இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்?

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோரை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், இலங்கையில் இரண்டு பிரதமர்களும், இரண்டு பிரதமர் அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. 2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றமும் வெளிநாட்டு சதியென்றுதான் வர்ணிக்கப்பட்டது. தற்போது மகிந்தவின் மீள்வருகையும் வெளிநாட்டு சதியென்றே கூறப்படுகிறது. சதிகளை நம்பி அரசியல் செய்தால் மீண்டும் மீண்டும் சதிகளுக்கே முகம்கொடுக்க வேண்டிவரும் போலும்.

இலங்கையில் இடம்பெறும் அரசியல் குழப்பநிலைகளை வெளிநாட்டு சதியாக குறிப்பிடுவதும் கூட, ஒரு வகையான அரசியல்தான். இவ்வாறான அரசியல் குற்றச்சாட்டுக்களுக்கு எப்போதுமே ஆதாரங்கள் இருப்பதில்லை. இவைகள் பொதுவாக ஊகங்களாவும், அனுமானங்களாகவுமே இருப்பதுண்டு. எனவே இவற்றை முன்னிலைப்படுத்தி சிந்திக்க முற்பட்டால், நமக்கு முன்னாலிருக்கும் பிரதான சவால்களை நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். ஒரு வேளை சிலர் கூறுவது போன்று இவ்வாறான நிகழ்வுகள் வெளிநாட்டு தலையீடுகளின் விளைவுதான் என்றால், அதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில் அது நமது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே பின்னாலிருக்கும் விடயங்களை விட்டுவிட்டு, முன்னால் தெரிகின்ற விடயங்களை எவ்வாறு கையாளுவது என்று சிந்திப்பதுதான் சரியானது.

அரசியல் யாப்பு சதிக் குற்றச்சாட்டுக்களை ஒரு புறமாக வைத்துவிட்டு, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கவனத்தை செலுத்தினால் நமக்கு முன்னாலிருக்கும் – இருக்க வேண்டிய ஒரேயொரு கேள்வி – இந்த நிலைமையை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகிறது? அதாவது, நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்தாலும் இந்தக் கேள்விகள் அவருக்குமானதுதான்.) இந்த நிலைமையை எவ்வாறு கையாளப் போகிறது, அதாவது சம்பந்தன் எவ்வாறு கையாளப் போகின்றார்?

நடைபெறுகின்ற விடயங்களின் அடிப்படையில் நோக்கினால், இரண்டு தரப்புக்களும் கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்க்கின்றன. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கூட்டமைப்பு என்பது பாராளுமன்றத்தில், ரணிலின் செல்லப்பிள்ளையாகவே இயங்கிவந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில் பார்த்தால் சம்பந்தன் (சுமந்திரன்) ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாக நிற்பதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. ஆனால் தங்களின் முடிவை நியாயப்படுத்துவதற்கான ஒரு துரப்புச்சீட்டாக, தற்போது எவர் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைள் தொடர்பில் எழுத்து மூலமாக உத்தரவாதம் அளிக்கின்றனரோ, அவர்களுக்கே தங்களது ஆதரவு என்று சம்பந்தன் கூறிவருகின்றார். சம்பந்தன் இது தொடர்பில் இரு தரப்பினருடனும் பேசியுமிருக்கிறார். முக்கியமாக மகிந்தவிடம் எழுத்து மூலமான உடன்படிக்கை தொடர்பில் பேசியுமிருக்கிறார். ஆனால் அதனை மகிந்த நிராகரித்துவிட்டார். இதே போன்று ரணிலும் எழுத்து மூல உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எழுத்துமூல உடன்பாட்டுக்கு உடன்பட மாட்டார்கள் என்பது சம்பந்தனுக்கும் தெரியாத ஒன்றல்ல ஆனால் மகிந்தவிற்கு ஆதரவு வழங்குவதை தவிர்ப்பதற்காக இவ்வாறானதொரு துருப்புச் சீட்டை சம்பந்தன் கையாள முற்படுகின்றார். சம்பந்தன் இவ்வாறு பேசிவருகின்ற சூழலில், சுமந்திரனோ, ஜனாதிபதியின் செயல் அரசியல் யாப்புக்கு முரணானது எனவே ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவேண்டும் என்றவாறு பேசிவருகின்றார். இதன் மூலம், அரசியல் யாப்புக்கு உட்பட்டு செயற்படும் ரணிலுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்பதுதான் சுமந்திரனின் வாதத்திற்குள் ஒளிந்திருக்கும் திட்டம். ஆனால் இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால், இந்த அரசியல் யாப்பைத்தானே நாங்கள் தவறு என்று கூறிவருகிறோம். புதிய அரசியல் யாப்பொன்று தேவை என்கிறோம். பின்னர் எதற்காக பிழையான ஒரு அரசியல் யாப்பு தொடர்பில் கூட்டமைப்பு கரிசனை காட்ட வேண்டும்? உண்மையில் இதற்கு பின்னாலுள்ள, நிகழ்ச்சிநிரல் வேறு அதாவது, எழுத்து மூல உடன்பாடு என்று கூறிவிட்டு, இறுதியில் பாராளுமன்றம் கூடியதும், ரணிலுக்கு ஆதரவாக செயற்படுவதுதான் சம்பந்தனின் திட்டம்.

உண்மையில் சம்பந்தன் இதில் எவ்வாறானதொரு அனுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்? எவ்வாறானதொரு அனுகுமுறையை மேற்கொண்டால் அது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்கும்? இதில் கூட்டமைப்பு எவர் பக்கமாக நின்றால் அது தமிழ் மக்களுக்கு நன்மையானது?

மூன்றாவது கேள்விக்கான பதிலில், முதல் இரண்டு கேள்விகளுக்குமான பதிலும் இருக்கிறது. இந்த குழப்ப நிலைமை என்பது கொழும்பின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதுடன் தொடர்பான ஒன்று. தற்போதுள்ள நிலையில் இந்த பலப்பரிட்சையில் எவர் வென்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவும் நடைபெறாது. உதாரணமாக கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைத்தாலும் கூட, அதன் பின்னர் மைத்திரிபாலசிறிசேன எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்பாட்டின் போது, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்தது போன்றதொரு, நிலைமையே மீண்டும் ஏற்படும். மகிந்த எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். ரணிலின் அனைத்து முயற்சிகளையும் மைத்திரி-மகிந்த கூட்டாக தோற்கடிப்பர்.

இவ்வாறானதொரு சூழலில், கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பதால், அரசியல்ரீதியான நன்மை என்ன? இவ்வாறு நான் குறிப்பிடுவதால் இந்தப்பத்தியாளர் மகிந்தவின் வரவை ஆதரிக்கின்றார் என்று சிலர் தங்களுக்குள் எண்ணிக்கொள்ளக் கூடும். அப்படி எண்ணினால் அது தவறு. இப்பத்தியாளர் நபர்கள் தொடர்பில் அல்ல மாறாக சூழ்நிலை தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றார். சம்பந்தன் நபர்கள் தொடர்பில் நம்பிக்கை வைத்தே ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவளித்திருந்தார். ஆனால் அதில் இன்று படுதோல்வி அடைந்திருக்கிறார். ஏனெனில் அரசியலில் நபர்கள் என்பவர்கள், எப்போதுமே தாங்கள் எதிர்கொள்ளும் புதிய நெருக்கடிகளுக்கு அமைவாகவே முடிவுகளை எடுப்பர். தமிழ் தேசிய இனத்தின் சார்பில் முடிவுகளை எடுக்கக் கூடிய இடத்திலிருந்த சம்பந்தனிடம், இது தொடர்பில் ஒரு தெளிவான புரிதல் இருந்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனிடம் அப்படியேதும் இருந்திருக்கவில்லை. சம்பந்தனோ, அனைத்தையும் அரசியல் அனுபமில்லாத சுமந்திரனிடம் விட்டுவிட்டு, எதிர்க்கட்சி கதிரை தந்த சுகமான சூட்டில் திழைத்திருந்தார். இன்று நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது.

அப்படியானால் ஒரு கேள்வி எழலாம். இப்போது சம்பந்தன் என்ன செய்ய வேண்டும்? இப்போது செய்ய வேண்டியது ஒன்றுதான், அதாவது, தெற்கின் அதிகார மோதலிலிருந்து முற்றிலுமா விலகியிருப்பது. அவர்களது அதிகார மோதல்களை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். இந்தப் பிரச்சினையில் சம்பந்தன் ஒரு பக்கம் சாயும் முடிவை எடுத்தால் நிச்சயம் மற்றைய தரப்பினர் விரோதிப்பர். ஒரு வேளை அந்தத் தரப்பு மகிந்தவாக இருந்தால் இனி வரப்போகும் ஒன்றரை வருடங்களில் அரசியல் ரீதியில் எந்தவொரு விடயத்தையும் இலங்கையில் முன்னெடுக்க முடியாது. அதே வேளை, எதிர்காலத்திலும் அரசியல் ரீதியில் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். தற்போதுள்ள நிலைமையை உற்று நோக்கினால், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஜக்கிய தேசியக் கட்சி பெருவாரியான வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புக்கள் எதுவுமில்லை. எனவே இவ்வாறானதொரு சூழலில் சிங்கள அதிகார மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், ஒரு தரப்பை பாதுகாப்பதில் ஏன் கூட்டமைப்பு ஈடுபட வேண்டும்?

கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த சம்பந்தன் – சுமந்திரன் தரப்பின் அரசியல் நகர்வுகள் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. அது தோல்வியடைந்துவிட்டது என்பதற்கும் அப்பால், இலங்கைத் தீவில், தமிழர்கள் ஒரு தனித் தரப்பு என்னும் நிலையிலிருந்தும் கணிசமாக கீழிறக்கப்படுவதற்கும் சம்பந்தன் தரப்பே காரணமாகவும் இருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில் மேலும் தமிழர்களை பலவீனப்படுத்தும் முடிவுகளை எடுப்பவர்கள் எவரும் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்கவும் முடியாது. இந்த சந்தர்ப்பத்திலாவது சம்பந்தன் தனது சுயநல அரசியலிலிருந்து விலகி, தமிழ் மக்களின் தலைவராக நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த மூன்று வருடங்களாக சம்பந்தன் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் தலைவராக இருக்கவில்லை. அரசியலிலிருந்து ஓதுங்க வேண்டிய நிலையிலிருக்கும் சம்பந்தன் தனது இறுதிக்காலத்திலாவது சரியான முடிவை எடுக்க முன்வர வேண்டும். வரலாற்றில், அரசியல் நிகழ்வுகள் மாறி மாறி நிகழும். அது பாதகமாகவும் சாதகமாகவும் வரலாம். ஒவ்வொரு சூழலையும் சரியாக கையாளுவதில்தான் ஒரு இனத்தின் அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

யதீந்திரா