விபத்தில் சிக்கிய இலங்கையர்கள்! நடந்த விபரீதம் என்ன?

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அது தொடர்பான மேலதிக தகவல்களை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் Canberra பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இலங்கை உணவு சமைக்க முயற்சித்த 4 சமையல் கலைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வு ஒன்றிற்காக சமைக்க ஆயத்தமாகிய போது ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு காரணமாக சமையல் கலைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 4 பேரும் Canberra வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தீக் காயங்களுக்கு உள்ளான சமையல் கலைஞர்களின் உடலில் 40 வீதமான பகுதி எரிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

LPG எரிவாயு மாற்றும் போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இலங்கையின் கலாச்சாரம் மற்றும் உணவினை அவுஸ்திரேலியாவில் பகிர வேண்டும் என்பதே காயமடைந்த சமையல் கலைஞர்களின் நோக்கம் என Homegrown Me என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஜோர்ஜினா பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜினா மற்றும் காயமடைந்த இலங்கை சமையல் கலைஞர்கள் சில மாதங்களுக்கு முன்னரே தங்கள் வர்த்தகத்தை அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்து நடத்தி சென்றுள்ளனர்.

எனினும் எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையினால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜோர்ஜினா தெரிவித்துள்ளார்.

இலாப நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட சமையலறை அல்ல இது அகதிகளை ஊக்கப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் குறித்த சமையலறையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு தாம் செயற்படுவதாக Canberra பகுதி நகர தலைவர் Keith Colls குறிப்பிட்டுள்ளார்.