நாடாளுமன்ற கூட்டத்தொடரை பிற்போடும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்த கட்டளை அடங்கிய அதி விசேட வர்த்தமானியை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியாது என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார்.
சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா இதனை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை ஒத்திவைத்து ஜனாதிபதி இட்ட கட்டளை உள்ளடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி பொது நல வழக்குகளை தொடுக்கும் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம், சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அரசியலமைப்பின் 12(1) ஆம் அத்தியாயம் மீறப்பட்டுள்ளதாகவும், அதனால் குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து உத்தரவிடுமாறும் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு கோரியுள்ளார்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த அடிப்படை ஆட்சேபத்தை பதிவு செய்தே சட்ட மா அதிபர் குறித்த வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்த முடியாது என சுட்டிக்காட்டி, அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரினார்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான சிசிர டி ஆப்றூ மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பொறுப்புக்கூறத்தக்க தரப்பாக பெயரிடப்பட்டிருந்த ஐ.தே.க. தலைவர் ரணில் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
மற்றொரு பொறுப்புக்கூறத்தக்க தரப்பாக பெயரிடப்பட்டிருந்த சட்ட மா அதிபர் சார்பில் நேற்று மன்றில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போதே அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த அடிப்படை ஆட்சேபத்தை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா, ஜனாதிபதியின் கட்டளைகளை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டி, பாராளுமன்றத்தை ஒத்திவைத்து அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சுட்டிக்காட்டினார். அதனால் அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி செய்யவும் கோரியமை குறிப்பிடத்தக்கது.