சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு முதல் வீரரை அனுப்ப பாகிஸ்தான் திட்டம்!

பாகிஸ்தான் நாட்டில் இருந்து முதன்முதலாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் சீனாவின் உதவியுடன் 2022-ல் நிறைவேற்றப்படும் என அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து முதல் நபரை விண்வெளிக்கு அனுப்ப சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட 2 செயற்கைகோள்களை சீனாவின் ராக்கெட்டுகளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. 2022-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து முதல் வீரரை விண்வெளிக்கு அனுப்ப சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான ஒப்புதல் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெறப்பட்டதாக அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து ஆயுதங்களை வாங்கும் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வரும் நிலையில், நவம்பர் 3-ம் திகதி பிரதமராக சீனாவுக்கான தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.