மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதுடன் மழை பெய்கின்றபோதும் இவ் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழை வாயில் பகுதியில் ச.தொ.ச விற்பனை நிலையம் ஒன்று அமைக்கும் நோக்குடன் அதற்கான கட்டுமானப்பணி வேலைகள் நடைபெற்ற வேளையில் அங்கு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இவ் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இன்று வரை வெள்ளிக்கிழமை வரை 95 வது நாட்களாக இவ் மனித எச்சங்கள் நோக்கிய அகழ்வுப் பணி நடைபெற்று வருகின்றது.
இது வரைக்கும் 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டதில் 191 எலும்புக்கூடுகள் குழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு இவைகள் பாதுகாப்பான முறையில் தொடர்ந்து மன்னார் நீதிமன்றில் வைக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச தலைமையில் கொண்ட குழுவினர் இவ் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal