ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்ட தமிழக அரசின் சிபாரிசை மத்திய உள்துறை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்ப மறுத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறார்கள்.
நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசும் அவர்களை விடுவிப்பதற்கு சம்மதம் தெரிவித்து மத்திய அரசிடம் இது சம்பந்தமாக சிபாரிசு செய்தது.
மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கவர்னரே இந்த விஷயத்தில் முடிவு எடுத்து கொள்ளலாம் என கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையும் அவர்களை விடுவிக்கலாம் என கவர்னருக்கு சிபாரிசு செய்துள்ளது. இது, கவர்னரின் பரிசீலனையில் உள்ளது.
ஏற்கனவே கொலையாளிகள் 7 பேருக்கும் மன்னிப்பு அளித்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது.
இந்த கடிதம் 2.3.2016 அன்று மத்திய உள்துறை மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த கடிதம் தொடர்பாக மத்திய உள்துறை கடந்த ஏப்ரல் 18-ந் தேதி ஒரு தகவலை தமிழக அரசுக்கு அனுப்பியது.
அதில், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கொலையாளிகளை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட கொலையாளிகள் மோசமான ஒரு கொலை குற்றத்தை செய்திருக்கிறார்கள். அவர்கள் முன்னாள் பிரதமருடன் சேர்த்து 15 பேரை கொலை செய்துள்ளனர்.
அதில் பலர் போலீஸ் அதிகாரிகள். கொலையாளிகளில் 4 பேர் வெளிநாட்டினர். அவர்கள் 3 இந்தியர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருக்கிறார்கள். எனவே, அவர்களை விடுவிக்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜனாதிபதி மாளிகைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கடிதம் எழுதி, தமிழக அரசின் சிபாரிசு கடிதம் என்ன ஆனது? என்று கேட்டு இருந்தார்.
புழல் சிறையில் உள்ள அவருக்கு தற்போது தகவல் அறியும் ஆணையத்தில் இருந்து பதில் கடிதம் வந்துள்ளது.
அதில், தமிழக அரசு சிபாரிசு செய்த கடிதம் எதுவும் இதுவரை எங்களுக்கு (ஜனாதிபதி அலுவலகம்) வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது தமிழக அரசு சிபாரிசு கடிதத்தை மத்திய உள்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்ப மறுத்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
மத்திய உள்துறையின் உயர்மட்ட அதிகாரிகளே இதுபற்றி முடிவு எடுத்து கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டதாக உள்துறை வட்டாரங்கள தெரிவித்தன.
இது சம்பந்தமாக பேரறிவாளன் வக்கீல் சிவக்குமார் கூறும்போது, தமிழக அரசின் சிபாரிசு கடிதம் எங்களுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் மாளிகையின் செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பாமலே வேண்டும் என்றே முடக்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தை பொறுத்த வரை சட்ட ரீதியான நடவடிக்கைகளை விட அரசியல் ரீதியான நடவடிக்கைகளே உள்ளது.
மத்திய உள்துறையின் செயல்பாடுகள் தவறானவை. எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
Eelamurasu Australia Online News Portal