மனம்விட்டுப் பேசுங்க! – 02 நடிகை ரேவதி!

‘புதுமைப் பெண்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘மெளன ராகம்’, ‘கிழக்கு வாசல்’ எனக் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் பெரும்பாலும் நடித்தீர்கள். அதனால், ‘ரேவதி நடித்த கேரக்டர்ஸ் எனக்குக் கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்’ எனப் பல முன்னணி நடிகைகளே சொல்லியதுண்டு. இதுகுறித்து..?

எளிமையான கேள்விதான். ஆனால், என் மனசுக்குள் நிறைய உணர்வுபூர்வமான எண்ண ஓட்டங்கள் உண்டாகுது. என் சினிமா பயணத்தில், வாய்ப்புக்காக யாரையும் எப்போதும் அணுகினதில்லை; எதிர்பார்த்ததுமில்லை. ‘அப்படி நடிக்கணும்’, ‘இப்படிப் பெயர் வாங்கணும்’னு எந்த இலக்கையும் வெச்சுக்கிட்டதில்லை. முதல் படத்துக்குப் பிறகு கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள, சவாலான கேரக்டர்கள் அதிகம் கிடைத்தன. எனக்கு மட்டும் எப்படி இது அமையுதுனு, அதை நினைச்சு சந்தோஷப்படக்கூட நேரமில்லாம ஓடிட்டிருந்த காலம் அது. கால்ஷீட் கொடுத்த தேதிக்குச் சரியா ஷூட்டிங் முடிச்சுக்கொடுத்துட்டு, ஃப்ரீ டைம் கிடைச்சா சொந்த ஊருக்குப் போயிடுவேன். சினிமா உலகத்தை மறந்து, மகிழ்ச்சி யாயிருப்பேன். அப்போ நிறைய மக்களைச் சந்திப்பேன்; புத்தகங்கள் படிப்பேன். அதனால ஒரு கதையின் கேரக்டரை உள்வாங்கி எளிதா நடிக்க முடிஞ்சுது.

‘புதுமைப் பெண்’ படம் இப்போ ரிலீஸாகியிருந்தால் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. என் 17 வயசுல, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விதவையா நடிச்சப்போ, அதைச் சவாலான கேரக்டராதான் பார்த்தேன். அந்தக் கேரக்டர்ல நடிச்சா, என் இமேஜ் பாதிக்கப்படுமோ, பிறர் எப்படிப் பேசுவாங்களோனு கொஞ்சம்கூட நினைக்கலை. இப்படித்தான் என் எல்லா படங்களிலும் நடிச்சேன். ஒரு கதை என் மனசுக்குப் பிடிச்சிருந்தால் மட்டும்தான் நடிப்பேன். பிடிக்காத கதையை யார் இயக்கினாலும் சரி, அதில் யார் ஹீரோவா நடிச்சாலும் சரி, எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் சரி… அந்த வாய்ப்பை ஏற்க மாட்டேன். அதுவே பிடிச்ச கதையில் சின்ன கேரக்டராக இருந்தாலும் சரி, உடன் யார் நடிச்சாலும் சரி… நிச்சயம் நடிப்பேன். செய்கிற வேலையை மனநிறைவோடு செய்யணும்; எக்காரணம் கொண்டும் ஆபாசமா நடிக்கக் கூடாதுன்னு முதல் படத்தில் நடிக்கும்போதே எடுத்த முடிவை உறுதியா கடைப்பிடிக்கிறேன்.

சினிமாவை அளவுக்கதிகமா நேசிக்கிறேன். அதை வெறும் பணம் சம்பாதிக்கும் துறையா மட்டும் பார்க்கலை. அப்படிப் பார்த்திருந்தால், என் கொள்கைகள்ல உறுதியா இல்லாமல் போயிருந்திருப்பேன். என்றாலும், எனக்கு ஒரு சோதனை காலம் வந்தது. என் வாழ்நாள்ல மிகப்பெரிய இக்கட்டான சூழல் ஒருமுறை உண்டாச்சு. அப்போ நான் எப்படியான பிரச்னையில் இருந்தேன்னு யாருக்கும் தெரியாது. வலி நிறைந்த தருணம் அது. அப்போ, வேறு வழியில்லாம, என் மனசுக்கு ஒப்புக்காம ரெண்டு படங்கள்ல நடிச்சேன். அதற்காக ரொம்பவே ஃபீல் பண்ணினேன். அந்தப் படங்களும் வெற்றி பெற்றன. ஆனா, அதுக்குப் பிறகு இப்போ வரை என் கொள்கையில உறுதியாயிருந்து, மனசுக்குப் பிடிக்காத படங்கள்ல நடிக்காம இருக்கேன்.

நீங்க கேட்ட மாதிரி, சக நடிகைகள் ‘ரேவதி நடிச்ச அந்த கேரக்டர்ல நடிக்க ஆசை’னு சொன்னதைப் பேட்டிகளில் பார்த்திருக்கேன். என் கால நடிகைகள் முதல் இப்போதைய முன்னணி நடிகைகள் வரை பலரும், நேர்லயும் என் கேரக்டர்களுக்காக என்னைப் பாராட்டியிருக்காங்க. அப்போ சின்னதா ஒரு மகிழ்ச்சி மேலெழும்… அவ்ளோதான்!