மனம்விட்டுப் பேசுங்க! – 01 – நடிகை ரேவதி

திருமண வாழ்க்கை குறித்து உங்கள் கருத்து என்ன? அதில் நீங்கள் உணர்ந்தவை?

மிக அழகான பந்தம். அதனால் கிடைக்கும் ஓர் அங்கீகாரம், மகிழ்ச்சி, சிநேகம் ரொம்பவே சிறப்பானது. அதை நானும் உணர்ந்திருக்கேன். நானும் சுரேஷ் மேனனும் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டோம். ரொம்ப அன்பா, இருவருமே விட்டுக்கொடுத்து வாழ்ந்தோம்.

சினிமாவிலும் சேர்ந்து வொர்க் பண்ணினோம். என் நடிப்புக்கு ஊக்கம் கொடுத்தார். இப்படி அழகா நகர்ந்து சென்ற எங்க திருமண பந்தத்தில் கருத்து வேறுபாடுகள் வந்தன.

இருவரும் விட்டுக்கொடுத்துப் போவோம்; ஈகோ பார்க்காம சமாதானமும் செய்துக்குவோம். ஆனா, ஒருகட்டத்தில் எங்களுக்குள் பிரிவு அதிகமாச்சு. ஒரே வீட்டில் இருவரும் பேசிக்காமலே  அவங்கவங்க வேலையில கவனம் செலுத்திட்டு இருந்தோம்.

அந்த உணர்வு எப்படி இருக்கும்? ரொம்ப மனவேதனையான காலகட்டம். கலங்கினேன்; யோசிச்சேன்… நாங்க இருவரும் மெச்சூரிட்டியான நபர்கள். நிரந்தரமான பிரிவுதான் ஒரே தீர்வுனு இருவரும் ஒருமித்த கருத் தோடு முடிவு செய்தோம். விவாகரத்து பெற்றோம். ஆனா, இப்போவரை நல்ல நண்பர்களாதான் இருக்கோம்.

இப்போ நாங்க ரெண்டு பேரும் எங்களுக்குப் பிடிச்ச விஷயங்களில் கவனம் செலுத்துறோம். என்றாலும், கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து முடிவைத் தேர்வு செய்கிற தம்பதிகளின் எண்ணிக்கை இன்று அதிகரிச்சுக்கிட்டே இருப்பதைப் பார்க்கிறது எனக்குக் கவலையாதான் இருக்கு. என் வாழ்க்கை அனுபவத்தில் சொல்றேன்.

கருத்து வேறுபாடு உள்ள தம்பதிகள் நல்ல நபர்களின் ஆலோசனையைப் பெறுங்க. அதிகபட்ச பொறுமையோடு, இருவரும் மனம்விட்டுப் பேசுங்க; ஒன்றுசேர்ந்து வாழ முயற்சிசெய்யுங்க. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நலனை நினைச்சுப்பாருங்க. பிரிவு மட்டுமே தீர்வுங்கிற கடைசிக் கட்டத்தில் மட்டுமே, விவாக ரத்து முடிவுக்கு வாங்க.