கோவையில், எல்.கே.ஜி படிக்கும் சிறுமி, சக பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயற்கை பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.கோவையில், எல்.கே.ஜி படிக்கும் சிறுமி, சக பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயற்கை பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
கோவையில் இயங்கி வரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருப்பவர் சுரேஷ். இவருடைய மகள் சான்வி தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இந்த நிலையில், சான்வியின் பிறந்தநாளை இயற்கை முறையில் கொண்டாடும் விதமாக, சுரேஷின் வீட்டில் செய்த நிலக்கடலை உருண்டை, ஒரு துணிப்பை மற்றும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கடிதம் ஒன்றை, சான்வியின் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இது அந்தப் பள்ளியில் மட்டுமல்லாமல், மற்றவர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சான்வியின் தந்தை சுரேஷ், “நான் எந்தப் பணியைச் செய்தாலும் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் வகையில்தான் செய்வேன். தற்போதைய சூழ்நிலைக்கு பிளாஸ்டிக்தான் இயற்கைக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, இதில் 50 சதவிகிதம் கேரி பேக்குகளாகதான் இருக்கின்றன.
முன்பெல்லாம் எங்கு சென்றாலும் துணிப்பைதான் பயன்படுத்தி வந்தோம். ஆனால், தற்போது அது கௌரவ குறைச்சலாகப் பார்க்கப்படுகிறது. எனவே, பிளாஸ்டிக்கை தவிர்ப்பதற்கும், துணிப்பைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தான் இப்படிக் கொண்டாடினோம். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலரும், இயற்கையை முறையைப் பின்பற்றுவதாக கூறியுள்ளனர்” என்றார்.