மலேசிய உயர் அதிகாரிகள் மாபெரும் ஊழல்!

முன்னாள் பிரதமருடன் சேர்ந்து அரசு பணத்தை கொள்ளையடித்து, மலேசிய உயர் அதிகாரிகள் மாபெரும் ஊழலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆட்சி செய்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. பிரதமராக இருந்து வந்த நஜிப் ரசாக் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு பணத்தை பெருமளவில் கொள்ளையடித்து விட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

குறிப்பாக அரசின் 1 எம்.டி.எப். என்னும் மலேசிய வளர்ச்சி பெர்ஹாட் திட்ட நிதியைத்தான் நஜிப் ரசாக் உள்ளிட்டவர்கள் வாரிச்சுருட்டியதாக புகார் எழுந்துள்ளது.

இந்தநிலையில், நஜிப் ரசாக்குடன் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த அதிகாரிகளும் இந்த நிதியில் பெருமளவு ஊழல் செய்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக அவர்கள் ஹாலிவுட் படம் உள்பட சர்வதேச அளவில் முதலீடு செய்ததும் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.

‘தி வோல்ப் ஆப் வால் ஸ்டிரீட்’ என்ற ஹாலிவுட் படத்துக்கு நஜிப் ரசாக்கின் நெருங்கிய உறவினர் ரிசா அஜிஸ் மூலம், மலேசிய வளர்ச்சி பெர்ஹாட் திட்ட நிதியில் சுருட்டிய தொகையில் ஒரு பங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரின் பேவர்லி ஹில்ஸ் பகுதியில் நிலம் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழலை அமெரிக்க நீதித்துறை கண்டுபிடித்துள்ளது.

இதில் மலேசியாவில் கோல்ட்மேன் சாச்ஸ் வங்கியாளர்களாக பணியாற்றிய 2 பேர், சர்வதேச பைனான்சியர் ஒருவர் சிக்கி உள்ளனர். அவர்கள் மீது அமெரிக்கா வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த மலேசிய வளர்ச்சி பெர்ஹாட் திட்ட நிதி ஊழலை முதன்முதலாக அம்பலப்படுத்தியதும் அமெரிக்காவின் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைதான் என்பது நினைவுகூரத்தக்கது.