பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான துடுப்பெடுத்தாட்டம்!

அபுதாபி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பகர் சமான், சர்ப்ராஸ் அகமது ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 282 ரன்களை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் பகர் சமான், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் ஹபீஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பகர் சமான் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அவர் தொடர்ந்து இரு ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்தினார். நாதன் லயன் 6 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த பாகிஸ்தான் 57 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

6-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர். 147 ரன்கள் ஜோடி சேர்ந்த நிலையில் பகர் சமான் 94 ரன்னில் அவுட்டானார். அதேபோல், சர்ப்ராஸ் அகமதும் 94 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பாகிஸ்தான் அணி 81 ஓவரில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், மார்னஸ் லபுஷங்கே 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.