ஊடகத் துறையில் இயங்கிக்கொண்டிருப்பதில் மனநிறைவு, பெருமை என்பதையெல்லாம் தாண்டி ஒரு கர்வம் கொண்டவன் நான். யாரையும் கேள்வி கேட்க முடிகிற வாய்ப்பால் வளர்ந்த கர்வம் அல்ல, சமுதாய மாற்றத்தில் ஒரு மையமான பாத்திரம் வகிக்கிற ஊடகத்தில் ஒரு சிறு புள்ளியாகவேனும் இருக்கிறோம் என்ற உணர்வால் ஏற்பட்ட கர்வம் அது. அந்தக் கர்வம் தகர்ந்து கூசிப்போய் நிற்கிற தருணங்களும் ஏற்படுவதுண்டு. ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்னையில் தென்னிந்திய திரைப்பட பெண்கள் சங்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அத்தகைய தருணங்களில் ஒன்று.
அறம் துறந்த சுதந்திரம்
ஊடகச் சுதந்திரமும் ஊடக அறமும் பிரித்துப் பார்க்க முடியாதவை. யாரை நோக்கிக் கேள்வி கேட்கிறோமோ, அவருக்குப் பதில் சொல்வதற்கான உரிமை முழுமையாக இருக்கிறது. அந்தப் பதிலை முழுமையாகப் பெற்றுக்கொண்டு, அதை அவரவர் கோணத்தில் செய்தியாக்கலாம், அந்தப் பதிலில் நேர்மையில்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அவருடைய பதிலைக் காதுகொடுத்துக் கேட்க மறுப்பது நம் கேள்வியை அவமதிப்பதேயாகும்.
மேடையில் இருப்பவர்கள் ஏதோ பதில் சொல்ல முயல்கிறார்கள், வார்த்தைகளை அவர்கள் தொடர்வதற்குள் அடுத்த கேள்வி வீசப்படுகிறது. அதற்கு விளக்கம் தரத் தொடங்குகிறார்கள். உடனே இன்னொரு கேள்வி வீசப்படுகிறது. தாங்கள் இந்த இயக்கத்திற்கு ஆதரவளிப்பது ஏன் என்று அமைப்பாளர்கள் ஓர் அறிக்கையை வாசிக்கிறார்கள்; இதையெல்லாம் கேட்பதற்கு நாங்கள் வரவில்லை என்று கூறி வாசிக்க விடாமல் தடுக்கப்படுகிறது. அவர்கள் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததே அந்த அறிக்கையை வாசித்து வெளியிடுவதற்காகத்தானே? அதை முடித்த பிறகு அது தொடர்பான கேள்விகளைத் தொடங்கி பின்னர், நாம் கேட்க நினைக்கிற கேள்விகளைக் கேட்பதுதானே செய்தியாளர் நெறியாக இருக்க முடியும்?
ஊடகத்தினரின் ஆணாதிக்க மனப்பான்மை
சுற்றிச் சுற்றி என்ன கேள்விகள் வருகின்றன? சமூக ஊடகங்களில் வருகிற, சில அரசியல் தலைவர்கள் வாயிலிருந்து வருகிற, குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து வருகிற கேள்விகளே அங்கேயும் கேட்கப்பட்டன. இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு சொல்வது ஏன்? உண்மையிலேயே குற்றம் நடந்திருந்தால் காவல் துறையில் புகார் செய்ய வேண்டியதுதானே? வழக்கு தொடுத்திருக்கலாமே? குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன? புகழேணியில் இருப்பவர்களுக்குக் களங்கம் கற்பிக்கிற சூழ்ச்சிதானே? விளம்பரம் தேடுகிற உத்திதானே?
இந்தக் கேள்விகள் அனைத்திலும் நியாயம் இருக்கலாம். ஆனால், யாரையுமே முழுமையாகப் பேசவிடாமல் குறுக்கிட்டுக்கொண்டே இருந்ததில் கொஞ்சமும் நியாயமில்லை. அப்படிக் குறுக்கிட்டதில் வெளிப்பட்டது ஊடகவியலாளர் என்ற அடையாளமல்ல, பெண்கள் என்பதால் எப்படி வேண்டுமானாலும் குறுக்கிடலாம் என்ற ஆணாதிக்க மனநிலைதான். “யேய்… வாயை மூடு, நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று மிரட்டி உளவியலாக ஒடுக்குகிற போலீஸ் மனப்பான்மையும் இதிலே இருக்கிறது. இத்தகைய ஒரு குற்றத்தால் தாக்கப்பட்டவரால் உடனடியாகக் கோவையாகப் பதிலளிக்க இயலாது, சில பல ஆண்டுகள் கடந்த பின், மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்ததன் விளைவாக நிதானத்துடன் பதிலளிக்க இயலும் என்பது உளவியல் பாடம்.
