்கும் மகிழ்ச்சி ஆகட்டும் பாடல்களின் கரம் பிடித்தே நாம் கடந்து செல்கிறோம். நம் துயரை, நம் காதலை, நம் இழப்பை, நமக்கான ஒளியை எங்கோ ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார் என்ற நிம்மதி, நம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தலை கவிழ்ந்து நாம் விம்மி விம்மி அழுகையில், நம் பின்முதுகை வருடிக்கொடுத்து, அன்பின் உஷ்ணத்தைக் கடத்துபவர்களில் முக்கியமானவர் கவிஞர் தாமரை.

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்களைப்போலவே தனித்துவமிக்கப் பாடலாசிரியர்களும் நிறைந்துகிடப்பது நம் வரம். இயக்குநர் எழுதிய சூழலுக்குத் தகுந்த இசையை இசையமைப்பாளர் உருவாக்க, சூழலின் தீவிரம் குறையாது அதற்கான வரிகளை கவிஞர்கள் எழுதிக் கொடுக்க, பாடகர்கள் அதைப் பாடி உருவாகிறது திரையிசைப் பாடல்கள். இத்தனை படிநிலைகளைக் கடந்துவரும் பாடல்கள்தான், நாம் விரும்பியப் பொழுதுகளில் சாமரம் வீசி நம்மைத் தேற்றுகின்றன. தமிழ்த் திரையில் விரியும் ஒரு காட்சியோ, நடிகர்களின் நடிப்போ ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை, பாடல் வரிகள் சடுதியில் ஏற்படுத்திவிடுகின்றன. நம் உணர்வுகளுக்கான வார்த்தைகளைச் சரியாகத் தேடிப் பிடித்து, நம்மைப் பிணைத்து நம்மை பிரமிக்கவைத்துவிடுகின்றன பாடல்கள்.

ஆண்களின் உலகமாகவே பெரும்பாலான துறைகள் நம்மிடம் இருக்கின்றன. அதற்கேற்றார்போல பெண்களை மையப்படுத்திய படங்களோ, காட்சிகளோ நம் சினிமாவில் குறைவு. பெண்கள் கற்பனைசெய்யும் பாடல்களையும் ஆண் கவிஞர்களே எழுதிக்கொண்டிருந்த சூழலில், தாமரையின் வரவு, தமிழ் சினிமாவின் வசந்தகாலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

`வசீகரா…

என் நெஞ்சினிக்க, உன் பொன் மடியில்

தூங்கினால் போதும்

அதே கணம்

என் கண்ணுறங்கா

முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்’

என, தாமரை எழுதத் தொடங்கிய பிறகு, பல பெண்களின் ஏக்கங்களுக்கு இந்த வார்த்தைகளே வடிகாலாய் அமைந்தன!

சொல்லாத காதலின் ரணமோ, தனக்குள் எழுந்த காதல் முழுவதையும் கொட்டித் தீர்க்கவேண்டுமென்ற தவிப்போ, ஆண்-பெண் இருபாலருக்குமே பொதுவானது என அழுத்தமாகப் பதிவுசெய்தன தாமரையின் வரிகள். உடலுக்குள் ஒளிந்திருக்கும் அருவமாய் திகழும் காதலுக்கு சொற்களைக்கொண்டு உருவம் கொடுக்கும் லாகவம் கவிஞர் தாமரைக்கே உரியது.

`சந்தியாக் கால மேகங்கள்

பொன் வானில் ஊர்வலம் போகுதே

பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே

உன் நடையின் சாயலே தோணுதே

நதிகளிலே நீராடும்

சூரியனை நான் கண்டேன்

வியர்வைகளின் துளிவழிய

நீ வருவாய் என நின்றேன்

உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்

நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும்

மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே

சாகத் தோன்றுதே’

என, ஒட்டுமொத்த ப்ரியத்தை, தவிப்பை, தன் வரிகளின் வழியே கடத்தியிருப்பார்.

