நுட்பமான கொலை திட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்திய காதலி!

பத்திரிகையாளர் படுகொலை அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத்தால் பாதிக்கப்படுவோர் ஆயுதத்தை கையில் எடுக்கும் போது அங்கு மரணிக்கப்படுவது பத்திரிகை சுதந்திரமும், ஒரு குடும்பத்தின் எதிர்காலமும்.அப்படிப்பட்டது தான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி, 59, படுகொலையும். ஆனால் நேரடியாக மன்னரும், இளவரசரும் சுட்டிக்காட்டப்படுவதால் உலகின் பார்வை முழுதும் அந்த சம்பவத்தில் பதிந்துள்ளது.கொலை சம்பவம் ஹாலிவுட் படங்களில் வரும் கதையைப்போன்று திட்டமிட்ட படுகொலை என்கின்றன, துருக்கி நாளிதழ்கள். இந்த பிரச்னையில் நுாலிழையில் துருக்கி தப்பியுள்ளது. இல்லையேல் அவர்கள்தான் சிக்கலில் மாட்டியிருப்பார்கள்.

அரசருடன் நட்பு

ஜமாலின் துவக்க கால வாழ்க்கை சவுதி அரசருடன் இணைந்த நிலையில் இருந்துள்ளது. சவுதியில் பல்வேறு மாற்றங்களுக்கு ஜமாலின் ஆலோசனைகளும் காரணமாக இருந்துள்ளன. மேற்கத்திய நாடுகளுடனான சவுதியின் சுமூக தொடர்புக்கு ஜமாலும் உதவியாக இருந்துஉள்ளார்.இளவரசராக முகம்மது பின் சல்மான் பதவியேற்றபின் ஜமால்–சவுதி இடையிலான நட்பில் விரிசல் ஏற்படத்துவங்கியது. ஜமாலின் எழுத்திலும் வீரியம் கூடியது. அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட துவங்கினார். அடுத்தடுத்து மிரட்டல்கள், தாக்குதல்கள் நடந்ததால் ஜமால் சவுதியில் இருந்து வாஷிங்டனுக்கு இடம் மாறினார். அங்கு வாஷிங்டன் போஸ்ட் இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் சவுதியில் நிலவும் அடக்குமுறைகளை வெளிக்காட்டின. அடுத்தடுத்து வெளியான கட்டுரைகளால் சவுதி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதே சமயம் அசைக்க முடியாத சக்தியாக ஜமால் வளர்ந்தார். அவருக்கு மேற்கத்திய லாபி முழு ஆதரவு அளித்தது.

நுட்பமாக திட்டம்

இதையடுத்து ஜமாலின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க சவுதி திட்டமிட்டது. இதற்காக மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்டது. முதலில் வாஷிங்டன்னிலேயே ஜமாலை முடித்துவிடலாம் என எண்ணினர். ஆனால் அமெரிக்காவில் சம்பவம் நடந்தால் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். செனட், காங்கிரஸ், விசாரணை அமைப்புகள் என அனைத்தையும் சமாளிக்க வேண்டும். எனவே அந்த திட்டம் கைவிடப்பட்டது.ஜமால் வெளிநாடு செல்லும் போது அங்கு வைத்து தீர்த்துவிடலாம் என நினைத்துள்ளனர்.அதற்கேற்ற வாய்ப்பு தானாக அமைந்தது. தனது புதிய காதலி ஹாடிஸ் சென்கிஸ்-ஐ திருமணம் செய்ய ஜமால் திட்டமிட்டார். இதற்கான சான்றிதழ்களை கோரி சவுதி துாதரகத்தில் விண்ணப்பித்தார். அந்த சான்றிதழ்களை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள துணை துாதரகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு சவுதி தெரிவித்தது.

தப்பிய துருக்கி

துருக்கியில் பெரிய அளவில் பாதுகாப்பு அம்சங்கள் கிடையாது. எனவே கொலை செய்வதும், உடலை அப்புறப்படுத்துவதும் சுலபம். அதே சமயம் துருக்கி வந்த சவுதி பிரஜை காணாமல் போனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு துருக்கிக்கு வந்து சேரும்.இதன் மூலம் துருக்கிக்கு பெரும் சிக்கல் ஏற்படும். சந்தேக வளையத்தில் இருந்து சவுதி வெளியேறி வேடிக்கை பார்க்கும். துருக்கி மீது உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்கும். இதுதான் சவுதியின் திட்டம்.ஜமாலை கொலை செய்ய சவுதி பாதுகாப்பு அதிகாரி மகேர் அப்துல்சிஸ் முட்ராப் தலைமையில் 15 பேர் முன்கூட்டியே இஸ்தான்புல் அனுப்பப்பட்டனர்.

காதலியால் திருப்பம்

மிகவும் நுட்பமாகவும் தெளிவாகவும் உருவாக்கப்பட்ட இந்த திட்டப்படி அனைத்தும் நடந்தன. ஆனால் சவுதியின் கெட்ட நேரம் துணை துாதரகத்திற்கு ஜமால் தனது காதலியுடன் வந்தது தான்.சவுதி திட்டப்படியே ஜமாலும் அக்., 2ல் இஸ்தான்புல் துணை துாதரகத்திற்கு வந்தார். அங்கு வரும் முன் காதலியுடன் விடுதிக்கு சென்றுவிட்டு இருவரும் ஒரே காரில் துணை துாதரகம் வந்தனர். அங்கு தனது ஆப்பிள் போன், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை காதலி ஹாடிசிடம் கொடுத்துவிட்டு ஜமால் மட்டும் தனியாக துணை துாதரகம் சென்றார்.15 நிமிடத்தில் வெளியே வர வேண்டிய ஜமால் ஒரு மணி நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த ஹாடிஸ் துருக்கி போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக துருக்கி போலீசார் விசாரணையை துவங்கினர். துணை துாதரக பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய துவங்கினர்.

போலி நபர்

இந்த தகவல் துணை துாதரகத்திற்கும் சென்றது. ஆனால் அதற்குள் ஜமால் கொலை முடிந்துவிட்டது. அப்போது துருக்கி விசாரிக்க துவங்கிய தகவல் கிடைத்தது.உடன், மற்றொரு திட்டத்தை அதிகாரிகள் துவங்கினர். துணை துாதரகத்தில் இருந்து ஜமால் வெளியேறுவது போன்று ஒரு செட்டப் செய்தனர். ஜமாலின் உடைகளை ஒருவருக்கு அணிவித்து அவசரம்அவசரமாக வெளியேற்றினர். அவரை ஒரு காரில் ஏற்றி அனுப்பினர்.அதாவது ஜமாலை துணை துாதரகத்தில் இருந்து தீவிரவாதிகள் கடத்திச்சென்றுவிட்டனர், என நம்ப வைக்க திட்டம். ஆனால் அதற்குள் துருக்கியின் விசாரணை தீவிரமடைந்துவிட்டது.ஜமால் திரும்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளை பார்த்த ஹாடிஸ், இது ஜமால் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஒப்புதல்

அடுத்தடுத்து நெருக்கடிகள் அதிகரித்தன. இரு வார தொடர் விசாரணைக்கு பிறகு, துணை துாதரத்தில் வைத்து ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டார் என துருக்கி அதிகார பூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில் வேறு வழியின்றி ஜமால் கொலையை சவுதி ஒப்புக்கொண்டது. துணை துாதரகத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் ஜமால் கொலை செய்யப்பட்டதாக கூறியது.ஆனால் அதன்பின் அடுத்து சிக்கல் துவங்கியது. கொலை செய்யப்பட்டார் என்றால் அவரது உடல் எங்கே என உலக நாடுகள் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளிக்க முடியாமல் சவுதி தவித்து வருகிறது.

கிணற்றில் உடல் பாகங்கள் கண்டெடுப்புகசோகியின் உடல் பாகங்கள் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை துாதரக தோட்ட கிணற்றில் கிடைத்துள்ளதாக பிரிட்டன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.இதனிடையே கசோகியின் மகன் சலாஹை ரியாத்திற்கு வரவழைத்து மன்னரும், இளவரசரும் ஆறுதல் கூறினர். சவுதிக்குள் நுழைய சலாஹிற்கு இதுவரை தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாயை அடைக்க நிதி?

ஜமால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கசிந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அவசரம் அவசரமாக ரியாத் சென்றார். அங்கு சவுதி மன்னர், இளவரசரை சந்தித்துவிட்டு திரும்பினார். அதே நாளில் சிரியா போருக்கு நிதியுதவி அளிப்பதாக கூறி 800 கோடி டாலர் நிதியை அமெரிக்காவிற்கு சவுதி அளித்தது. ஜமால் படுகொலையை கண்டுகொள்ளாமல் இருக்கவே இந்த நிதி அளிக்கப்பட்டதாக மேற்கத்திய பத்திரிகைகள் கடுமையாக சாடி வருகின்றன. இது டிரம்ப் அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

8 நிமிடங்கள் நீடித்த கொலை

துருக்கி அதிபர் எர்டோகனின் ஆலோசகர் யாசின் அக்டாய் கூறியிருப்பது: இஸ்தான்புல் துணை துாதரகத்தில் துணை துாதர் முன்னிலையில் 8 நிமிடங்கள் துடிதுடிக்கவைத்து ஜமால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை 15 துண்டுகளாக்கி வெளியே கொண்டு சென்றுள்ளனர். இதுவரை உடல் கிடைக்கவில்லை. தெளிவாக திட்டமிட்டு கொலையை நிறைவேற்றியுள்ளனர். இதில் எங்களை சிக்கவைக்கவே சவுதி திட்டமிட்டுஉள்ளது.

தப்பிய துருக்கி

சவுதியின் திட்டம் சரியாக நிறைவேறியிருந்தால் துருக்கி பாதிப்பை சந்தித்திருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக ஜமால் தனது காதலிஹாடிஸுடன் வந்ததால் சவுதியின் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டது. உள்ளே சென்றவர் வெளியே வர தாமதமானதும் ஹாடிஸ் உடனடியாக துருக்கி காவல் துறை தொடர்பு கொண்டதால்தான் துருக்கியும் தப்பியது.

அனுமதிக்க மறுப்பு

சம்பவம் நடந்த இஸ்தான்புல் சவுதி துணை துாதரகத்தில் துருக்கி போலீசார் ஆய்வு செய்தனர். துாதரகம், ஊழியர் குடியிருப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். அங்குள்ள பூங்கா மற்றும் பூங்காவில் உள்ள கிணறு பகுதிகளை மட்டும் ஆய்வு செய்ய துாதரக அதிகாரிகள் மறுத்தனர். பின்னர் சிறப்பு அனுமதி பெற்று ஆய்வு நடந்தது.