“மீ டூ இயக்கம் வழக்குத் தொடுக்கிற அமைப்பு அல்ல, சாதாரணப் பெண்கள் துணிந்து முன்வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்கிற இயக்கம்தான் அது” என்று சங்கத்தின் சார்பில் நளினி ராமகிருஷ்ணன் சொன்னார். அதைச் செய்தியாளர்களில் ஒரு பகுதியினர் காதில் வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை வந்தபோது, அவருடைய குற்றச்சாட்டைச் சுற்றியே மேற்படி கேள்விகளோடு வலம் வந்தார்கள். அவர், அந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கமளித்துவிட்டதைக் கூறி, இந்தச் சந்திப்பின் நோக்கம் வேறு என்று அவர் அளித்த பதிலை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை, இங்கே இப்போதே “ஆதாரம் என்ன? ஏன் இப்போது சொல்கிறீர்கள்?” என்ற கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள்.
பாடகர் சின்மயி எழுந்து நின்று கண்கலங்கிக் கையெடுத்துக் கும்பிட்டு ஏதோ சொல்ல அனுமதி கேட்கிறார். அந்த அனுமதியும் மறுக்கப்படுகிறது, மறுபடி என்ன ஆதாரம், ஏன் இத்தனை ஆண்டுகள் என்ற கேள்விகளே வீசப்படுகின்றன. நடிப்புக் கலைஞர் ஸ்ரீரஞ்சனி, தனது ‘மீ டூ’ வெளிப்பாட்டைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு ஆண் கலைஞர் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் கோரியதைக் குறிப்பிடுகிறார், அப்படிப்பட்ட ஆக்கபூர்வமான நிகழ்ச்சி பற்றி வெளியே தெரியவிடக் கூடாது என்று முடிவு செய்ததுபோல அவரையும் தொடர்ந்து பேசவிடாமல் தடுக்கிறார்கள்.
ஊடகவியலாளர்கள் பல கோணங்களிலும் கேள்விகளை எழுப்பத்தான் வேண்டும், அழைத்தவர்கள் சொல்வதை அப்படியே குறிப்பெடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை. ஆனால், ஒரே மாதிரியான கேள்விக்குத்தான் பதில் சொல்ல வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிற கட்டப் பஞ்சாயத்தாரர்களாக மாறிவிடக் கூடாது.
வெட்கப்படவைத்த தருணம்
பத்திரிகையாளர் கவின் மலர் இந்த நிகழ்ச்சி பற்றி முகநூலில் பதிவிட்டிருக்கிறார். முன்பு வெளியான ‘விதி’ என்ற திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சியில், பாலியல் புகார் கூறிய பெண்ணைக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கிற வழக்குரைஞர் ஜெய்சங்கர், குற்றம் எப்படி நடந்தது, எதிரி எங்கே தொட்டான், எப்படித் தொட்டான் என்றெல்லாம் அந்தப் பெண்ணைக் கூனிக்குறுகி நிற்க வைக்கிற கேள்விகளாகக் கேட்பார். அதுபோல் இருந்தது இந்தச் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி என்று கூறும் கவின் மலர், “ஊடகத் துறையில் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஒரு சமூகச் செயற்பாட்டாளர், “பிரஸ் மீட் நிகழ்ச்சியை ஒரு பிரபலமான ஆண் நடத்தியிருந்தால் இப்படி நடந்துகொண்டிருந்திருப்பார்களா?” என்று நொந்துபோய்க் கேட்டார். அமைச்சர்களோ, இதர அரசியல் தலைவர்களோ அறிக்கை வாசிக்கிறபோது, “இதைக் கேட்பதற்காக நாங்கள் வரவில்லை” என்று சொல்லியிருக்க முடியுமா?
