19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கான முயற்சியாகவே ஜனாதிபதியின் செயற்பாட்டினை பார்க்க முடியும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்தவொரு விடயமாகின்றது. அவ்வாறிருக்கையில், 19ஆவது திருத்தச்சட்டத்தினையும் உள்வாங்கிய அரசியலமைப்பில் இரண்டு தனித்தனியான இடங்களில் பிரதமரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும், பிரதமர் பதவியை இழப்பதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றன.
நீக்கும், நியமிக்கும் அதிகாரம்
அரசியலமைப்பில் உள்ள 42ஆவது உறுப்புரையின் 4ஆம் உபபிரிவின் பிரகாரம், பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றவர் என ஜனாதிபதியால் கருதப்படும் ஒருவரை பிரதமராக அவர் நியமிக்க முடியும். இது சனாதிபதிக்கு பிரதமரை நியமிப்பதற்காக காணப்படும் அதிகாரமாகும். அரசியலமைப்பின் 46ஆவது உறுப்புரையின் இரண்டாம் உப பிரிவின் பிரகாரம், பிரதமர் பதவி இழக்கும் விடயத்தில் ஜனாதிபதிக்கு எவ்விதமான வகிபாகமும் கிடையாது. அவ்வுறுப்புரையின் பிரகாரம் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதாயின், பிரதமர் பதவியில் உள்ளவர் தன்னுடைய கைப்பட இராஜினாமாக்கடிதத்தினை எழுத வேண்டும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டும்.
அமைச்சரவை தொடர்ந்து செயற்படும் பட்சத்தில் பிரதமர் தனது பதவியில் நீடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது புதிய பிரதமர் நியமனமானது அரசியலமைப்பினை முற்றாக மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. அமைச்சரவை எப்போது கலையும்?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக அமைச்சரவை இல்லாது போய்விட்டது. அதனால் புதிய அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக வாதமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை எப்போது கலையும் என்ற விடயம் அரசியலமைப்பின் 48ஆவது உறுப்புரையின் 2ஆம் உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், பிரதமர் இறக்கும்போதோ அல்லது இராஜினாமாச் செய்யும்போதோ அமைச்சரவை கலைக்கப்பட்டதாக கொள்ளப்படும்.
அதனைவிடவும் ஜனாதிபதியால் ஆற்றப்படுகின்ற அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை பாராளுமன்றம் நிராகரிக்கின்ற சந்தர்ப்பத்திலும் அல்லது ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு – செலவுத் திட்டம்) தோல்வியடைகின்றபோதும் அமைச்சரவை கலைக்கப்பட்டாகிவிடும். இல்லையேல், பிரதமர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது மேற்படி சம்பவங்கள் எவையுமே அண்மைக்காலத்தில் நிகழ்ந்திருக்கவில்லை.
அவ்வாறான தருணத்தில் எவ்வாறு அமைச்சரவை கலைக்கப்பட்டதாகக் கருத முடியும்? புதிய பிரதமரை நியமிக்க முடியும்? அவ்வாறு நியமிக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணானதாகும். தேசிய அரசாங்கம் நீடிக்கிறது
19ஆவது திருத்தச்சட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 30பேரும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் 40பேரும் மாத்திரமே இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தாலும், தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுகின்றபோது இந்த வரையறைகள் மாற்றமுறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசியஅரசாங்கத்தில் இருந்த ஒரு கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதால் தற்போது தேசிய அரசாங்கம்
இல்லை என்றும் ஆகவே அரசியலமைப்பு விதந்துரைக்கும் அதிக பட்ச அமைச்சர்களைத் தாண்டி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை இருப்பதால் அது கலைந்ததாக கருதப்பட வேண்டும் என்ற விநோதமான வாதம் சொல்லப்படுகின்றது. எனினும் உண்மையில் தேசிய அரசாங்கம் கலைந்து விட்டதா என்ற கேள்வியுள்ளது. 46ஆவது உறுப்புரையின் 4ஆம், 5ஆம் உபபிரிவுகளில் தேசிய அரசாங்கத்திற்கான வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதன்படி, பெரும்பான்மை ஆசனங்களைப்
பெற்றுள்ள கட்சியானது ஏனைய கட்சிகளுடன் அல்லது சுயேட்சைக் குழுக்களுடன் இணைந்து ஆட்சியமைப்பு தேசிய அரசாங்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினாலும் தற்போது பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே காணப்படுகின்றது. அக்கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்துள்ளமையால் தேசிய அரசாங்கம் நீடிக்கின்றது என்றும் தர்க்க ரீதியாக கொள்ள முடியும்.
ஆகவே,இந்த விடயங்களை வைத்துப்பார்க்கின்றபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ ஆகிய தரப்புக்களின் விவாதங்கள் எந்தவிதமான அடிப்படையற்றவை என்று கூற முடியும். பாராளுமன்றக் கலைப்பும் ஒத்திவைப்பும் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தினைக் கலைக்க முடியாது. அதன்பின்னர் கலைப்பது என்றால் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை வசியமாகின்றது.
பாராளுமன்றத்தினை கூட்டுதல் மற்றும் ஒத்திவைத்தல் தொடர்பில் பார்க்கின்றபோது, அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரை ஆகியவற்றுக்கு கீழே ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கும், ஒத்திவைப்பதற்குமான அதிகாரம் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில், சபாநாயகரை கலந்தாலோசித்தே பாராளுமன்றத்தினை ஒத்திவைத்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியால் வாதம் செய்யப்படுகின்றது.
கேள்வி எழுப்பும் கடந்தகால அனுபவம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றத்தினை சந்திரிகாஒத்திவைத்திருந்தார். அந்த மாதத்தின் 12ஆம் திகதி மீண்டும் சபாநாயகராகவிருந்த ஜோசப் மைக்கல் பெரேரா பாராளுமன்றத்தினைக் கூட்டியிருந்தார். அதன்போது சார்ச்சைகள் எழுந்தன. இருப்பினும், 70ஆவது சரத்தின் ‘சி’ பிரிவும் 71ஆவது சரத்தும் ‘சட்டவாக்கம் நடைமுறைகள் மற்றும் அதிகாரம்’ என்ற தலைப்பின் கீழ் காணப்படுவதால் அது நிறைவேற்று அதிகாரத்திற்கு மட்டுமேயான ஏற்பாடு அல்ல. பாராளுமன்றத்தினையும் உள்ளடக்கிய ஏற்பாடாகும் என்ற வாதத்தினையும் முன்வைத்திருந்தார். ஆகவே, சபாநாயகருக்கு பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான அதிகாரம் உள்ளது என்ற அபிப்பிராயத்தினையும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை மையப்படுத்தியே தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும் பாராளுமன்றத்தினை கூட்டுவது அல்லது ஒத்திவைப்பதற்கு சபாநாயகருக்குரிய அதிகாரம் தொடர்பில் வாதங்களை முன்வைக்கின்றது. 2003இல் அப்போதைய சபாநாயகரின் அபிப்பிராயத்தை வைத்துக் கொண்டு இது வாதிடப்படுகின்றது. ஆனாலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தினை ஒத்திவைப்பதாயின் சபாநாயகருடன் கலந்தாலோசிக்க வேண்டும்
என்று அரசியலமைப்பில் வெளிப்படையாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நிலைப்பாடானது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாயினும் அரசியலமைப்பு ரீதியாக வலுக்குறைந்த வாதமாகும். பிரதமரை நீக்க முடியாது, நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தினை கலைக்க முடியாது என்று 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் ரணில் விக்கிரமசிங்க புத்திசாலித்தனமாக அரசியலமைப்பை மாற்றியிருந்தாலும் பாராளுமன்றத்தினை ஒத்திவைக்கும் அதிகாரத்தினை மட்டும் ஜனாதிபதியிடத்தில் ஏன் விட்டு வைத்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது.
பலப்படுத்தப்படும் நிறைவேற்று அதிகாரம் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் தற்துணிவான அதிகாரங்கள் குறைப்புச் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரத்திற்கு இரண்டாம் பட்சமானது என்ற நிலைப்பாட்டினை 19ஆவது திருத்தம் மாற்றியமைத்துள்ளது. அத்தகைய நிலையில் தற்போது ஜனாதிபதியின் செயற்பாடுகள் நிறைவேற்று அதிகார முறைமை தான் அரசியல் ரீதியில் பலமானது என்பதை காட்டுவதற்கு முயற்சிகள் எடுத்துள்ளார் என்று கூறலாம். 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் சிறகுகள் கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அரசியலமைப்பு முரணாக செயற்பட்டு அரசியல் ரீதியாக பலம்வாய்ந்ததாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சியாகவும் கருதமுடியும்.