10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு `வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ விருதை வென்று சாதித்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ரன்தீப் சிங் என்பவரின் மகனான அர்ஷ்தீப் சிங், தனது 6 வயதாக இருக்கும்போது கடந்த 2012-ம் ஆண்டு வைல்ட் லைஃப் போட்டோகிராபியைத் தொடங்கியிருக்கிறார்.

அவரது தந்தையான ரன்தீப் சிங்கும் போட்டோகிராபர் என்பதால், அவருடன் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இயற்கை அழகைத் தனது கேமராவில் படம் பிடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இரும்புப் பைப்பை வாழ்விடமாகக் கொண்ட ஆந்தைகளை அவர் எடுத்த படம், அவருக்கு மதிப்புமிக்க விருதை வென்று கொடுத்திருக்கிறது. `Pipe owls’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம், இங்கிலாந்தின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் (Natural History Museum) நடத்திய போட்டியில் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர் (Wild Life Photographer of the Year) விருதை வென்றது.

பஞ்சாபின் கபுர்தலா அருகே தன் தந்தையுடன் காரில் பயணித்துக்கொண்டிருந்த அர்ஷ்தீப், இரும்புப் பைப் ஒன்றில் ஆந்தை அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாகக் காரை நிறுத்தச் சொன்ன அவர், கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அந்த ஆந்தையைப் புகைப்படம் எடுக்க ஆயத்தமாகியிருக்கிறார்.

அப்போது மற்றொரு ஆந்தையும் பைப்பில் இருந்து எட்டிப்பார்க்கவே, இரண்டு ஆந்தைகள் அந்த இரும்புப் பைப்பில் இருந்து பார்ப்பது போன்ற அந்தப் படம் இவரது கேமராவுக்குள் சிக்கியிருக்கிறது. விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அர்ஷ்தீப், புகைப்படக் கலைஞராகத் தன்னை ஊக்குவித்த குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே அவர், ஆசிய அளவிலான ஜூனியர் வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர் விருதை வென்றிருக்கிறார். அதேபோல், அவர் எடுத்த பல்வேறு புகைப்படங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அங்கீகாரம் பெற்றிருக்கின்றன.