எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டுகிறீர்களா? என்ற கேள்விக்கு லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார்.
#MeToo மூவ்மென்ட் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா, பத்திரிகை, அரசியல் என பல துறைகளைச் சார்ந்த ஆண்களும் இதில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர். கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாணைத் தொடர்ந்து, இயக்குநர் சுசி கணேசன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, சுசி கணேசன் பாலியல் ரீதியாகத் தன்னைத் துன்புறுத்தியாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய லீனா மணிமேகலையிடம், ‘எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டுகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த லீனா மணிமேகலை, “நிச்சயமாக இல்லை, என்னுடைய மிகச்சிறந்த நண்பர்கள் ஆண்கள்தான். நான் பல காதல்களைக் கடந்து வந்திருக்கிறேன். நான் காதலித்த ஆண்கள் எல்லோருமே மிகச் சிறந்தவர்கள். ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்ற விஷயத்தை நான் சொல்ல வரவில்லை.
இதுவரைக்கும் 12க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள், 2 முழுநீளப் படங்களை இயக்கியுள்ளேன். பல ஆண்களுடன் சேர்ந்து பணிபுரிந்திருக்கிறேன். மிக அழகான ஆண்களைக் கடந்து வந்துள்ளேன். எனவே, ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள் என நான் எங்குமே சொன்னது கிடையாது.
ஆனால், ஆண் என்ற அதிகாரத்தைக் காட்டாமல், சக உயிராக என்னையும் மதித்த ஆண்களுடன் தான் என்னால் நட்பாக இருக்க முடிந்திருக்கிறது. என்னுடைய படப்பிடிப்புகளில் 40 பேர் இருந்தால், அதில் 35 பேர் ஆண்களாகத்தான் இருப்பார்கள். இரவெல்லாம் ஷூட்டிங் நடக்கும். அப்படித்தான் நாம் வேலைசெய்து கொண்டிருக்கிறோம். எனவே, எல்லா ஆண்களையும் நான் குற்றம் சாட்டவில்லை” எனத் தெரிவித்தார்.