தீவிர வலதுசாரி நாடாகும் பிரேசில்!

பிரேசிலின் புதிய அதிபராக 2019 தொடக்கத்தில் பதவியேற்கிறார் ஜெய்ர் பொல்சொனாரோ. ஒரு ஜனநாயக நாட்டில் பதவிக்கு வந்த வலதுசாரிகளிலேயே இவர்தான் அதிதீவிரமானவராக இப்போதைக்குக் கருதப்படுகிறார். பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஹங்கேரியைப் பின்பற்றி பிரேசிலிய மக்களும் வலதுசாரித் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பொல்சொனாரோவை, ‘பிரேசிலின் டிரம்ப்’ என்றே அழைக்கின்றனர். இதில் உண்மையும் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதார்தேவைப் போல இவரும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வன்முறைதான் கை கொடுக்கும் என்று நம்புகிறார். அதிபர் தேர்தல் முடிவு வெளியான உடனேயே பிரேசில் நாட்டு ராணுவம் நகர வீதிகளில் மிடுக்கோடு அணிவகுப்பு நடத்தியது. மக்கள் கூடி நின்று ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர். பொல்சொனாரோ ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பிரேசிலில் 1964 முதல் 1985 வரையில் நடந்த ராணுவ சர்வாதிகார ஆட்சியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அந்த ஆட்சியால்தான் உலக அரசியல் அரங்கில் பிரேசில் முதல் வரிசையில் இடம்பிடித்தது என்று கூறியிருக்கிறார். பொல்சொனாரோ அதிபராக மூன்று ‘பி’க்கள் காரணம், அவை முறையே பீஃப், பைபிள், புல்லட் என்கின்றனர்.

பீஃப் அரசியல்

100 கோடி ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள அமேசான் மழைக்காட்டை யாரும் எளிதில் நுழைய முடியாதபடிக்கு சுற்றுச்சூழல், தொழிலாளர் சட்ட விதிகள் தடுக்கின்றன. “நான் அதிபரானால் இந்தத் தடைகளைத் தகர்த்து, பொருளாதார வளர்ச்சி விரைவுபட காடுகளைப் பயன்படுத்த அனுமதிப்பேன்” என்று பொல்சொனாரோ வாக்குறுதி தந்தார். காடுகளில் விவசாயம் செய்யலாம், கால்நடைகளையும்

கோழி-வாத்து உள்ளிட்ட பறவைகளையும் வளர்க்கலாம், கனிம வளங்களை அகழ்ந்தெடுக்கலாம், மின்சாரம் தயாரிக்க வனங்களில் அணைகளைக் கட்டலாம், மரங்களைத் துண்டுகளாக்கி விற்கலாம் என்று அடுத்து அனுமதிக்கப்போகிறார். இதனால் இத்துறையைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகளை, “பிரேசிலின் இறையாண்மை மீது ஐக்கிய நாடுகள் சபை திணித்த நிபந்தனைகள்” என்று பிரச்சாரத்தின்போது வர்ணித்தார் பொல்சொனாரோ. அவருடைய உத்தேச யோசனைகள், இறையாண்மையை பிரேசிலியர்களுக்கு மீட்டுத் தந்துவிடப்போவதில்லை; கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியர்களின் வணிக விருப்பங்களைத்தான் அவை பூர்த்திசெய்யப்போகின்றன.

பிரேசிலில் ‘கத்தோலிக்க சமத்துவம்’ என்று அழைக்கப்படும் ‘விடுதலை இறையியல்’ கோட்பாடு இப்போது செல்வாக்கிழந்துவருகிறது. மாறாக, பிரேசிலின் ஏழை மக்களிடையே பெந்தகொஸ்தேவுக்கு ஆதரவு அதிகம். அமெரிக்க உந்துதலால், நற்செய்திப் பிரசங்கங்கள் வளர்ந்தன. பிரேசிலின் மிகப் பெரிய பேராலயங்களில் ஒன்றான ‘யுனிவர்சல் சர்ச் ஆஃப் தி கிங்டம் ஆஃப் காட்’ உலகம் முழுக்க ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. அதன் தலைவர் எடிர் மாசிடோ பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய தொலைக்காட்சி வலையமைப்பை (ரெகார்ட்டிவி) வைத்திருக்கிறார். இந்த இயக்கங்கள் மக்களிடையே மிகவும் செல்வாக்குள்ளவை. கருக்கலைப்பு, பாலினச் சமத்துவம் ஆகியவற்றை இவற்றின் ஆதரவாளர்கள் ஏற்பதில்லை. சுவிசேஷப் பிரசங்க அமைப்புகளும் கத்தோலிக்கக் குழுக்களும் பொல்சொனாரோவை ஆதரிக்கின்றன.

