அரசியல் போர்க்களம்! – பி.மாணிக்கவாசகம்

நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள்.

உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் இந்த கவலை சார்ந்த அக்கறையும் கரிசனையும் பரவலாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது, ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, அதன் விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச அளவிலான அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன.

ஜனநாயகத்தை சவாலுக்கு உள்ளாக்கியுள்ள இந்த அரசியல் நெருக்கடியானது, நாட்டின் அரசியலமைப்பை மையமாகக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி ஆட்சி முறையை இது தீவிர சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த ஆட்சி முறை நாட்டுக்கு உகந்ததா, தொடர்ந்து இதனைப் பின்பற்ற முடியுமா என்பது குறித்த சர்ச்சையைத் தோற்றுவிக்கும் அளவுக்கு இந்த நெருக்கடி மோசமான நிலைமையை எட்டியுள்ளது.

நாட்டின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) ஏற்பட்டுள்ள அரசியல் மோதல்களே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் அமைத்த அரசாங்கம் நாட்டு மக்கள் மத்தியிலும், அதேபோன்று சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் கடந்த மூன்று வருட காலம் நடைபெற்ற இந்த கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளையும், குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்குத் தவறிவிட்டன. இதனால் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.

நீண்ட காலமாகவே இரு கட்சிகளும் தங்களுக்குள் இணக்கப்பாடின்றி அரசியல் ரீதியாக மோதிக்கொண்டு, மாறி மாறி நாட்டை ஆண்டு வந்திருக்கின்றன. இந்த நிலையில் இரண்டு கட்சிகளும் இணைந்து அமைத்த தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அசசாங்கம் மக்களுடைய மனங்களை வென்றெடுப்பதில் தீவிரமாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு இலவு காத்தி கிளியின் நிலைமைக்கே இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் ஒன்றிணைந்து செயற்பட்டிருக்க வேண்டிய அரசாங்கத்தின் பங்காளிகளான இரண்டு தேசிய அரசியல் கட்சிகளும், உள்ளுராட்சித் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியையடுத்து, ஒன்றையொன்று மேவி எந்தக் கட்சி தனியாக ஆட்சி அமைப்பது என்ற அரசியல் போட்டி நிலைமைக்கு ஆளாகியிருந்தன.

நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டிருந்த இந்த அரசியல் போட்டியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக நேர்த்தியாகத் திட்டமிட்ட வகையில் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்து, உள்ளுராட்சித் தேர்தலில் மக்களுடைய ஆதரவைப் பெற்றிருந்த மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளார்.

அவருடைய இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது. நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள அரசியல் திருத்தச் சட்டத்திற்கு முரணானது என்ற சர்ச்சையையும் கண்டனத்துடன் கூடிய விமர்சனத்தையும் உருவாக்கிவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இரண்டு தேசிய அரசியல் கட்சிகளும் பலப் பரீட்சையில் ஈடுபட்டிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியாக மக்கள் மத்தியில் தங்களுக்குள்ள ஆதரவைக் காட்டுவதற்காக ஆட்களை அணிதிரட்டி தலைநகரில் காட்சிப்படுத்துகின்ற கைங்கரியத்திலும் ஈடுபட்டிருக்கின்றன. இந்த பலப்பரீட்சை பிடிவாதம் நிறைந்ததாகவும், அரசியல் அதிகாரத்திற்கான கடுமையான போட்டியாகவும் மாறியிருக்கின்றது.

திட்டமிட்ட சதி நடவடிக்கையா….?

தற்போதைய நெருக்கடி நிலைமைக்குக் காரணமாகிய ஆட்சி மாற்றம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென்று இடம்பெற்றது. இருப்பினும், ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பே இதற்கான அடித்தளம் இடப்பட்டு, அதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமாக இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கான முதல் சந்திப்பு லண்டனில் இடம்பெற்றதாகவும், தொடர்ந்து தலைநகர் கொழும்பிலும், கொழும்புக்கு வெளியிலும் இடம்பெற்றதாக இப்போது தெரியவந்துள்ளது.

