சுசி கணேசனால் நானும் சங்கடங்களை சந்தித்தேன் : அமலாபால்

இயக்குநர் சுசி கணேசனால் தானும் சில தர்ம சங்கடங்களை சந்தித்தேன் என நடிகை அமலாபால் கூறியுள்ளார். மீ டூ விவகாரத்தால் தினம் ஒரு திரைப்பிரபலம் சிக்கி வருகின்றனர். வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்தார் பாடகி சின்மயி. அவர் மீது பல பெண்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்

இந்நிலையில், பெண் இயக்குநர் லீனா மணிமேகலை, தான் தொகுப்பாளினியாக இருந்தபோது, இயக்குநர் சுசி கணேசனால் காரில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குற்றம் சாட்டினார். இதை, சுசி கணேசன் மறுத்ததோடு, அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இதனிடையே, நடிகை அமலாபால், லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு, தானும் சுசி கணேசனால் பாதிக்கப்பட்டேன் என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது :

லீனா மணிமேகலை, சுசி கணேசன் மீது கூறி குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்திற்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம், துணை இயக்குநராக அந்த பெண் என்ன பாடுப்பட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது.

திருட்டு பயலே 2 படத்தில் நான் கதாநாயகியாக நடித்திருந்தாலும், சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை… என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுப்பட்டு இருப்பார் என்பதை அறிகிறேன்.

அந்த கொடுமையை சமூக வலைதளங்களில் அவர் சொன்னதை பாராட்டுகிறேன். இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும் பெண்களை ஒரு எளிய இரையாக்கி விடுகிறது. அனைத்து துறைகளிலும் இந்த கொடுமை நடக்கிறது.

தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றி காப்பாற்றும் ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்துவது துரதிர்ஷ்டமானது. இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மிக துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது. ஆன்மிக துறையிலும், கலை துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவர துவங்கி உள்ளன.

இதேப்போன்று மற்ற துறைகளிலும் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்ற துறைகளில் இருந்தும் மீ டூ குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.

அரசாங்கமும், நீதி துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு முன்னிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல்ப்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும் இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.