அப்போது, 96-ம் வருடத்தில் படித்த பழைய மாணவர்-மாணவிகள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு தேதியில், சென்னையில் சந்திப்பது என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி, பழைய மாணவர்-மாணவிகள் ஒவ்வொருவராக வந்து சேருகிறார்கள். அவர்களில் விஜய் சேதுபதியும், திரிஷாவும் இருக்கிறார்கள். இருவரும் பழைய காதலர்கள். இரண்டு பேரும் தங்களின் மலரும் நினைவுகளை நினைத்துப் பார்ப்பதுதான் கதை.
இரண்டு பேரும் எப்படியெல்லாம் காதலித்தார்கள், எப்படி பிரிந்தார்கள், இருபது வருடங்கள் கழித்து எப்படியிருக்கிறார்கள், இருவரையும் அந்த காதல் என்ன செய்கிறது? என்பதை உயிரை உருக்கும் விதமாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் சி.பிரேம்குமார்.
தாடி-மீசையுடன் நாற்பது வயதை தாண்டியவராக இருக்கும் விஜய் சேதுபதி, காதலி திரிஷாவின் முகம் பார்த்து பேச வெட்கப்படுவதில் ஆரம்பித்து, திரிஷாவை சிங்கப்பூருக்கு வழியனுப்புவது வரை, காதலின் வலிகளையும், அதன் தாக்கத்தையும் படம் பார்ப்பவர்களுக்குள் மிக இயல்பாக கடத்தியிருக்கிறார்.
ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை, நீ விர்ஜினாடா? என்ற திரிஷாவின் கேள்விக்கு, “ஆஞ்சநேயருக்கு வேண்டுதல்” என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கும்போதும், “உன்னை பின்தொடர்ந்தவனை நான்தான் அடித்தேன்” என்று திரிஷாவிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்போதும், கனமான காட்சிகளுக்கு மத்தியில், விஜய் சேதுபதி சிரிக்கவும் வைக்கிறார்.
“உன் திருமணத்துக்கு நான் வந்திருந்தேன். வாடாமல்லி கலர் புடவையில் அழகாக இருந்தாய்” என்று திரிஷாவிடம் இவர் கண்கலங்க சொல்லும்போது, தியேட்டரில் இருக்கும் அத்தனை பேரையும் விம்ம வைத்து விடுகிறார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், அந்த விமான நிலைய காட்சி, கலங்க வைத்து விடுகிறது.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில், தன் காதலரை சந்தித்து, அவருடைய தூய்மையான காதலில் மனம் பறிகொடுத்து, பிரியவும் முடியாமல், சேரவும் முடியாமல் தவிக்கும் அனுதாபகரமான காதலியாக திரிஷா, நெஞ்சை கனக்க வைக்கிறார். படம் முழுக்க அவர் காதல் தேவதையாக வாழ்ந்திருக்கிறார்.
தன் காதலன் தன்னை தேடி கல்லூரிக்கு வந்திருக்கிறான் என்ற உண்மை புரிந்ததும், ஓட்டல் கழிவறைக்குள் சென்று கதறி அழுகிற இடத்திலும், விஜய் சேதுபதி இன்னும் கன்னித்தன்மையுடன் இருப்பதை பார்த்து நெகிழ்ந்து போகிறபோதும், தன் நினைவுகளை மறக்காமல் காதலின் அடையாளங்களை விஜய் சேதுபதி சேகரித்து வைத்திருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறபோதும், கடைசி காட்சியில், “என்னை அப்படி பார்க்காதே” என்று விஜய் சேதுபதியின் முகத்தை தன் கையினால் மூடும்போதும், இதுவரை பார்த்திராத திரிஷா.
ரொம்ப காலம் கழித்து ஜனகராஜ், திரையில் முகம் காட்டியிருக்கிறார். தேவதர்சினி, பகவதி பெருமாள், “ஆடுகளம்’ முருகதாஸ் என நகைச்சுவை நட்சத்திரங்கள் இருந்தாலும், கதையும், காட்சிகளும் அவர்களை ஓரம்கட்டி விடுகின்றன. இரவு நேர சென்னையை காட்டும்போதெல்லாம் ஒளிப்பதிவாளர் (சண்முக சுந்தரம்) யார்? என்று கேட்க தூண்டுகிறது. கோவிந்த் வஸந்தாவின் இசையில், பாடல்கள் நினைவில் இல்லை. பின்னணி இசையும், இயல்பான வசன வரிகளும் காதலின் வேதனையை கூட்டுகின்றன.
கதை மற்றும் சில காட்சிகள் ‘பள்ளிக்கூடம்,’ ’ஆட்டோகிராப்’ ஆகிய படங்களை நினைவூட்டினாலும், கதை சொன்ன விதத்திலும், காதலின் பிரிவை காட்சிப்படுத்திய விதத்திலும், சி.பிரேம்குமார், சிறந்த டைரக்டராக உயர்ந்து நிற்கிறார். படம் முடிந்து வெளியே வரும்போது, நிறைய பேர் கண்ணீரை துடைத்துக் கொள்கிறார்கள். கவித்துவமான காதலுக்கு, ‘96.’