‘பேஸ்புக்’கின் வீடியோ கால் கருவிகள்!

‘அமேசான், கூகுள்’ போன்றவை, செயற்கை நுண்ணறிவு கொண்ட, ‘புத்திசாலி ஸ்பீக்கர்’களை அறிமுகப்படுத்தி, சந்தையை கலக்கி வருகின்றன. ஆனால், பேஸ்புக் இப்போது தான், ‘போர்ட்டல், போர்ட்டல் பிளஸ்’ என்ற இரண்டு கருவிகளை களமிறக்குகிறது.

ஆனால், இந்த இரண்டும், ‘வீடியோ காலிங்’ வசதியை மேம்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே, இதை பயன்படுத்த முடியும்.

பேஸ்புக்கின் மெசஞ்சர் வசதியின் விரிவாக்கமாகவே, போர்ட்டல் கருவிகள் இருக்கும். ஒரு கருவி, 10 அங்குல திரையுடனும்; இன்னொன்று, 15 அங்குல திரையுடனும் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் இயங்கும், 12 மெகா பிக்செல், துல்லியமுள்ள வீடியோ கேமராவை, பேஸ்புக், இதில் பொருத்தி இருக்கிறது.

குழுவாக உட்கார்ந்து, ‘வீடியோ கால்’ செய்தால், எல்லாரும் நன்றாகத் தெரியும்படி கேமரா தானே சரி செய்துகொள்கிறது. மறு முனையில் கூட்டமாக பேசும்போது, குறிப்பிட்ட ஒருவரின் முகத்தை திரையில், ‘டச்’ செய்தால், அவர் மட்டும் பெரிதாகத் தெரியும், ‘ஸ்பாட் லைட்’ வசதி, போர்டலில் உண்டு.

பேசுபவர் நடந்துகொண்டே பேசினால், கமரா, அவர் இருக்கும் திசைக்கு திரும்புகிறது. இதுவரை வெறும் மென்பொருட்களை மட்டுமே வெளியிட்டுள்ள பேஸ்புக், போர்ட்டல் மூலமாக கையில் தொட்டுப் பார்க்கும் கருவிகள், சந்தையில் நுழைந்திருக்கின்றன.