அஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் வேகமாக சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சரக்கு தொடருந்து 268 பெட்டிகளைக் கொண்டுள்ளது. அது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓட்டுநரில்லாமல் பயணித்துள்ளது.
அந்த தொடருந்து தடம் புரண்டதில் சுமார் 1,500 மீட்டர் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.அந்த ரயில் சுரங்க நிறுவனமான BHPக்குச் சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக ஒருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
ஓட்டுநரில்லா தொடருந்தில் விபத்து நேரக்கூடுமென அஞ்சிய நிறுவனம், வேண்டுமென்றே தண்டவாளத்தில் மாற்றம் செய்து தொடருந்தை தடம் புரளச் செய்தது.
2 கிலோமீட்டர் நீளமுள்ள தொடருந்தின் ஒரு பெட்டியைச் சோதனை செய்ய ஓட்டுநர் வண்டியிலிருந்து இறங்கியிருக்கிறார்.
அப்போது அவரில்லாமலேயே ரயில் நகரத் தொடங்கியிருக்கிறது. ஓட்டுநரில்லாமல் ரயில் எப்படி நகர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக BHP தெரிவித்துள்ளது. அந்தச் சரக்கு தொடருந்தில் இரும்புத் தாது ஏற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.