மனுஸ்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள், கடந்த 2016ல் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். சமீபத்தில், இப்படி விண்ணப்பித்த 72 சதவீதமான அகதிகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
தற்போது விண்ணப்பித்த 32 அகதிகளில் 9 பேர் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளது. அந்த 9 பேரில் 4 ரோஹிங்கியா, 3 ஆப்கானியர், 2 பாகிஸ்தானியர்
மற்றும் 1 ஈழத்தமிழர் எனக்கூறப்படுகின்றது.
இதுவரை நவுரு முகாமிலிருந்து 300 அகதிகளும் மனுஸ்தீவிலிருந்து 167 அகதிகளும் என 467 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக Refugee Action Coalition என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே சமயம், 1200 மேற்பட்ட அகதிகள் மீள்குடியேறுவதற்கான எந்த வாய்ப்புகளுமின்றி
இன்னும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் வாழ வேண்டிய நிலை தொடர்ந்து வருகின்றது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில்
கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது.
இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடை முறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.
கடந்த காலங்களில், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சிகளை ஈழத்தமிழ் அகதிகள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.