கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.
உலகளாவிய எதிர்ப்புக்கு இது வழிவகுத்தது. ஆனாலும், அடுத்த கட்டமாக கடந்த மே மாதம், ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் பரிசீலித்து வருகிறது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்தார்.
மேலும், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு அளித்து வருகிற ஆதரவை மறுபரிசீலனை செய்யவும் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதையும் பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறி உள்ளார்.
ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா ஒரு தரப்பினராக கையெழுத்திடாதபோதும், இப்போது தனது ஆதரவை வாபஸ் பெற்றால் அது அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதரவை இதில் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.