பெண்கள் உலகம் சார்ந்து எழுதியது மட்டுமின்றி, ஆணின் காதலையும் எழுதியிருப்பார். `சுப்ரமணியபுரம்’ படத்தில் காதல் காட்சிகள் குறைவு. காதலியின் கடைக்கண் பார்வை மட்டுமே காதலனுக்குச் சுகந்தம். ஒட்டுமொத்த உரையாடலுமே அவளின் பார்வையும் இவனது புன்னகையும் மட்டுமே. அவர்களின் ஒட்டுமொத்தக் காதலையுமே `கண்கள் இரண்டால்…’ என்ற பாடலில் அழகாகத் தொகுத்திருப்பார்.

`கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்

ஒரு வண்ண கவிதை காதல்தானா

ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே’

எனத் தொடங்கி

`கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்

உடலும் அல்லாத உருவம்கொள்ளாத கடவுளைப்போல் வந்து கலந்திட்டாய்

உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை

இனி இந்த ஊனுயிர் எனதில்லை

தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர’

என முடிக்கையில், அவர்களின் ஒட்டுமொத்தக் காதலின் அழுத்தம் நமக்குள்ளும் நுழைத்துவிடுகிறது.

ஒரு திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு மட்டும் பாடல் எழுதுவது ஒரு வகை. ஒட்டுமொத்தக் கதையிலும் வரும் பாடல்கள் அனைத்தையும் ஒருவரே எழுதுவது ஒரு ரகம். அனைத்துப் பாடல்களையும் எழுதுவது என்பது கதையோடு இன்னும் கொஞ்சம், நெருக்கத்தை அதிகப்படுத்தும். தாமரை-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் ஒட்டுமொத்தப் பாடல்களையும் எழுதிய `கண்ட நாள் முதல்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்ட நாழிகை முதல் நம்மை கிறங்கவைத்துவிடும். தாமரையின் பாடல் வரிகளை யுவன் தன் இசையோடு இணைக்க, ஒலி வடிவில் இருக்கும் உணர்வுகளுக்கு பி.சி.ஶ்ரீராம் ஒளியூட்டிக் காட்சிப்படுத்திய `மேற்கே மேற்கே…’ பாடல், இன்று வரை பலரின் ஃபேவரைட்.

`வாசல் கதவை யாரோ

தட்டும் ஓசை கேட்டால்

நீதானென்று பார்த்தேனடி சகி..

பெண்கள் கூட்டம் வந்தால்

எங்கே நீயும் என்றே

இப்பொதெல்லாம் தேடும் எந்தன் விழி..

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ..

காற்றே சிறகாய் விரிந்திடுமோ..

நிலவின் முதுகை தீண்டும் வேகமோ..

அட, தேவைகள் இல்லை என்றாலும்

வாய் உதவிகள் கேடு மன்றாடும்..

மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ..’

என சங்கர் மகாதேவனும் சாதனா சர்கமும் பாட, காட்சிகளில் விரியும் கடலின் அலைகள் நம் பாதங்களையும் நனைத்துச் செல்லும்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் – தாமரை கூட்டணி, மனித உணர்வுகளைப் புதுப்பிக்கும் வகையிலான பாடல்களைக் கொடுத்துள்ளது. `காக்க காக்க’, `வேட்டையாடு விளையாடு’, `பச்சைக்கிளி முத்துச்சரம்’ என இவர்கள் காம்போவில் வெளிவந்த அத்தனை பாடல்களும் எத்தனையோ மனங்களைக் கொள்ளைகொண்டுள்ளன. கௌதமின் நாயகிகள் ஒவ்வொருவரும் தங்களின் காதலையும் காமத்தையும் காதலன்பால் கடத்திட, தாமரையின் வார்த்தைப் பிரயோகம் வாசம்மிக்க மலர்கொத்துகளாய் மாறி நிற்கும்.

`தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும்

மிகப்பிடித்தப் பாடலொன்றை உதடுகளும் முணுமுணுக்கும்’

என, காதலால் கட்டுக்கடங்காத மனதின் தவிப்பை எழுதியிருப்பார்.

 

`சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா

அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா

இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே

உனதலைகள் எனை அடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட’

என, கூடல் பொழுதின் மயக்கத்தை தாமரையின் வரிகளில் சுதா ரகுநாதனின் குரல் நம்மை கலங்கடிக்கும்.

 

கௌதம், ஏ.ஆர் ரகுமானுடன், தாமரை இணைந்து வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் மியூசிக்கல் ஹிட் எனுமளவுக்கு பாடல்கள் படத்துக்கு வலு சேர்த்திருக்கும். குடும்பம், பெற்றோர், உறவினர் எனப் பெரும்பாலான பெண்கள் தங்கள் காதலை மனதோடு புதைக்கும் நிலைதான் `விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஜெஸ்ஸியினுடையது.

`ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ

போவாயோ கானல்நீர் போலே தோன்றி

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்’

என எழுதியிருப்பார்.

அந்த வரிகள் ஒவ்வொன்றும் கார்த்திக்-ஜெஸ்ஸியின் மனவோட்டங்களின் மறுவடிவம்தான். பிரச்னை தான், பிரிவுதான் என உள்மனம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தாலும், மனம் காதலை நாடச் செய்யும் மனம்தான் பலருக்கும் வாய்த்திருக்கிறது. `இனிமேல் நீயும் நானும் வெவ்வேறானவர்கள்’ எனப் பிரியும் நொடியின் துயரை, `பிரிந்தாலும் நாம் சேர்ந்தே இருப்போம்’ என்ற முரண்பாடன முடிச்சை பாடலாக்கி அவிழ்த்திருப்பார். இருவரும் சேர்வதாக வரும் கற்பனைப் பாடலான `அன்பின் அவன்…’ பாடலும் அற்புதமான பாடல்.

`முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் தனி ஆளாக தன் மகனைக் கரைசேர்க்கும் தாய்மை தன் வரிகளின் மூலம் மாபெரும் வெளிச்சமாக்கியிருப்பார்.

`பல நூறு மொழிகளில் பேசும்

முதல் மேதை நீ…

பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ

நான் கொள்ளும் கர்வம் நீ…

கடல் ஐந்தாறு மலை ஐந்நூறு

இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை

உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை’

என, தன் மகனை வாரி அணைக்கும் ஒவ்வொரு தாயின் மன ஓட்டத்துக்கும் வார்த்தைகள் வழியே தடம் அமைத்து தாலாட்டு பாடியிருப்பார்.

திரையிசைப் பாடல்கள் கவிதை மட்டுமின்றி, சமூகச் செயல்பாடுகளிலும் பங்கெடுத்துவருபவர் தாமரை. `மீனுக்கும் மீனவனுக்கும் ஒரே பாடை, படகு!’ என்ற அவரது கவிதை, மிக முக்கியமானது. அவரது வரிகளைப்போலவே `பேசிப் பேசித் தீர்த்தப் பின்னும் ஏதோ ஒன்று குறையுதே’ என்பதைப்போலதான் இந்தக் கட்டுரையும். அவரது வரிகளில் ஆழ்ந்திருப்பதே அவருக்கான நம் வாழ்த்து.

அவரைப் பற்றி ஒவ்வொரு முறை நினைக்கும்போதும் கீழ்காணும் அவரது நெஞ்சை ரணமாக்கும் கீழ்காணும் கவிதைகள்தான் நினைவுக்கு வரும்

`உனக்கான நஞ்சை நான் அருந்தி

தொண்டையில் நிறுத்திக்கொண்டேன்

என்பதற்காகவாவது

நான் இன்னும் கொஞ்சம்

நன்றாக நடத்தப்பட்டிருக்கலாம்…

ஒரு கை என் முதுகைத்

தடவிக்கொடுப்பதாக

ஒரு கனவு இன்னும்

வந்துகொண்டே இருக்கிறது’

வாழ்த்துகளும் நன்றியும் கவிஞரே!