முதலமைச்சர் நிதியம் இன்னும் ஆரம்பிக்க முடியவில்லை – வடக்கு முதல்வர்

ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் கட்சி தவறுகளை அகற்றி முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும். சுயநல எதிர்பார்ப்புக்கள் இன்றி கட்சியின் நலன் கருதி முரண்பாடுகளில் ஈடுபடுவது கட்சிக்கு நல்லது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய மின்னஞ்சல் பேட்டியில் தெரிவித்தார்.

அவருடனான செவ்வி வருமாறு,

கேள்வி : வடமாகாண சபை முதல்வருக்கு முதலமைச்சர் நிதியம் ஒன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டு விட்டதா?

பதில் : அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி வழங்குவதில் தடைகள் இருக்கத் தேவையில்லை என்ற கருத்தை மட்டுமே முன்வைத்தார். இதுதொடர்பில் ஆராய்ந்து கூறுவதாகக் கூறினார்.

கேள்வி: சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையுடனான பேச்சுவார்த்தையொன்று லண்டன் நகரில் நடைபெற்றதாகவும் இதில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியமாக புலம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிதியுதவி பெறுவதற்காகவே பேச்சு நடத்தப்பட்டதாக கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி வடமாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு கிடைக்குமா?

பதில் : எமக்கும் அந்த சந்திப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எமது சபையினருடனோ அமைச்சர்களுடனோ எவ்வித பேச்சுகளும் இடம்பெறவில்லை. பேச்சுகளின் பின்னரும் எந்த சந்திப்பும் இடம்பெறவில்லை. எனவே, இது தொடர்பில் என்னால் பதில் கூற முடியாதிருக்கின்றது.

கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார். அதேவேளை, இந்தப் பேச்சுக்கள் தொடர்பில் நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : அதற்கான பதிலை நீங்கள் பங்குபற்றியவர்களிடமே கேட்க வேண்டும்.

கேள்வி: 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் மத்திய அரசு, அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதா?

பதில் : எம்முடன் சேர்ந்து எமக்கு அறிவித்து விட்டு முன்னெடுத்ததாக எமக்கு ஞாபகமில்லை.

கேள்வி: புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நடவடிக்கை திருப்தியளிக்கின்றதா?

பதில் : முதலில் ஆயிரம் ஏக்கர் தருவோம் என்றார்கள். பின்னர் ஐநூறு ஏக்கருக்கும் குறைந்த காணிகளை விடுவித்தார்கள்.அதன் பின்னர் மிகுதியாக சில ஏக்கர்களை விடுவித்தார்கள். எனினும், செழிப்பான காணிகளை விடுவித்ததாக அறிவிக்கப்படவில்லை. இது வலி.வடக்கில் மாத்திரமே. அங்கு ஆறாயிரத்து ஐநூறு ஏக்கருக்கு மேற்பட்ட காணி படையினர் வசம் பாதுகாப்பு என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்தான் ஆயிரம் ஏக்கர் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் கூறியது என்னவெனில், விமானத்தளத்திற்கு பாதுகாப்பு வழங்க ஒரு எண்ணூறு ஏக்கர் ஆகக்கூடியது போதுமானது. காங்கேசன்துறைமுகத்திற்கு பாதுகாப்பு வழங்க ஒரு இருநூறு ஏக்கர் போதுமானது. அந்த வகையில் ஆயிரம் ஏக்கரை வைத்துக்கொண்டு மிகுதி ஐயாயிரத்து ஐநூறு ஏக்கரை மக்களுக்கு திருப்பி வழங்குங்கள் என்றோம். மிகுந்த கஷ்டப்பட்டு ஆயிரம் ஏக்கரை விடுவித்துள்ளோம். இராணுவத்துடன் அரசாங்கம் அனுசரணையுடன் நடந்துகொள்வது புரிகிறது. இதேவேளை, மக்கள் அங்கு செல்ல அஞ்சுகின்றனர். வழங்கப்பட்ட காணிகளில் அநேகமானவை செழிப்பற்றவை. இதுதான் இன்றைய நிலை. இதில் எமக்கு என்ன திருப்தி ஏற்படப்போகிறது.?

கேள்வி: நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வடமாகாண அபிவிருத்திக்கு மேலதிக நிதி தேவையெனக் கேட்டிருக்கின்றீர்கள். அரசாங்கம் வடமாகாண சபைக்கு மேலதிக நிதி ஒதுக்கியுள்ளதா?

பதில் : சகல மாகாண சபையினரையும் ஜனாதிபதி விரைவில் சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் ஏதாவது தெரிய வரும். இதுவரையில் எதுவும் ஒதுக்கப்பட்டதாக செய்தியில்லை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாக தமிழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென்று கூறமுடியுமா?

பதில் : ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான் கட்சி தவறுகளை அகற்றி முன்னேற்றப்பாதையில் பயணிக்க முடியும். சுயநல எதிர்பார்ப்புகள் இன்றி கட்சியின் நலன் கருதி முரண்பாடுகளில் ஈடுபடுவது கட்சிக்கு நல்லது.

கேள்வி:  கடந்த அரசின் காலத்தில் வடமாகாண சபையைக் கொண்டு நடத்துவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் எதிர்நோக்கப்பட்டன. முதலமைச்சர் என்ற வகையில் இதனை பகிரங்கமாக கண்டித்திருக்கிறீர்கள். தற்போதைய புதிய அரசின் செயற்பாடுகள் தங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளனவா?

பதில் : ஆங்கிலத்தில் குயூரேட்ஸ் எக் ( CURATES EGG) என்பார்கள். அதாவது மதகுருவின் முட்டையானது ஒரு பங்கு மிகவும் நல்லதாகவும் மறு பங்கு கூடாததாகவும் என்று கூறும் வழக்கம் உண்டு. அதுபோல் சில நன்மைகளைப் பெற்றுள்ளோம். ஆனால், சட்ட ஏற்பாடுகளும், இதுவரை கடைப்பிடித்து வந்த வழிமுறைகளும் மத்திய அரசாங்கம் எம்மைக் கட்டுப்படுத்தி தான் நினைத்ததை செய்ய வழிவகுப்பதாகவே அமைந்துள்ளது. இந்த நிலையை மாற்றி மக்கள் பிரதிநிதிகளின் கை ஓங்க மக்களின் எதிர்பார்ப்புகள் மேன்மையடைய எம்மால் முடியுமான நடவடிக்கைகளில் நாம் இறங்கியுள்ளோம்.

viki2கேள்வி: மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விவகாரம் என்பன தொடர்ந்தும் கிடப்பில் போடப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது. இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

பதில் : தேர்தல் ஒன்றை நோக்கி தெற்கு அரசியல்வாதிகள் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கையில் எங்கே தமிழருக்கு சாதகமான சூழலை தாம் அமைத்தால் தேர்தலில் சிங்கள அடிப்படைவாதிகளின் கை ஓங்கி விடுமோ என்ற பயம் அவர்களை, செய்ய வேண்டியதையும் செய்ய விடாது தடுத்து விடுகிறது. பொறுப்பான மீள்முடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை என்பன தாமதிப்பதற்கான காரணமும் இதுவே. பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு இந்தப் பயம் நீடிக்குமோ என்ற அச்சம் எங்களுக்குள்ளது.

கேள்வி: வடபகுதியில் 5 பேருக்கு ஒருவர் என்ற வகையில் இராணுவம் நிலை கொண்டிருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு இராணுவமே காரணமாக இருப்பதாகவும், இந்தவகையில் இராணுவம் வடபகுதியில் இருந்து வெளியயேற வேண்டுமென்றும் தாங்கள் கருத்து வெளியிட்டிருந்தீர்கள். அதேவளை, வடக்கில் 56 இராணுவ முகாம்கள் மூடப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தாங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் : இராணுவ முகாம்களை மூடுவதால் வடமாகாணத்தில் இராணுவப் பிரசன்னம் குறைந்துவிடும் என்று எவரும் எதிர்பார்த்தலாகாது. சிறியதை மூடுவதும் பெரியதுடன் இணைப்பதுமே நாம் இதுவரை அறிந்த விடயம். அரசும் ஐம்பத்தாறு இராணுவ முகாம்களை மூடியிருக்கலாம். புதிய முகாம்களிலுள்ள இராணுவத்தினர் எத்தனை பேர், சிறிய முகாம்களை மூடிய பின்னர் உள்ள இராணுவத்தினர் எத்தனை பேர் என்பதை அறிய ஊடகவியலாளர்களுக்கு உரிமையளிக்க வேண்டும். அப்போது உண்மை வெளிவரும். அதை விட்டு பெருவாரியான இராணுவத்தினர் வடமாகாணத்தை விட்டு வெளியேறியமைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

கேள்வி: இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட தனியார் காணிகள் அரசால் இதுவரை முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், முல்லைத்தீவில் பௌத்த விகாரையொன்றை அமைக்கும் வகையில் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக பலத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளீர்கள்?

பதில் : இது மிகவும் பாரதூரமான விடயம். இராணுவத்தினருடன் முரண்பட வேண்டிய விடயம். நானும், உதவி இல்லையென்றால் எவருமே இத்தகைய செயலில் ஈடுபடமாட்டார்கள். நிலைமையை அறிந்து சட்டத்தை மதித்து கருமமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் எமது மக்கள்.

கேள்வி: வடபகுதியில் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண சபை எந்த வகையான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது? குறிப்பாக, தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் காலத்தில் நியமனங்கள் வழங்கப்படுவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாங்கள் கூறவிரும்புவதென்ன?

பதில் : தொண்டர் ஆசிரியர்களைப் பற்றி ஜனாதிபதியுடன் பேசினேன். அமைச்சரவையின் அனுமதி பெற வேண்டும் என்றார். பெறுவார் என்று நம்புகிறேன். அரசாங்க வெற்றிடங்களை போதியவரையில் நிரப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்கள் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன..