பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்!

தாய் நாட்டின் மானம் காக்க தூக்குக் கயிற்றைத் துணிந்து முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாள்  செற்ரம்பர் 28 ஆம் நாள்.

இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி பிறகு நம் நாட்டை அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை ஏராளமாகக் கொள்ளையடித்துச் சென்றது. அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அடக்குமுறைகளை ஏவியது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் கூறிக் கைது செய்து கடுமையாக சித்ரவதை செய்தது.

எனினும், கைது, சிறை போன்றவற்றை துச்சமாக மதித்து இம்மண்ணிலிருந்து அந்நிய ஆதிக்கத்தைத் துடைத்தெறிய தீரமிக்க போராட்டத்தை நடத்திய போராளிகள் ஏராளம். சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல, அது நம் முன்னோர்களின் ரத்தத்தையும், கண்ணீரையும், சுவாசத்தையும் கலந்து தியாகத்தால் எழுதப்பட்ட சரித்திரம். இப்படிப்பட்ட சரித்திரத்தைப் படைத்தவர்களின் முன்னோடிதான் பகத்சிங்.

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது வயதில் தூக்கிலிடப்பட்டவர். 24 ஆண்டுகளே வாழ்ந்த அந்த மாவீரனின் சரித்திரம் இன்னும் எத்தனை ஆண்டுகளாயினும் பேசப்படும், அவரின் கடைசி 12 மணி நேர சூழ்நிலையை மட்டும் தெரிந்து கொண்டால் கூட போதும் அவரின் நாட்டுப்பற்றும் வீரமும் எத்தகையது என்பது விளங்கும்.

1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் திகதி…..

லாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது. அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.

அனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. அறையில் இருந்து பகத்சிங் வெளியே செல்லும் பாதையின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது.

துாக்கு மேடைக்கு அழைத்துச் செல்வதற்காக பகத்சிங் அடைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்ற போது அவர் ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார்,சிறை அதிகாரி விஷயத்தைச் சொன்னதும் கொஞ்மும் மாறாத தனது முகத்தால் நிமிர்ந்து ஒரு கணம் அதிகாரியைப் பார்த்தவர் அடுத்த கணம் மீண்டும் புத்தக வாசிப்பில் ஆழ்ந்தார்.

இப்போதே புறப்பட வேண்டும் நேரமாகிவிட்டது என்றார் அதிகாரி. இந்த அத்தியாயத்தை மட்டும் படித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி ஒரு சில நிமிடங்களில் படித்து முடித்துவிட்டு அதிகாரியுடன் கம்பீரமாக நடந்து செல்லத்துவங்கினார்.இவருடன் மற்றும் இரு புரட்சியாளர்களான ராஜ்குரு,சுக்தேவ் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது, பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடத் தொடங்கினார்கள்.

அந்த நாளும் கண்டிப்பாக வரும்…

நாம் சுதந்திரம் அடையும் போது,

இந்த மண் நம்முடையதாக இருக்கும்

இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்… என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.

சிறைச்சாலையின் கடிகாரம் மாலை ஆறு மணியை காட்டியதும் கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால்,முகம் மூடப்படவில்லை.

பகத்சிங் உரத்த குரல் எடுத்து நாட்டு விடுதலைக்கான முழக்கமிட்டார்,சிறைச்சாலை எங்கும் எதிரொலித்த அவரது குரலைத் தொரடர்ந்து மற்ற சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் மூன்று பேர் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினர்.

துடிதுடித்த வீரர்களின் உடல்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றில் ஆடி அடங்கியது அடங்காதது அவர்களது சுதந்திர தாகமும் அவர்கள் எழுப்பிய வீரமுழக்கங்களும்தான். 16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த வீரர்களும் முக்கியமான காரணமாக இருப்பார்கள் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

எல்.முருகராஜ்
-murugaraj@dinamalar.in