வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்,
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார். இது சம்பந்தமாக அவருக்கு நான் நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். மானநஷ்ட வழக்கு போடுவதற்கான முயற்சியை நான் எனது வழக்கறிஞர்களோடு கலந்துரையாடிவருகின்றேன்.
அந்தவகையிலேயே 150 கோடி நஷ்டஈட்டை அவரிடம் கோருவதற்காக நிச்சயமாக நான் நீதிமன்றம் செல்வேன். நீதிமன்றத்திலேயே அவர் அதனை நிரூபிக்கட்டும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது.பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருக்கின்றது. நான் மஹிந்த ஆட்சி அமைக்க 150 கோடி வாங்கியிருப்பதாக கூறியிருக்கின்றார். அந்த வகையிலே இந்த இரண்டு படங்களையும் நான் செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.
மஹிந்த ராஜபக்ஷவை பொருத்தமட்டில் இன்று அவர் மனித உரிமை மீறல் தொடர்பில் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டியவர். ஐ.நா தீர்மானத்தில் அவருடைய பெயரும் இருக்கிறது. எங்களுடைய மக்கள் அவர் மீண்டும் ஆட்சியை பெறக்கூடாது என்பதில் மிகவும் ஆளுமையோடு செயற்பட்டு புதிய ஜனாதிபதியை கொண்டுவந்திருந்தார்கள். அந்த புதிய ஜனாதிபதி கூட தற்போது மாறுபட்ட கருத்துக்களை சொல்லி இருக்கின்றார். சமஷ்டி முறையை கொடுக்கமுடியாது வடக்கு கிழக்கை இணைக்க முடியாது அவ்வாறு கொடுப்பதாக இருந்தால் தனது இறப்புக்குப் பிறகு தான் அதை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட அவர் இவ்வாறு சொல்லியிருக்கின்றார்.
எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் நடுநிலை வகித்தாலும் வாக்களித்து மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சி அமைப்பதற்கான ஒரு செயலை செய்து எங்களுடைய அழிக்கப்பட்ட மக்களுடைய மற்றும் உரிமைக்காக போராடுகின்ற எங்களுடைய மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். அந்த வகையில் இதுவரைக்கும் யாராவது என்மீது விரலை நீட்டி நான் மகிந்த ராஜபக்ஷவிடமோ ஜனாதிபதியிடமோ ரணில் விக்கிரமசிங்கவிடமோ பணத்தை பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
அதனைவிடுத்து வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப கூடாது. அந்த வகையிலே மனசாட்சிக்கும் மக்களுக்கும் என்னைப் பொறுத்தமட்டில் நான் செயலாற்றி வருகிறேன். இந்த விடயத்திலே அரசாங்கத்திற்கு சோரம் போகின்ற என்னுடைய செயற்பாடு ஒரு போதும் இருந்ததில்லை. இந்தவகையிலே சிவசக்தி ஆனந்தன் மீது மானநஷ்ட வழக்கு நிச்சயமாக தொடர்வேன். அந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் நான் மஹிந்த ராஜபக்ஷவிடம் 150 கோடி வேண்டியதாக தெரிவித்ததை.
கூட்டமைப்பை பொறுத்த வரையும் யாரும் அரசாங்கத்திற்கு சோரம் போகவில்லை.
வியாழேந்திரன் மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறார் அவருடைய சுயநலம் காரணமாக அவர் செயல்பட்டிருக்கிறார். இந்த விடயத்திலே எங்களைப் பொறுத்தவரைக்கும் மஹிந்த வந்தால் என்ன ரணில்தான் இருந்தாலும் என்ன என்பதை விட ஜனநாயகம் மறுக்கப்பட்டு வருகின்றது. அதனை காப்பதற்கு நாங்கள் செயற்பட்டாக வேண்டும்.
இன்று ஜனாதிபதி தவறான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அந்த வகையில் வியாளேந்திரன் அதனை அனுபவிப்பார். ஏனெனில் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் இருக்கப் போகின்றது. இன்று இருக்கின்ற நிலவரப்படி பார்க்கின்றபோது ஜனநாயக முறையை தவறாக பயன்படுத்தியதாக அதற்கு எதிராக செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் வியாழேந்திரன் கிழக்கு மாகாண மக்களுக்கு துரோகமான செயலை செய்திருக்கிறார். கட்சி அவருக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் அவர் செயற்பட்டது மிகவும் தவறானது மிக ஆக்ரோசமாக பேசிய ஒரு நபர் இன்று அந்த மக்களை ஏமாற்யிருக்கின்றார். எனவே அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டவர இருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையும் இனி வரும் கட்சி மாறி செல்லமாட்டார்கள். வதந்தியை பரப்புபவர்களுக்கு ஒரு விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் யாரும் மகிந்தராஜபக்ஷவின் அணியில் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
வியாளேந்திரனை தவிர எவரும் அங்கு செல்ல மாட்டார்கள். ஆகவே வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வதந்தியை பரப்புவது அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே அமையும் என மேலும் தெரிவித்தார்.