அவுஸ்திரேலியாவில் அகதி மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவிலுள்ள அகதி ஒருவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் காதல் விவகாரத்தினால் இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.

ஈரான் நாட்டைச்சேர்ந்த 42 வயதுடைய நபர் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மனுஸ் தீவைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் மனுஸ்தீவை சேர்ந்தவர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியவரின் அங்க அடையாளங்களை தெரியவில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் நினைவிழந்த நிலையில் Lorengau மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகத்தில் படுகாயமடைந்துள்ள குறித்த அகதிக்கு எக்ஸ்ட்ரே பரி சோதனைகளை நடத்த இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கூரிய பலகை ஒன்றினால் வலது கண்ணுக்கு மேல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து குறிப்பிட்ட ஈரானிய அகதி சம்பவ இடத்திலேயே பல மணிநேரம் காயத்துடன் நினைவிழந்த நிலையில் கிடந்துள்ளார் என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

அவருக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு மனுஸ் தீவில் போதிய வசதிகள் இல்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மனுஸ் தீவு பெண்களை திருமணம் செய்த வெளிநாட்டவர்களை மனுஸ் தீவு மக்கள் மதிக்கவேண்டும் என மனுஸ் வாழ் மக்களிடம் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.