நான் குற்றமற்றவன்! -நிஸாம்தீன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னர், குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு அவுஸ்திரேலிய காவல் துறயால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நான் மாணவர் வீசாவில் இருந்ததுடன், ஆசிய பிரஜையாக இருந்தமையே காரணமாகும் என அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பிரஜை கமர் நிஸாம்தீன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா பிரஜையான கமர் நிஸாம்தீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

நேற்று புதன்கிழமை ஷங்-ரி-லா ஹோட்டலில் அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

எனக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்புள்ளதாகக் குறிப்பிட்டு அவுஸ்திரேலிய காவல் துறையால் கைது செய்யப்பட்ட எனக்கு செப்டெம்பர் 28 ஆம் திகதி பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் விசாரணைகளின் மூலம் நான் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை என்ற விடயம் நிரூபிக்கப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி அவுஸ்திரேலிய காவல் துறையால் விடுவிக்கப்பட்டேன்.

குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக அமைந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து அல்ல என கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணர்கள் இருவரால் நிரூபிக்கப்பட்டது. அத்தோடு குற்றச்சாட்டுடன் தொடர்புடைய குறிப்புப் புத்தகம் என்னுடைய அறையில் அல்லாது வேறொரு அறையில் இருந்து கிடைக்கப்பெற்றமை நான் குற்றமற்றவன் என நிரூபனமாவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.