அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இன்று இடம்பெற்ற சம்பவங்களை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் காவல்துறையினரால் சுடப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதற்கு முன்னர் வாயு போத்தல்கள் நிரம்பிய தனது காரை வெடிக்க வைத்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இதேவேளை குறிப்பிட்ட நபர் காவல்துறையினர் மீது தாக்குதலை மேற்கொள்ளமுயன்றவேளை அவர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்
குறிப்பிட்ட பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதையும் தங்களை தாக்க முயலும் நபர் ஒருவரை பொதுமக்கள் எதிர்த்து தாக்குவதையும் காண்பிக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் காவல்துறையினர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயல்வதையும் அதனை தொடர்ந்து அவர் நிலத்தில் விழுவதையும் காணொளிகள் காண்பித்துள்ளன.
ஸ்வான்ஸ்டன் வீதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது என்ற தகவலை தொடர்ந்து அந்த பகுதிக்கு நாங்கள் சென்றவேளையே இந்த சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் அவரது குடும்பத்தவர்களையும் தங்களிற்கு ஏற்கனவே தெரியும் எனவும் காவல்துறையினர் குறிப்பி;ட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பலர் நபர் ஒருவர் கத்தியை பயன்படுத்தி தாக்குவதை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
நபர் ஒருவர் கத்தியுடன் காவல் துறையினரை தாக்க முயல்வதை பார்த்தேன் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என மார்கெல் விலாசின் என்பவர் தெரிவித்துள்ளார்.