மறுபடியும் தெளிவுபடுத்திவிடலாம் – திரைப்படப் பெண்கள் சங்கத்தினரின் அறிக்கையை தங்கள் கண்ணோட்டப்படி வரவேற்றோ, விமர்சித்தோ செய்தியாக்குவதற்கு ஊடகவியலாளருக்கு முழு உரிமை இருக்கிறது. வரவேற்கிறோமா, விமர்சிக்கிறோமா என்பது அவரவர் கொள்கை நிலைப்பாட்டைப் பொறுத்தது. தனிப்பட்ட முறையில் ஒரு செய்தியாளருக்கு ஒரு கண்ணோட்டம் இருந்தால்கூட, அவர் பணியாற்றுகிற ஊடக நிறுவனத்தின் கண்ணோட்டத்திற்கு உட்பட்டே செய்தியாக்க முடியும் என்பது வேறு விவகாரம். ஆனால், பேட்டியளிப்பவர்கள் என்ன பேச வேண்டும் என்று தீர்மானிப்பவர்களாக ஊடகவியலாளர்கள் மாறுவதில் என்ன நெறி இருக்கிறது?
கடமை தவறும் ஊடகங்கள்
எனக்குள் ஏற்படும் இந்த ஊடக கர்வ பங்க உணர்வு, செய்தியாளர்கள் சில பேர் இப்படி நடந்துகொண்டார்கள் என்பதால் மட்டுமல்ல, இது ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகப் பரிணமிப்பதற்கு உதவுகிற முயற்சிகளைப் பெருவாரியான பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வலைதள ஏடுகளிலும் காண முடியவில்லையே என்ற ஆதங்கத்தாலும்தான்.
திரைப்படத் துறை மட்டுமல்லாமல், அரசியல் அரங்கம், ஆன்மிக மடம், பல்கலைக்கழகம், பள்ளிக்கூடம், தொழிற்கூடம், அரசு அலுவலகம், ஊடக நிறுவன வளாகம் என எங்கும் களையாகப் புகுந்திருக்கிற பாலியல் அத்துமீறல்கள் பற்றிய விரிவான, ஊக்கமளிக்கிற விவாதங்களுக்கான வாய்ப்பு இப்போது துளிர்விட்டிருக்கிறது. அந்தத் துளிரில் முளையிலேயே அமிலம் ஊற்றுவது, குற்றம்சாட்டப்படுகிறவர்களுக்குச் சாதகமாக, குற்றம்சாட்டுகிறவர்களைப் பின்வாங்க வைக்கிற கைங்கரியம்தான்.
செய்தியாளர் சந்திப்பு நடந்ததற்கு மறுநாள் சென்னையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் நடத்திய பொது விசாரணையில் பங்கேற்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, முதல் முறையாக இப்படியொரு முன்முயற்சி தொடங்குகிறபோது, புகாரை ஆராய வேண்டுமேயல்லாமல் ஆதாரம் கேட்டுக்கொண்டிருப்பது முறையல்ல என்றார். இப்படிப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரங்கள் தாக்கல் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதற்காக யாரும் எப்போதும் தங்களுக்கு நேர்ந்தது பற்றிப் பேசக் கூடாதா? குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்குத் தொடர எந்தத் தடையும் இல்லை என்பதையும் மறந்துவிடலாகாது.
குற்றச்சாட்டு உண்மையல்ல என்றால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதற்கான நீதித் தீர்ப்பைக் கோர முடியும். அது, தற்காலிகக் குற்றச்சாட்டுக் களங்கத்திலிருந்து கம்பீரமாக விடுபடச் செய்து அவர்களுக்குப் பெருமை சேர்க்கும். குற்றச்சாட்டு உண்மையெனில், அதை ஒப்புக்கொள்வதும், அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோருவதும்தான் மாண்பு. அது அவர்களுக்கு இரட்டிப்புப் பெருமை சேர்க்கும். இன்றைய நிலையில் யாருடைய குற்றச்சாட்டு உண்மையானது, யாருடைய மறுப்பு நம்பகமானது என்பதை இனிவரும் நிகழ்ச்சிப் போக்குகள்தான் தீர்மானிக்கும். அதற்குள்ளாக இதில் சாதியையும் இனத்தையும் புகுத்துவது ஒருபோதும் உதவாது, யாருக்கும் உதவாது. பெண்களைப் பாலியல் நுகர்பொருளாக வைத்திருப்பதில் எந்தச் சாதியும் இனமும் சளைத்ததில்லை.
