தசாப்த கால பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலிய பிரதமர்!

பல தசாப்தங்களாக இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக பாதிக்கப்பட்டசிறுவர்களிடம் அவுஸ்திரேலியாவின் சார்பில் பிரதமர் ஸ்கொட் மொறிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.

.பல தசாப்தங்களாக அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளமை ஐந்து வருடங்களாக இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே பிரதமர் தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.

இன்று இறுதியாக நாங்கள் சிறுவர்களின் கதறல்களை ஏற்றுக்கொள்கின்றோம் எதிர்கொள்கின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டு மன உளைச்சலிற்குள்ளனவர்கள் முன்னாள் மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் பணிவுடையவர்களாகயிருக்கவேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தழுதழுத்த குரலில் உரையாற்றிய பிரதமர் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை ஏற்றுக்ககொண்டதுடன் இந்த விடயத்தில் ஸ்தாபனங்களின் தோல்வியை கண்டித்துள்ளார்.

பாதிக்கபட்ட ஒருவர் சமீபத்தில் என்னிடம் தெரிவித்தது போல் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு எதிரிகள் இதனை செய்யவில்லை, அவுஸ்திரேலியர்களே அவுஸ்திரேலியர்களிற்கு இதனை செய்தனர் எங்கள் மத்தியில் உள்ள எதிரிகளே இதனை செய்தனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அப்பாவிகளின் எதிரிகள் என தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் இது ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு தசாப்தமும் இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.