சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொல்வதற்கான சதி முயற்சியில் ரோ ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் என்ற வதந்தி பரவுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரணமாகயிருக்கலாம் என இந்தியாவின் எகனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி எகனமிக் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி தொடர்பான வதந்திகள் பரவுவதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளே காரணமாகயிருக்கலாம் என எகனமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களிற்கும் இடையில் உள்ள நல்லுறவை குழப்பும் முயற்சியாகவே இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இரு அரசாங்கங்களிற்கும் இடையிலான உறவு எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றது என்பதே மகிந்த ராஜபக்சவின் மீள் வருகையை சாத்தியமாக்கும் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சிறிசேன- ரோ குற்றச்சாட்டு குறித்த வதந்தியை பரப்பியிருக்கலாம் என இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இந்தியாவிற்கு இடையில் நல்லுறவை விரும்பாத சக்திகளிடமிருந்தே இந்த வதந்தி உருவாகியிருக்கலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் இந்திய பிரதமரையும் பாதுகாப்பு வட்டாரங்களை சேர்ந்தவர்களையும் சந்திக்கும்போது இந்த விடயம் பிரதானமாக ஆராயப்படும் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கு சிறிலங்கா பிரதமர் விஜயம் மேற்கொள்ளும்போது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களை சந்திப்பார் என முதலில் திட்டமிடப்பட்டிருக்கவில்லை எனினும் ரோ குறித்த குற்றச்சாட்டுகளிற்கு பின்னர் அவர் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களை சந்திப்பார் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.