பல தடவைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மகி;ந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியிருந்த போதிலும் இவர்களுக்கிடையிலான ஒரேயொரு சந்திப்பு பற்றிய தகவல் மட்டுமே ஊடகங்களில் வெளிவந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து திட்டமிடப்பட்ட வகையில் திரைமறைவில் காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆட்சி மாற்றமானது ஓர் அரசியல் சதி முயற்சியாகவே நோக்கப்படுகின்றது.

நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக உள்ள இராணுவத்தினரே ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சிகளில் ஈடுபடுவர். இதுவே அரசியலில் வடமையாக இடம்பெறுகின்ற விடயமாக இருக்கும். சில வேளைகளில் குறிப்பிட்ட ஒரு தரப்பை ஆட்சியில் இருத்துவதற்காக அயல்நாடோ அல்லது அரசியல் இலாபத்தை அடையக் கூடிய நிலையில் உள்ள வேறு நாடுகளோ இத்தகைய அரசியல் சதியில் ஈடுபடுவதும உண்டு.

ஆனால் இலங்கையில் பதிவியில் அதுவும் அதியுச்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளித் தரப்பில் இருந்து இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது வியப்புக்குரியதாகவும் விமர்சனத்துக்கு உரியதாகவும் பதிவாகியிருக்கின்றது.

யுத்தத்தில் அடைந்த வெற்றியை அரசியல் மூலதனமாகக் கொண்டு எதேச்சதிகார போக்கில் ஆட்சி நடத்திய ஓர் அரசாங்கத்தை வீழ்த்தி, ஜனநாயகத்துக்குப் புத்துயிர் அளிக்கப் போவதாக உறுதியளித்து, மக்களுடைய ஆதரவில் ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு ஜனாதிபதியே தனது அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது சாதாரண மக்களை மட்டுமல்லாமல், அந்த ஆட்சி மாற்தத்திற்குத் துணையாக இருந்த அரசியல் சக்திகளையும் சீற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது.

இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது என்ற அரசியலமைப்பு விதியை 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் மாற்றியமைத்த முன்னாள் ஜனாதிபதி மகி;ந்த ராஜபக்ச, வாழ்நாள் ஜனாதிபதியாகவும், அரசியல் அதிகாரம் கொண்ட அரச பரம்பரையாக தனது குடும்பத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதே, 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாரம்பரிய ஆதரவாளராகவும் செயற்பாட்டாளராகவும் திகழும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியி;ன தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவராகப் பரிணமித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னணியில் இருந்து செயற்பட்டிருந்தார்கள்.

உயிராபத்துக்கள் மிகுந்த மிகவும் நெருக்கடியான ஒரு சூழலில் இவர்களுடைய அயராத முயற்சியின் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக, தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. அவ்வாறு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவரே, இரகசியமான முறையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியவர்களினால் இதனை – இந்த சதிமுயற்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிர்ச்சிக்கு உள்ளாகிய அவர்கள் அளவிலாத சீற்றத்திற்கும் உள்ளாகியிருக்கின்றனர்.

அச்சம் மிகுந்த அன்றைய சூழல்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிகண்ட இராணுவத்தினரை, அந்த வெற்றிக்கு மூலகாரணமாக இருந்து அரச படைகளை வழிநடத்திய அப்போதைய ஜனாதிபதி இராணுவ முனைப்புடைய ஒரு நிர்வாகத்தையே நடத்தி வந்தார். அவருக்கு எதிராக எவரும் வாய் திறப்பதற்கே அஞ்சியொடுங்கிய, பாதுகாப்பு கெடுபிடிகள் மிகுந்த ஒரு சூழல். அந்த சூழலில் அந்த ஜனாதிபதியைத் தலைவராகக் கொண்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த முக்கிய அரசியல்வாதியாகிய மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயற்பட்ட முக்கியஸ்தர்கள் மூவரும் தெரிவு செய்திருந்தனர்.

ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே, மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வேண்டும் என்று திட்டமிட்ட வகையில் 2015 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தார். இரண்டு தடவைகள் ஏற்கனவே பதவி வகித்திருந்த அவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று திட்டமிட்ட வகையில், முன்னெச்சரிக்கையாக அரசியலமைப்பில் திருத்தத்தைக் கொண்டு வந்து, தீவிரமாகச் செயற்பட்டிருந்தார். அத்தகைய ஒருவருக்கு எதிராகப் போட்டியிடப் போகின்ற பொது வேட்பாளர் யார் என்பது, பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் முன்கூட்டியே அப்பேர்து வெளியிடப்பட்டிருக்கவில்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அப்போதைய தலைவராகவும், ஜனாதிபதியாகவும் இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராகிய மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் என்பது இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்பட்டது, இந்த அறிவித்தல் மகிந்த ராஜபக்சவை வெகுண்டெழச் செய்திருந்தது.

அதற்கு முன்னைய ஜனாதிபதி தேர்தலில் அரச தலைவராகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வேட்பாளராகக் களம் இறங்கிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, தேர்தல் முடிவடைந்த சூட்டோடு சூடாக துரத்தித்துரத்தி வேட்டையாடப்பட்டார். இராணுவ சதி முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இராணுவ விசாரணைக்கும், சிவில் ரீதியான நீதிமன்ற விசாரணைக்கும் உள்ளாக்கி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய இராணுவ அந்தஸ்துக்குரிய அடையாளங்கள் பறித்தெடுக்கப்பட்டன. இத்தகைய ஒரு பின்னணியில்தான் மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருந்தார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதன் காரணமாக மகிந்த ராஜபக்ச என்ற அரசியல் கடும்போக்குடைய ஒருவருடைய சீற்றத்தில் இருந்து தப்பக் கூடியதாக இருந்தது.

இந்த பயங்கரமான சூழல் குறித்து, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேரதலில் தோல்வி அடைந்திருந்தால், ஆறடி மண்ணுக்குள் போயிருப்பேன். அந்த நிலைமையில் இருந்து சிறுபான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்களே எனக்கு ஆதரவாக வாக்களித்து, தேர்தலில் வெற்றி பெற்றதால் உயிர் தப்பினேன் என் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரே யாரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடும் என உயிரச்சம் கொண்டிருந்தாரோ, அவரையே பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மோசமான அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவருடைய இந்தச் செயலினால் பெரும் அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கின்றது.

இதனை வவுனியாவில் நடைபெற்ற தமிழசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் அணி மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வெளிப்படுத்தியுள்ளார்.

சிறுபான்மை தேசிய இனமக்களாகிய தமிழர்கள் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகமாக வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்திருந்தனர். அவ்வாறு வெற்றி பெற்ற அவர், ஒரு காலத்தில் அச்சத்துக்குரியவராகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததுடன், அவருக்கு பெரும்பான்மை பலத்தைக் காட்டுவதற்கான ஆள்பிடிக்கும் கைங்கரியத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய வியாழேந்திரனைக் கவர்ந்திழுத்து, அவருக்கு பிரதி அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

சீற்றத்தின் வெளிப்பாடு

இந்தச் செயல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி பெரும் கோபமடையவும் செய்துள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆற்ற முடியாத இந்த கோபம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமாகிய சுமந்திரனுடைய கூற்றில் வெளிவந்திருக்கின்றது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார். அந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததைப் போன்று ஒரு பேருரையையே ஆற்றியிருந்தார்.

