தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை செய்யாத புதிய அரசாங்கத்தினை அதன் இறுதி கட்டத்திலும் காப்பாற்றுவதனையே முதன்மையாக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஜக்கிய தேசிய கட்சியும் அக்கறையுடன் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்களது இரு பிரதான பிரச்சனைகளான தேசிய இனப் பிரச்சனையையும் , யுத்தத்திற்கு பின்னரான பிரச்சனையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றோடு ஒன்று கலந்து நியாயம் கற்பிப்பது சரியான செயற்பாடு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் யாழிலும் அதன் தலைவர் சம்மந்தன் மட்டகளப்பிலும் இதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக புதிய அரசியல் சாசனம் உருவாக வேண்டுமானால் இந்த அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.
நாம் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களது பிரச்சனைகளில் தேசிய இனப் பிரச்சனை என்ற ஒன்றும், யுத்தத்திற்கு பின்னரான பிரச்சனைகள் என்றும் இரண்டு உள்ளன.
இதில் காணாமல் போனோர் பிரச்சனை, நில விடுவிப்பு, அரசியல் கைதிகளின் பிரச்சனை ஆகியன யுத்ததிற்கு பின்னரான பிரச்சனைகளாகும்.ஆனால் கூட்டமைப்பு தற்போது இவை இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலந்து பேசுவது சரியான உத்தியல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பின், தலைமைகள் இது பற்றி பேசினால் தம்மால் இனப் பிரச்சனைக்கான தீர்வு பற்றி பேச முடியாது என்கிறார்கள். உண்மையில் இப் புதிய அரசாங்கத்துடன் இணங்கி செயற்பட்டதனால் இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன ?
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரியோசனமான தீர்வு காணப்பட்டதா? காணி விடுவிப்பு விடயத்தில் புதிய அரசால் எங்கு எத்தனை ஏக்கர் விடுவிக்கப்பட்டது ? வடக்கில் 60 ஆயிரம் ஏக்கர் கைகயகப்படுத்தப்பட்ட காணிகளில் எத்தனை ஏக்கர் விடுவிக்கப்பட்டது ?. இவ்வாறான நிலையில் ஜ.நா. மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு மேலதிகமாக கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்து அதனூடாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எத்தனையை நடைமுறைப்படுத்த முடிந்தது ?. இந்நிலையில் இவ் அரசாங்கத்தின் இறுதி கால கட்டத்திலும் இவ் அரசை காப்பாற்றவே இக் கூட்டமைப்பு முயல்கின்றது.
மேலும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கம் தொடர்பில் அது அவ்வாறு நடக்காது என்றே சிங்கள தலைவர்கள் கூறுகின்றார்கள். அதேபோன்று சிறிலங்கா சுதந்திரகட்சியும், ஜக்கிய தேசிய கட்சியும் அதனை நிறைவேற்றுவதில் அக்கறையுடன் செயற்படவில்லை. அவர்கள் கால தாமதப்படுத்துவதன் நோக்கமே இது நிறைவேறாது என்பதற்காகவேயாகும். எனவே இந் நேரத்திலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal