இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்படையுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா.
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இலங்கைப் படையினருடனான கூட்டுப் பயிற்சிகளே இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலைக் கடலில், அமெரிக்க கடற்படையின் சீல் என்று அழைக்கப்படும் சிறப்பு கொமாண்டோ அணியினர், இலங்கை கடற்படையினருடன், பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் 19 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 02 ஆம் திகதி வரை தொடரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடற்படையின் எஸ்.பி.எஸ். என்று அழைக்கப்படும், சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்கள், அதிவேகத் தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த கடற்படையினருடன் இணைந்தே இந்தப் பயிற்சிகளை அமெரிக்கா ஆரம்பித்திருக்கிறது.
திருகோணமலைக் கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில், இந்த கூட்டுப் பயிற்சி நடந்து கொண்டிருந்த போது, கடந்த 22ஆம் திகதி கடற்படைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இரு அமெரிக்க கடற்படையினர் மற்றும் ஆறு இலங்கைக் கடற்படையினர் பயணம் செய்த அந்தப் படகில் இருந்த ஏழு பேர் கடலில் குதித்து நீந்திக் கொண்டிருந்தபோது ஏனைய கடற்படைப் படகுகளால் காப்பாற்றப்பட்டனர்.
இந்த விபத்தினால் தான் அமெரிக்க — இலங்கை கடற்படைகளுக்கு இடையில் மீண்டும் இராணுவப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்ட விடயமே வெளியில் தெரியவந்தது.
இல்லாவிட்டால், இந்த விடயம் சில வேளைகளில் வெளியில் தெரியவராமல் கூடப் போயிருக்கலாம்.
ஏதோ காரணத்துக்காக அமெரிக்காவும் இலங்கையும், இந்தக் கூட்டுப் பயிற்சி பற்றிய தகவல்களை மறைத்திருந்தன.
இப்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், இந்தக் கூட்டுப் பயிற்சி பற்றிய தகவலை அமெரிக்கா அதிகாரபூர்வமாக இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த கடற்படையினரே இந்தப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும், பசுபிக் கட்டளைப் பீடத்தின் எந்த தகவல் மூலத்திலும் அதுபற்றிய குறிப்புகள் இந்தப் பத்தி எழுதப்படும் வரை வெளியிடப்படவில்லை.
அதுபோல, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமோ இதனை வெளிப்படுத்தவும் இல்லை.
இதிலிருந்து இந்தக் கூட்டுப் பயிற்சி பற்றிய தகவல்கள் வெளியாவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை உணர முடிகிறது.
அதேவேளை, இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்புச் சார் கொள்கையில் முக்கியமான மாற்றங்கள், அண்மைய மாதங்களில் நிகழ்ந்திருக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கடந்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, ஏப்ரல் 19ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க, கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகியோரைக் கொண்ட குழுவினர், அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமானந்தாங்கி கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை நிறுத்தியிருந்த அமெரிக்கா, தனது விமானந்தாங்கிக் கப்பலுக்கு இலங்கை அதிகாரிகளை அழைத்துச் சென்றது, முக்கியமான மாற்றம் ஒன்றுக்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் கொழும்புக்கான பயணத்தை அடுத்து, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் விளைவாக, அமெரிக்க கடற்படை கூட்டுப் பயிற்சிகளை மீளவும் ஆரம்பிக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.
இலங்கைப் படையினருடன், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தனியே மனிதாபிமான, அனர்த்த மீட்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு விடயங்களில் மட்டுமே ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது.
1997ஆம் ஆண்டு தொடக்கம் பலன்ஸ் ஸ்ரைல் என்ற பெயரில், இலங்கைப் படையினருடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது.
குறிப்பாக, காட்டுப் போர் முறை, சிறிய குழுவாக ஊடுருவித் தாக்குதல் நடத்துவது போன்றவற்றை இலங்கை இராணுவத்துக்கு கற்றுக் கொடுத்தது அமெரிக்காவின் சிறப்பு கொமாண்டோக்கள் தான்.
இந்தப் பயிற்சிகளின் ஊடாக உருவாக்கப்பட்டதே இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணிகளாகும்.
*விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு வந்த அமெரிக்கா, கடந்த சில ஆண்டுகளாக ஏதோ பெயருக்கு சில கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் பங்கேற்றது.
அண்மைய ஆட்சி மாற்றத்தின் பின்னர், அமெரிக்காவின் போக்கில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இதற்கு வலுவான உதாரணம், அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட, தீவிரவாதம் தொடர்பான 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையாகும்.
இந்த அறிக்கையில், இலங்கையுடனான தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறதே தவிர, எதற்காக மட்டுப்படுத்தப்பட்டது என்ற விபரங்கள் ஏதும் பதிவாகவில்லை.
ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட தீவிரவாதம் தொடர்பான அறிக்கையிலும், 2013 ஆம் ஆண்டில், இலங்கையுடனான கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்று கூறப்பட்டிருந்தது.
எனினும் அதற்கான காரணம் கடந்த ஆண்டு அறிக்கையில் விரிவாக கூறப்பட்டிருந்தது.
அதில், “உள்நாட்டுப் போரில், விடுதலைப் புலிகளாலும், அரசாங்கத்தினாலும், இழைக்கப்பட்ட கொடூரங்கள் மற்றும் அனைத்துலக சட்ட மீறல்கள் தொடர்பான பரவலான குற்றச்சாட்டுகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இதன் விளைவாக, 2013இல் அமெரிக்காவுடனான தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு அறிக்கையில், அவ்வாறான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் எடுக்கப்படவில்லை.
இதனால் தான் இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், எதற்காக பாதுகாப்பு ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்தாமலேயே இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.
இந்த ஒரு விடயத்தில் இருந்து பாதுகாப்பு விடயங்கள் சார்ந்த அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள முடிகிறது.
இது இலங்கைப் படையினருக்கு ஊக்கமளிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக அமையலாம்.
கடந்த காலங்களில், குற்றச்சாட்டுகளுக்குள்ளான படை அதிகாரிகளுக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா தவிர்த்திருந்தது. அதுபோல போர்ப்பயிற்சிகளையும் நிறுத்தியிருந்தது.
இலங்கை அரசாங்கம் இன்னமும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், அமெரிக்கா தனது பிடியைத் தளர்த்தத் தொடங்கியிருப்பது, இந்த விவகாரத்தில் இலங்கை மீதான மேற்குலக அழுத்தங்கள் குறைக்கப்படுவதாக அர்த்தப்படுத்தப்படலாம்.
அத்தகைய நிலை, போர்க்குற்றங்களுக்கு நீதி கோரும் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.
எனினும், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விவகாரத்தில், அமெரிக்கா எந்தளவுக்கு உறுதியுடன் இருக்கப் போகிறது என்பது, வரும் செப்ரெம்பர் மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியாகும் போது தெரியவரும்.
– வீரகேசரி