பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர்.
அந்த வகையில் 11 நாடாளுமன்றத் தொகுதிகள், பஞ்சாப் மாகாணத்தில் 11 சட்டசபை தொகுதிகள், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் 9 சட்டசபைதொகுதிகள், சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் தலா இரு சட்டசபை தொகுதிகள் என மொத்தம் 24 சட்டசபை தொகுதிகள் என மொத்தம் 35 தொகுதிகள் காலியாகின.
இந்த தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியான நிலையில் நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
வெகுகுறிப்பாக, மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான் ராஜினாமா செய்த இரு தொகுதிகளிலும் ஆளும்கட்சி வேட்பாளர்கள் தற்போது தோல்வியை சந்தித்துள்ளனர்.
அவர் ராஜினாமா செய்த லாகூர் தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) வேட்பாளரும் முன்னாள் ரெயில்வே மந்திரியுமான காவ்ஜா சாட் ரபீக் வெற்றி பெற்றுள்ளார். பன்னு தொகுதியில் முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் வேட்பாளர் ஜாஹித் அக்ரம் துரானி வென்றுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி தற்போது லாகூர் பாராளுமன்ற தொகுதியில் இம்ரான் கட்சி வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
மாகாண சட்டசபைகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தொகுதிகளில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 11 இடங்களிலும், முன்னாள் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி 7 இடங்களிலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.