அந்த உரையில் ஜனாதிபதி மீது ஆற்ற முடியாத வகையிலான சீற்றம் வெளிப்பட்டிருந்தது. அங்கு உரையாற்றிய அவர், ‘எங்களுடைய உப்பைத் தின்று வந்து, எங்களுடைய கட்சியிலே இருந்து ஒருவரைத் திருடி, அரை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்திருக்கின்ற, அந்த மோசமான செயலைச் செய்திருக்கின்ற ஜனாதிபதி நீ, உனக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுக்கப் போகிறோம்? எங்களுடைய மக்களைக் கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டு வந்தோம்? தேர்தலிலே தோற்றிருந்தால், ஆறடிக்குள்ளே நான் போயிருப்பேன் என்று சொன்னாயே, ஆறடிக்குள்ளே போகாமல் உன்னைக் காப்பாற்றியது, நாங்கள் அல்லவா? இன்று எங்களையே பிரித்துப் போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற, கபடமான ஜனாதிபதியாக மாறியிருக்கிறாய். இது உன்னுடைய அழிவுக்கு ஆரம்பம்’ என அவர் மிகுந்த ஆக்ரோஷமான தொனியில் தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதியதியாக இருப்பவரையே அரசின் அதியுயர்ந்த தலைவராகவும் முதன்மையான பிரஜையாகவும் கருதுவர். அத்தகைய பதவியில் இருப்பவர் தமது அந்தஸ்துக்கு உரிய வகையில் அவதானமாகவும் நாட்டு மக்களுக்குப் பொதுவானவராகவும் செயற்பட வேண்டியது அவசியம். அத்தகைய செயற்பாட்டின் மூலமே அவருடைய அந்தஸ்து கௌரவம் பெறும். அவருடைய மதிப்பும் உயர்ந்த நிலையில் இருக்கும். அந்த நிலையில் இருந்து தவறுவது சரியல்ல. இத்தகைய ஒரு நிலையில் இருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சீற்றம் வெளிப்பட்டிருக்கின்றது என்று கருத வேண்டியுள்ளது. அவ்வாறு கருதுவதில் தவறேதும் இருக்க முடியாது.

ஆயினும் ஜனாதிபதியாக இருக்கின்ற ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒருமையில் விளித்திருக்கக் கூடாது என்று கூட்டமைப்பைச் சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினராகிய சித்தார்த்தன் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சி மாற்றச் செயற்பாடானது பல்வேறு தரப்பினரையும், பல்வேறு வழிகளில் பாதித்திருக்கின்றது. உணர்ச்சி வசப்படச் செய்திருக்கின்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், நாடாளுமன்றத்தை நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையில் முடக்கியிருப்பது ஜனநாயகத்தின் மீது பற்றுள்ளவர்களையும் ஜனநாயகச் செயற்பாட்டாளர்களையும், ஜனநாயக வழியில் செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற அரசியல்வாதிகளையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

உள்நாட்டிலுள்ளவர்களை மட்டுமல்ல. சர்வதேச ஜனநாயகப் பற்றாளர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு அதிருப்தியடையவும், இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்குறித்து கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகப் பண்புகளைப் பேணுவதுடன், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உரிய மதிப்பளித்து அதற்கமைய நடந்து கொள்ள வேண்டும் என்றும் உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

இருப்பினும் ஜனாதிபதி தன்னுடைய நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என பிடிவாதமாகத் தெரிவித்திருந்த நிலையில், நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட்டுவதற்கே ஜனாதிபதி இணங்கி வந்துள்ளார்.

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ அல்லது அதற்காக தனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுத்த நிலையிலோ அவர் இரண்டு தினங்கள் முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு முன்வந்ததாகத் தெரியவில்லை. மாறாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நியமிப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை 14 ஆம் திகதியளவில் நிறைவு பெற்றுவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஜனாதிபதியின் முன்னைய முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

எது எப்படியானாலும், மைத்திரி மகிந்த கூட்டணிக்கும், ரணில் விக்கிரமசிங்க தரபபினருக்கும் இடையில் எழுந்துள்ள அரசியல் நெருக்குவார உணர்வுகளின் மத்தியில் அடுத்த வாரம் கூடவுள்ள நாடாளுமன்றம் கிட்;டத்தட்ட ஓர் அரசியல் போர்க்களமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த போர்க்களத்தில் நியாயமான, ஜனநாயக ரீதியிலான முடிவு ஏற்படுமா என்பதும் இப்போதைக்கு சந்தேகமாகவே உள்ளது.