மோடிக்கு புதிய தலையிடியைக் கொடுக்கும் ராஜபக்ச மீள்வருகை!

சீனா  மீது பற்றுக்கொண்ட ஜனாதிபதி அப்துல்லா யாமீன் மாலைதீவில் பதவியில் இருந்து அகற்றப்பட்டதையடுத்து இந்தியா நிம்மதிப்பெருமூச்சு விட்டு நீண்ட நாட்கள் செல்லவில்லை, அதற்குள்ளாக இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்கள் கடும்போக்காளர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கின்றன. இது மோடி அரசாங்கத்துக்கு புதிய தலையிடியை கொடுக்கப்போகிறது.

 

பூகோளரீதியில் தமிழ்நாட்டுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும் இலங்கையில் பாரிய கேந்திரமுக்கியத்துவ நலன்களை இந்தியா கொண்டிருக்கிறது.அந்த தீவில் குறிப்பாக, விடுதலை புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பகுதிகளில் இந்தியா பெருமளவில் முதலீடுகளைச் செய்திருக்கிறது.இலங்கையின் வடபகுதியில் தமிழர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது தொடக்கம் ரயில் பாதைகளை அமைத்தல், ஆலயங்கள் மற்றும் வரலாற்றுப் பெருமைமிக்க யாழ்ப்பாண பொது நூலகத்தை புனர்நிர்மாணம் செய்தல் வரை கவனத்தைப் பெரிதும் ஈர்த்த பணிகளை இந்தியா செய்திருக்கிறது.

ராஜபக்ச கடும்போக்காளர் மாத்திரமல்ல, சீனாவுக்குச் சார்பானவரும் கூட.இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய பெரும் ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.இத்தடவை பிரதமராக அவர் அதிகாரத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு மிகவும் அசௌகரியத்தைத் தரக்கூடியதாக சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடிய சகல வாய்ப்புகளும் இருக்கின்றன.

சீனா மீதான ராஜபக்சவின் அதீத ஈடுபாடு இந்தியாவின் கோடிப்புறத்தில் சில நிலப்பகுதிகளை வேதாளம் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் ஏற்கெனவே ஏற்படுத்தியது.அதாவது வாங்கிய கடனை கொழும்பு திருபபிச் செலுத்தத் தவறியதால் தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை பெய்ஜிங் அதன் உடமையாக எடுத்துக்கொண்டது. ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் உலகின் மிகவும் மும்முரமான கப்பல் போக்குவரத்து கடல்பாதையில் அமைந்திருக்கும் இந்த புத்தம் புதிய துறைமுகம் பிராந்தியத்தில் கேந்திரமுக்கியத்துவ மேல்நிலையை சீனாவுக்கு கொடுக்கிறது.

சீனாவுக்கும் அதன் நிறுவனங்களுக்கும் மகிந்த ராஜபக்ச மீண்டும் செங்கம்பளம் விரிப்பாரேயானால் இந்தியா இழப்பதற்கு நிறையவே  இருக்கிறது. அதேவேளை அதிகார அரசியலுக்குள்  அவரின் மீள்வருகையினால் சீனா பெருமளவுக்குப் பயனடையும்.பிரதமராக ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவரை முதன்முதலாக சந்தித்து வாழ்த்துக்கூறிய வெளிநாட்டு இராஜதந்திரி இலங்கைக்கான சீனத் தூதுவரே என்பது குறிப்பிடத்தக்கது.2015 ஆம் ஆண்டில்  தன்னைப் பதவியில் இருந்து தூக்கியெறிவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் மைத்திரிபால சிறிசேனவுடனும் சேர்ந்து இந்தியா சதி செய்ததாக ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.இத்தடவை தங்களை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சதியில் சீனாவுக்கு பங்கு இருப்பதாக விக்கிரமசிங்கவும் அவரது சகாக்களும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆடட்சியின் கீழும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் கீழும் இந்தியா  ராஜபக்சவுடன் விவகாரங்ளைக் கையாளுவதில் பெரும் கஷ்டங்களை சந்திக்கவேண்டியிருந்தது. அவரை நம்பமுடியும் என்று இந்தியத் தலைவர்கள் ஒருபோதும் உணரவில்லை.ராஜபக்சவின் அரசாங்கம் புதுடில்லியிடமிருந்து கடனாகவும் உதவியாகவும் கோடிக்கணக்கில் பெற்றபோதிலும், மிகுந்த ஆதாயமுடைய பல திட்டங்களை சீனாவுக்கே ” பரிசாக ” கொடுத்தது.

போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்ப உதவுவதில் இந்தியா தன்னை அர்ப்பணித்திருந்த போதிலும் பௌத்தர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாட்டில் தாங்களும் ஒரு பகுதியினரே என்று தமிழர்களை உணரச்செய்யக்கூடியதாக அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயத்தில் ராஜபக்ச ஏமாற்றிக்கொண்டே வந்ததால் இந்திய குழப்பமடைவதற்கு காரணங்கள் இருந்தன.

சிறுபான்மையினத்தவர்களான தமிழர்களுடன் உண்மையான நல்லிணக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கு ராஜபக்ச அளித்த வாக்குறுதிகளை அவர் காப்பாற்றாவிட்டாலும் தற்போதைய ஜனாதிபதி சிறிசேன அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பாடுபடுவார் என்று இந்திய நினைத்தபோதிலும்கூட, அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் மற்றும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துதல் என்று வரும்போது ராஜபக்சவை விடவும் துளியளவேனும் அவர்  சிறந்தவர் அல்ல என்பதைப் புரிந்துகொள்வதற்கு நீண்டநாள் எடுக்கவில்லை.

அரசியல் தீர்வொன்று தமிழர்களிடமிருந்து இன்னமும் நழுவிக்கொண்டேயிருக்கிறது என்பதை சிறபான்மைச் சமூகத்துக்கு அளித்த சகல வாக்குறுதிகளையும் கொழும்பு அலட்சியம் செய்துகொண்டே வந்திருக்கிறது என்று கடந்தவாரம் வரை வடமாகாண முதலமைச்சராக பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரன் அடிக்கடி விடுத்த அறிக்கைகளின் மூலம் விளங்கிக்கொள்ளமுடியும்.

இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவரும் அதனுடன் உன்னதமான உறவுகளை விரும்புபவருமான மிதவாதி விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து சம்பிரதாயபூர்வமற்ற முறையில் அகற்றியதன் மூலமாக ஜனாதிபதி சிறிசேன இலங்கை எந்தப்பக்கம் சாய்ந்துநிற்கவேண்டுமென்ற தனது விருப்பத்தை துலாம்பரமாகக் காண்பித்திருக்கிறார்.தன்னைக்கொலை செய்வதற்கு இந்தியா சதித்திட்டம் தீட்டுகிறது என்று குற்றஞ்சாட்டியதன் மூலமாக தங்களது உள்நாட்டு அரசியலுக்குள் இந்தியாவை இழுத்துவிட்டிருக்கிறார்.அத்துடன் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய ஒரு வாரத்திற்குள் அவரை பதவிநீக்குவதற்கான அரசியல் சதி அரங்கேற்றப்பட்டிருந்தமை இராஜதந்திர மற்றும் அரசியல் வட்டாரங்களில பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இலங்கை நிகழ்வுப்போக்குகளை பொறுத்திருந்து பார்ப்பதற்கு இந்தியா தீர்மானித்திருந்தாலும், மாலைதீவு சீனாவின் கைகளுக்குள் போய்விழுவதற்கு அனுமதித்ததைப் போன்று அது ஒரு  உறங்குநிலைக்குச் சென்றுவிடக்கூடாது.இலங்கையில் சீனாவின் பிரசனனத்தை மட்டுப்படுத்துவதறகு புதுடில்லி அதன் இராஜதந்திர வழிமுறைகளை துரிதப்படுத்தவேண்டும்.இலங்கையில் கட்டயெழுப்பியிருக்கும் பொருளாதார நலன்களுக்காக மாத்திரமல்ல , முற்றுகைக்குள்ளாகியிருக்கும் தமிழர்கள் மீதான தார்மீகக் கடப்பாட்டுக்காகவும் இந்திய அவ்வாறு செயற்படவேண்டும்.

 ஈ.ரி.பி.சிவப்பிரியன்