பாதுகாப்பற்ற பல சமூக வேலிகள், “நீ என்ன யோக்கியமா?” என்ற தரத்திலான கணைகள் ஆகியவற்றைச் சமாளித்துத்தான் இந்த இயக்கம் பரவ வேண்டியிருக்கிறது. பெண்களேகூட இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களே என்று சிலர் கேட்கிறார்கள். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடைச் சட்டம் போன்றவை வந்தபோதும்கூட பெண்களை முன்னிறுத்தி எதிர்ப்புகள் கிளப்பப்பட்டதுண்டு. இந்து பெண்களுக்கான சொத்துரிமைக்காக அன்று சட்ட அமைச்சர் அம்பேத்கர் கொண்டுவந்த சட்ட முன்வரைவுக்குத் தீ வைத்தவர்களில் பெண்களும் இருந்தார்கள். அதற்காக இந்தச் சட்டங்கள் செல்லாதவையாகிவிடுமா?
தடைகளை மீறி வளரும் இயக்கம்
குற்றம்சாட்டுகிற பெண்கள் மீது ஒழுக்கக்கேடு முத்திரைகள் குத்தப்படும், அவர்களுக்கான வாய்ப்புகளும் மறுக்கப்படும் என்ற அபாயங்கள் இருக்கின்றன. ஆகவே, எந்த ஆதாயமும் தராத மீ டூ பதிவுகளால் விளம்பரம் தேடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அர்த்தமிழக்கிறது.
தற்போது வெளியில் வந்திருக்கிற பெண்களாவது பாதுகாப்பான சூழலைப் பெற்றிருக்கிறவர்கள், புகழ் வெளிச்சத்தில் நிற்பவர்கள். ஆனால், புகார்க் குரலை எழுப்பவே இயலாத தலித் பெண்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். தலித் என்பதால் சாதிய ஒடுக்குமுறைக்கும், பெண் என்பதால் பாலியல் வன்முறைக்கும் இரையாக்கப்படுகிறவர்கள் அவர்கள். பழங்குடியினப் பெண்கள் நிலைமை இன்னும் மோசம். உழைக்கும் பெண்கள் பணித்தளங்களில் எதிர்கொள்கிற, வெளியே சொன்னால் வேலை போய்விடும் என்ற அப்பட்டமான அச்சுறுத்தலோடு கூடிய பாலியல் அத்துமீறல் கொடுமைகள் ஏராளம். அலுவலகங்களில் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதி 90 சதவிகித இடங்களில் செயல்படுத்தப்படாததற்குக் காரணம், சட்டம் பற்றிய தகவலறிவு இல்லை என்பதல்ல. அந்த அலட்சியத்தின் அடியில் இருப்பது ஆண் திமிரே. இத்தகைய பெண்கள் சந்திக்கும் அவலங்கள் எப்போதோ நடப்பதல்ல, தினந்தோறும் நடப்பவை. உலகத்தின் கவனத்திற்கே வராமல் கடக்கப்படுபவை.
இன்று, மக்களுக்கு நன்கு அறிமுகமாகியிருக்கிற, முன்னேறிய தளங்களில் இருக்கிற பெண்களிடையேயிருந்து தொடங்கியிருக்கிற இந்த “நானும்கூட சீண்டப்பட்டேன்” என்ற “மீ டூ” இயக்கம், நிச்சயம் எதிர்காலத்தில் இந்தப் புகாரைத் தெரிவிக்கவே தகுதியற்றவர்களாக ஓரங்கட்டப்பட்டிருக்கிற பெண்கள் இனி “நானும்கூடத் துணிந்துவிட்டேன்” என்று உரக்க முழங்கிப் புறப்படுகிற பேரெழுச்சியாகப் பரிணமிக்கட்டும். அந்தப் பேரெழுச்சி, சட்டம் பாயும் அல்லது பெயர் கெட்டுப்போகும் என்ற ஆணின் அச்சத்திலிருந்து அல்லாமல், பாலியல் அத்துமீறல்கள் மானுடப் பண்பல்ல என்ற அறத்திலிருந்து, பாலியல் சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com.)