கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் திகதி சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது குறித்து துருக்கி அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.
கஷோக்ஜியின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கூலிப்படையால் கொலை செய்பவர்களால் கொல்லப்பட்டதாக சவுதி கூறுகிறது.
ஆனால், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்று சவுதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா ஒப்புக்கொண்டுள்ளார்.
சவுதி-துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அவரை மேற்கோள் காட்டி சௌதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜமால் கஷோக்ஜி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுவிட்டதாக ஆரம்பத்தில் கூறியது சவுதி.
பிறகு, அங்கே நடந்த ஒரு கைகலப்பில் அவர் இறந்துவிட்டார் என்று அந்நாடு கூறியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி சவுதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்துவந்தவர்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த சம்பவத்தால் சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையை விசாரிப்பதில் அதிபர் டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, வெள்ளை மாளிகைக்கு வர அமெரிக்க அதிபர் தனக்கு விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார் ஜமால் கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ்.
டிரம்ப் தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது அமெரிக்காவில் அவரை பற்றிய நல்ல கருத்தை தோற்றுவிப்பதற்கு என எண்ணுவதாக ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal