வலைவீச்சு – பி.மாணிக்கவாசகம்

ஒரு வாரமாகத் தொடர்கின்ற பரபரப்பான அரசியல் நெருக்கடிக்கு நவம்பர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை முடிவேற்படுமா, எத்தகைய முடிவேற்படும் என்பதை அறிய, நாட்டு மக்களும், ஐநா உள்ளிட்ட சர்வதேசமும், ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள பலதரப்பினரும் ஆவலாக இருக்கின்றார்கள்.

நாட்டின் அதி உயர் அரச அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியபோது, அரசியலில் பரம எதிரியாகக் கருதப்பட்ட ஒருவரை பிரதமராக்கி, பதவியில் இருந்தவரைப் பதவி நீக்கம் செய்ததுடன் நில்லாமல், நாடாளுமன்றத்தையும் நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிஸ்டத்திற்கு ஒத்தி வைத்ததையடுத்தே, இந்த அரசியல் நெருக்கடி உருவாகியது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவரை பிரதமராக நியமித்ததும், அதே ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்களுடைய ஆணையின் மூலம், நாடாளுமன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று பிரதமராகப் பதவி வகித்த ஒருவரை திடீரென பதவி நீக்கம் செய்ததும், மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கை என்று ஜனநாயகவாதிகளும், அரசியல் நிபுணர்களும் கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.

அத்துடன் இவ்வாறு வலிந்து உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடியானது, அரசியலமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி நடவடிக்கையாக நோக்கப்படுவதும் இந்த நெருக்கடிக்கு எத்தகைய முடிவேற்படும் என்ற ஆவலுக்கு முக்கிய காரணமாகும்.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு அமைவாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்ட இருகட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கத்தில் இருந்து, வெளிப்படைத்தன்மை எதுவுமின்றி தன்னிச்சையாக திடீரென பொதுஜன ஐக்கிய முன்னணியை வெளியேறச் செய்து, அரசாங்கத்தைக் கவிழ்த்தது, இந்தத் திட்டமிட்ட அரசியல் நெருக்கடிக்கான முதலாவது ஜனநாயக விரோத நகர்வாகக் கருதப்படுகின்றது.

கடந்த பொதுத் தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் என்பது முழுக்க முழுக்க நாடாளுமன்றத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயகச் செயற்பாடாகும். வெளிப்படையான – ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களின்றி இவ்வாறு முறையானதொரு ஜனநாயக நடைமுறையின் கீழ் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து, பிரதமர் பதவியில்  அதிர்ச்சியளிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் நடவடிக்கை பலகோணங்களிலும் உள்ள பலதரப்பினரதும் வன்மையான கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.

ஆட்சி அதிகாரத்தின் மைய நிலையில் உள்ள பிரதமர் பதவியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை, ஏற்க மறுத்து தானே நாட்டின் பிரதமர் என்றும் தன்னைப் பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்றும் வலியுறுத்தி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலகிச்செல்ல மறுத்துள்ளார். தனது மறுப்புக்கு வலு சேர்க்கும் வகையில், தலைநகரில் தனக்கு ஆதரவானவர்களை ஒன்றுதிரட்டி தனது அரசியல் செல்வாக்கையும் தனது நியாயப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

சட்டவிதிகளுக்கமைய ஒழுகி ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டு தீர்வு காண வேண்டும் என்று ஐநாவும் சர்வதேச நாடுகளும் இந்த அரசியல் நெருக்கடியின் கதாநாயகர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரமராகப் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச ஆகியோரை வலியுறுத்தியிருக்கின்றன. அதேநேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தைக் கூட்டி அதன் ஊடாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு சர்வதேச மட்டத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளுர் மட்டத்த்pல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து கட்சிகளாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என்று சபாநாயகரின் ஊடாக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். சபாநாயகரும்கூட, நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசரம் குறித்தும், அவசியம் குறித்தும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தார்.

இத்தகைய அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி தன்னுடைய கடும் போக்கில் இருந்து விடுபட்டு, விட்டுக் கொடுத்துச் செயற்படும் வகையில் 16 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு முன்வந்துள்ளார் என்று கருதப்படுகின்றது. இது மேலோட்டமான கருத்து என்றே கூற வேண்டும்.

நாடாளுமன்றம் கூடுமா…….?

முக்கியமாக, நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  106 உறுப்பினர்களுடனும், எதிரணியில் 95 உறுப்பினர்களும் இருந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் நெருக்கடி உருவாகுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். குறிப்பாக நாடாளுமன்றத்தை நவம்பர் மாதம் 16 ஆம் திகதிவரை ஒத்திவைத்திருந்தார். மகிந்த ராஜபக்ச அணியினர் அரசாங்கத்தை உருவாக்குவதற்குரிய பெரும்பான்மை பலத்தைத் திரட்டிக் கொள்வதற்குரிய கால அவகாசத்தை வழங்குவதற்காகவே இந்த நகர்வை அவர் மேற்கொண்டிருந்தார் என்று அவதானிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையிலேயே அமைச்சர் பதவிகளையும் வேறு சலுகைகளையும் பயன்படுத்தி ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் ஈடுபட்டிருக்கின்றனர். அதேநேரம் தனது பெரும்பான்மை பலத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசிய கட்சியினரும் ஈடுபடத் தவறவில்லை. தமது ஆதரவுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்குரிய ஏட்டிக்குப் போட்டியாக ஆள் பிடிக்கும் இந்த நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

வெறுமனே ஆள்பிடிக்கும் நடவடிக்கை என்பதற்கும் அப்பால், புதிய அரசாங்கத்திற்குரிய அமைச்சரவையை உருவாக்குவதிலும் இதன் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பெயர் விபரங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய பின்னணியில் 5 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த அறிவித்தல் ஜனாதிபதியிடம் இருந்து நேரடியாக வரவில்லை. அதேபோன்று பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவிடம் இருந்தும் நாட்டு மக்களுக்குரிய நேரடி அறிவித்தலாகவும் வெளியிடப்படவில்லை என்பது கவனத்திற்குரியது.

பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பின்போதே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச 5 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். வியாழக்கிழமை காலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதேவேளை, நாடாளுமன்றம் 16 ஆம் திகதிக்கு முன்னர் கூடவுள்ள தகவலை ரணில் விக்கிரமசிங்கவும் தனது டுவிற்றர் பக்கத்தில் வெளியிட்டு, தமது போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவும் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்தத் தகவலின்படி 5 அம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுவமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் நாடாளுமன்றத்தைக் கூட்டப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்ற தகவலை பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னணி அமைச்சர்களில் ஒருவராகிய சுசில் பிரேம்ஜயந்த இந்தத் தகவல் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குரிய தயார்ப்படுத்தல்களுக்குக் கால அவகாசம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்தக் கூற்று 5 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடுமா என்பதை சந்தேகத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது.

அரசியல் நெருக்கடியை உருவாக்கிய ஆட்சி மாற்ற நிகழ்வுகளின்போது, புதிதாகப் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டதும், பதவியில் உள்ளவர் நீக்கப்படுகின்றார் என்ற தகவலும், அதனையடுத்து நாடாளுமன்றம் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவித்தலும் அடுத்தடுத்து அவசர அவசரமாக வர்த்தமானி மூலமாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 5 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்ற தகவல் அந்த வகையில் வர்த்தமானி மூலமாக உடனடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அந்தத் தகவல் வாய்மொழி மூலமாக கசியவிடப்பட்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

மறுபக்கத்தில் நாடாளுமன்றம் கூடும்போது தமது பலத்தைத் தங்களால் நிரூபிக்க முடியும் என்று இரண்டு பிரதமர்களாகிய ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருருமே ஊடகங்களுக்கு உறுதியாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தமது பெரும்பான்மை பலத்தைப் பெருக்கிக் கொண்டார்களா என்பது தெரியவில்லை. அந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்து வழங்கப்பட்டிருந்த கால வாய்ப்பினை அவர் குறுகிய தினங்களிலேயே சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவ்வாறு நாடாளுமன்ற பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வரையில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பு கிடையாது என்பதே அவதானிகளின் கருத்தாக உள்ளது.

சலுகைகளும் அரசியல் நிலைப்பாட்டுத் தொனிகளும்

நெருக்கடியைத் தளர்த்தி நாட்டில் அரசியல் நிலைமை உறுதியாக்குவதற்கான நடவடிக்கைகளில் தமது ஆதரவை விரிவுபடுத்திக் கொள்வதற்காக சிறுபான்மைக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளையும், இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் காட்டி வசீகரித்துள்ளதுடன், வேறு சலுகைகளும் வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அரசியல் ரீதியான கொள்கைகளையும் நாட்டின் நலன்களையும், ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவத்தையும் கோட்டைவிட்டு, சுய அரசியல் இலாபங்களுக்காக அரசியல் ரீதியாக விலைபோகின்ற நிலைமை இதனால் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

அரசியல் கட்சிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு வலை வீசப்பட்டிருப்பது போலவே, பொதுமக்களுக்கும் வலை வீசப்பட்டிருக்கின்றது. குறிப்பாக எரிபொருள் விலை குறைப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு வரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலான அறிவித்தல்கள் என்பன, அரசியல் நெருக்கடி விவகாரங்களில் இருந்து  நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்ற ஓர் உத்தியாகவே வெளிப்பட்டிருக்கின்றன.

புதிய அரசாங்கத்தின் மீது மக்களை ஆர்வம் கொள்ளச் செய்வதுடன், அவர்களுடைய ஆதரவைப் பற்றி இழுப்பதையுமே இந்த உத்தி நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதும் நடத்தப்படவுள்ள தேர்தல்களிலும் மக்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான அரசியல் தந்திரோபாயமும் இதில் அடங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

நாடு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. அரச ஊழியர்களின் குறிப்பாக அரச வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவைகள் சார்ந்த ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் (ஓவர் டைம்) நிறுத்தப்பட்டிருக்கின்றன. திறைசேரியில் இதற்குரிய நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதே இதற்குரிய காரணம். மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாததை எதிர்த்து அரச வைத்தியர்கள் தொழிங்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். அத்துடன் எக்ஸ்ரே மற்றும் சீரீ ஸ்கேன் உள்ளிட்ட தொழில்நுட்ப பிர்வைச் சார்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலான பணி புரிவதன் ஊடாகத் தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். இதனால், வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளிகளும், தங்கியிருந்து சிகிச்சை பெறகின்ற நோயாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில் அதிகரிக்கப்பட்டிருந்த எரிபொருளின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு அறிவித்தலின் மூலம் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினாலும் குறைக்கப்பட்டிருப்பதாக புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். அத்துடன் பருப்பு மற்றும் கடலை என்பவற்றின் ஒரு கிலோவுக்கான விசேட வர்த்தக வரி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்றது. உழுந்து ஒரு கிலோவுக்கான வர்த்தக வரி 25 ரூபாயினாலும் சீனி மீதான வரி 10 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் தளைக்குமா?

ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கவர்வதற்காக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, விசேடமாக பௌத்த சிங்கள மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில், தமிழ் மக்களின் கோரிக்கையாகிய சமஸ்டி ஆட்சி முறைக்கு அறவே இடம் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்;.

அதிகாரத்தில் உள்ளவரையில் வடக்கு கிழக்கு இணைந்த, சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சித் தீர்வு என்பது சாத்தியமில்லை என்று அவர் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் மத்தியில் நெருக்கடி நிலைமைகள் குறித்து உரையாடுகையில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தான் அதிகாரத்தில் இருக்கும் வரையில் வடக்கு கிழக்கு இணைப்பும் கூட்டாட்சியும் சாத்தியமில்லை என்றும் அவ்வாறு அதனை அவர்கள் அடைய வேண்டுமாயின் தனது உயிரைப் போக்க வேண்டும் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் சிலர் வாக்குறுதிகளை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்த அவர், புதிய பி;ரதமருடன் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவும், இனப்பிரச்சினைக்கு அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்து ஜனாதிபதியாக வெற்றிபெற்ற ஒருவரிடம் இருந்து, சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிக்கும் வகையிலான இந்த கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் கூட்டாட்சி ஒன்றிற்கு கடந்த மூன்று வருடங்களாகத் தலைமையேற்று நடத்தி வந்த ஓர் அரசியல் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அல்லது தனது அரசியல் கொள்கை தொடர்பான உள்ளக் கிடக்கைகளை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றார். மோசமான ஒரு யுத்தத்திற்கு முகம் கொடுத்து பேரழிவுகளைச் சந்தித்துள்ள ஒரு நாட்டின் ஐக்கியத்திற்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தலைமை நிலையில் உள்ள ஓர் அரசியல் தவைரின் இந்த அரசியல் நிலைப்பாடு சாதகமாக அமைய மாட்டாது.

அரசியல் நெருக்கடி ஒன்றின் ஊடாக ஆட்சி மாற்றத்ததைத் தோற்றுவித்துள்ள ஒரு ஜனாதிபதியின் கீழ் சிறுபான்மை மக்கள் புதிய ஆட்சியில் நம்பிக்கை கொள்வதற்கு சாத்தியமற்ற நிலைமையையே இந்த அரசியல் நிலைப்பாடு தோற்றுவிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இத்தகைய ஒரு முரண்பாடான ஒரு சூழலில் அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படுவதன் மூலம் தீர்வு காணப்படுமா என்பதும், அண்மைய அரசியல் நெருக்கடிகளின்போது,  மீறப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் மீண்டும் நிலைநிறுத்தப்படுமா என்பதும் சந்தேகத்திற்குரியதாகவே தோன்றுகின்றது.