புல்லட் அரசியல்

புல்லட் என்பது ராணுவத்தை மட்டுமல்ல; காவல் துறையையும் குறிப்பது. இரண்டு அமைப்புகளுமே அவரைத் தங்களுடைய நலனைக் காக்கக்கூடியவராகப் பார்க்கின்றன. நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதால் வெகுண்டுள்ள மத்தியதர வர்க்கமும் அவரை ஆதரிக்கின்றன. 2017-ல் 175 பேர் வன்செயல்களுக்குப் பலியாகியுள்ளனர். குற்றம் செய்யும் ஏழைகளை, காவல் துறை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்றே பேசியிருக்கிறார்.

அவர் இப்படிக் கூறியதற்கு இனவெறியும் காரணம். வன்செயல்களால் யார் மிகவும் பாதிக்கப்படுகின்றனரோ அவர்களையே அதற்குக் காரணமாகக் கருதுகிறார். மத்தியதர வர்க்கத்தினரின் விருப்பு – வெறுப்புகளே அவருடைய பிரச்சாரத்தின் மூலங்களாக இருந்துள்ளன. அவருடைய ஆட்சியையும் அவைதான் தீர்மானிக்கப்போகின்றன.

பங்குச்சந்தையின் பிரதிநிதி

சாவ் பாவ்லோ நகரில் உள்ள பிரேசிலின் பங்குச் சந்தையை ‘பி-3’ என்றே அழைக்கின்றனர். அதன் அடிப்படை பங்குக் குறியீட்டுப் பெயர் ‘போவஸ்பா’. அதில் 60 பெரிய நிறுவனங்களின் பங்குகள் இடம்பெற்றுள்ளன. பொல்சொனாராவின் வெற்றிக்குப் பிறகு இந்தப் பங்குகளின் விலை மதிப்பு கிர்ரென்று உயர்ந்தது. தங்களுடைய வேட்பாளர்தான் வெற்றிபெறுவார் என்பதை இப்பணக்காரர்கள் முன்னதாகவே உணர்ந்துள்ளனர். கனிம நிறுவனங்கள், மின்உற்பத்தி நிறுவனங்களின் கூட்ட அரங்குகளில் மது வெள்ளமாகப் பாய்ந்தது. தேசிய வேளாண்மைக் கூட்டமைப்பு அலுவலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசியல் விமர்சகர்கள் தங்களுடைய கட்டுரைகளில் ‘காரியசாத்தியமான’, ‘நியாயமான’ என்றெல்லாம் அவருடைய வெற்றியை வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர். வறுமையில் விழுந்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கான பிரேசிலியர்களைவிட, தொழிலதிபர்கள் மீது அவருடைய கவனக்குவிப்பு இருக்கும் என்று இதற்குப் பொருள்.

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி அன்னா ப்ரூசா நேரடியாகவே,  ‘பிரேசிலின் கனிமத் துறையில் முதலீடு செய்ய இது உகந்த நேரம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சந்தைகளைத் திறந்துவிட வேண்டும் என்பதை ஆதரிக்கும் பொல்சொனாரோ, கட்டுப்பாடுகளை வெகுவாகக் குறைத்துவிடுவார் என்று அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற உதவிய ஸ்டீவ் பன்னான், ‘சமூக ஊடகப் பிரச்சாரத்தை பொல்சொனாரோ வலுவாக நடத்தியுள்ளார்’ என்று பாராட்டினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தொழிலாளர் கட்சியினர், குழந்தைகளுக்குப் பாலியல் பற்றிச் சொல்லித்தருகின்றனர் என்று பொய்ச் செய்தியை சமூக ஊடகங்களில் பரவவிட்டதைத்தான் அப்படி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிக்ஸிலிருந்து அமெரிக்காவுக்கு

பிரேசிலிலும் ஒரு வலதுசாரித் தலைவர் அதிபராகிவிட்டார் என்றதும் டிரம்ப் வெற்றிக் களிப்பில் மிதந்தார். தொலைபேசியில் அவருடன் பேசினார். ‘பிரிக்ஸ்’ அமைப்பு நிலைகுலைந்துவிட்டதால் பிரேசில் அதிலிருந்து வெளியேற வேண்டும் அல்லது அதன் நடைமுறைகளில் அதிக வேகம் காட்டக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அமெரிக்காவுக்குக் கீழ்ப்படிந்த நாடாக பிரேசில் இனி திகழும். இதைத்தான் பிரேசில் தொழில்துறை விரும்புகிறது, அமெரிக்காவும் எதிர்பார்க்கிறது. அமெரிக்காவிடம் பிரேசில் நெருங்குவது லத்தீன்-அமெரிக்க நாடுகளில் சுதந்திரமான பிராந்திய நடைமுறை சீர்குலையவே வழிவகுக்கும். உலகின் பல துருவ அமைப்புக்கும் பேரிழப்பாகிவிடும்.

– விஜய் பிரசாத், டிரைகான்டினென்டல் சமூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர்,

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.