பாடல்கள் இல்லாத அஜித் படம்!

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். இமான் இசையமைக்கும் முதல் அஜித் படம் இது. மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு நடைபெற்றது. தற்போது மும்பையில் பாடல் காட்சியைப் படமாக்கி வருகின்றனர்.

‘விஸ்வாசம்’ படத்துக்குப் பிறகு ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என ஏற்கெனவே தகவல் வெளியானது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் எனச் சில நாட்களாக வதந்தி பரவியது.

இந்நிலையில், யுவன் தான் இசையமைப்பாளர் என நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இன்னொரு விஷயம், ‘பிங்க்’ படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. எனவே, இந்தப் படத்திலும் பாடல்கள் இருக்காது என்கிறார்கள். ஒருவேளை அஜித் ரசிகர்களுக்காகத் தமிழில் சில மாற்றங்களைச் செய்து பாடல்களைச் சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது.