5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்ய சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.
இதுவரையிலான விசாரணைகளில் இந்த கடத்தல்கள், காணாமல் அகக்ப்பட்டமை தொடர்பில் குறித்த தளபதி பூரணமாக அறிந்திருந்தார் என்பதற்கான பல சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே சி.ஐ.டி. அவரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதனிடையே இந்த கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் கோவை மேலதிக ஆலோசனை பெற சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சி.ஐ.டி. முன்னெடுக்கும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க அத்திணைக்களம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
குறித்த சி.ஐ.டி.யின் விசாரணைக் கோவையில் பிரபல சாட்சிகள் வெளிபடுத்தப்ப்ட்டுள்ளதை அவதானித்துள்ள சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள், அச்சாட்சிகளின் பிரகாரம் எஞ்சியுள்ள விசாரணைகளையும் முன்னெடுத்து நிறைவு செய்ய கடந்தவாரம் சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே கடத்தல், கப்பம் கோரல், சட்ட விரோத தடுத்து வைப்பு மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் மேலும் சிலரைக் கைது செய்ய சி.ஐ.டி. தீர்மானித்துள்ளது. அதற்கான சாட்சிகள் வெளிபடுத்தப்ப்ட்டுள்ள நிலையிலேயே, தற்போது முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை நோக்கி சி.ஐ.டி.யின் பார்வை திரும்பியுள்ளது.
சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவின் ஆலோசனைக்கு அமைய சமூக கொள்ளை விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலமையிலான குழு முன்னெடுக்கும் விசாரணைகளில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் த;லைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.