அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பழம்பெரும் நடிகர்–நடிகைகள் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன. மறைந்த ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கை படமாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் டோனி, நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா, இந்தி நடிகர் சஞ்சய்தத் ஆகியோர் வாழ்க்கை படங்களாகி வந்துள்ளன. இப்போது மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் 4 இயக்குனர்கள் ஈடுபட்டு உள்ளனர். பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் டைரக்டு செய்யும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.
பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார். இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்ய பரத்வாஜ் தயாரிக்கிறார். படத்துக்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று பெயர் வைத்துள்ளனர். இளையராஜாவிடம் இசையமைக்க பேசி வருகிறார்கள். ஏ.எல். விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார்.
இப்போது லிங்குசாமியும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார். இந்த படத்தை ஜெயானந்த் தயாரிக்கிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அவரிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அறம் படத்தில் நயன்தாரா கலெக்டராக கம்பீரமாக வந்து ரசிகர்களை கவர்ந்தார். சசிகலா வேடத்துக்கும் நடிகை தேர்வு நடக்கிறது.