இலண்டனில் மட்டுமல்;ல கொழும்பில் பல சுற்று இரகசிய பேச்சுவார்த்தைகள் செய்துவருகின்றேன். இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர் அனுமதி இன்றி எத்தகைய நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை.
மேலும் சர்வதேச விசாரணை என்பது நிறைவடைந்துவிட்டது. அதற்கான அறிக்கை வரும்போது என்ன செய்யவேண்டும் அல்லது என்ன செய்யலாம் என்ற நிலைவரும். இருக்கின்ற சட்டங்களின் ஊடாக அவற்றை அணுகமுடியாமல் போகலாம். அதனால் புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டிவரும். அதனாலேதான் உள்ளக விசாரணையை அல்ல உள்ளக பொறிமுறை வேண்டும் என்கின்றேன்.
நான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களுக்கான பொறுப்பானவராக இருக்கின்றேன். உலகத்தமிழர் பேரவையின் தலைவராக சுரேந்திரன் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இரகசிய பேச்சுவார்த்தைகளில் என்ன பேசப்பட்டன என்பது முக்கியமானது. மக்களின் அன்றாட அவசிய தேவைகள் பற்றியும் அவற்றை நிறைவுசெய்வது பற்றியும் எப்படி நிறைவு செய்யலாம் என்பது பற்றியும் அதற்கு வெளிநாட்டு உதவிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் பேசினோம்.
இப்போது சிறிலங்கா அரசிடம் உண்மையாகவே நிதிப்பற்றாக்குறையுடன் இருக்கின்றார்கள். எனவேதான் வேறு மாற்றுவழிகளை யோசித்து அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்.
சம்புர் அனல்மின்நிலையம் அமைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்ட இடத்தில் ஏழு குடும்பங்களே வாழ்ந்துவந்தார்கள். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் வழங்கப்பட்டு அவர்கள் ஏற்கனவே மீளக்குடியேறிவிட்டார்கள். மற்றவர்களின் காணிகள் நிச்சயமாக விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதம் உள்ளது.
எமக்கு இத்தகைய பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஆணையை தமிழ்மக்கள் வழங்கியிருக்கின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது. எம்மால் ஏதாவது உதவிசெய்யமுடிந்தால் அது நல்லது என்றே கருதவேண்டும்.
அதற்கான ஆணை எமக்கு உள்ளதா என்பது முக்கியமல்ல.
மேலும் தாயகத்தில் உள்ள மக்களுக்கே நான் பொறுப்பு சொல்லவேண்டுமே தவிர புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் அவர்களால் நிதிஉதவி செய்யமுடிந்தால் நல்லது என்பதே என் கருத்தாகும் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.